சண்டிக் குதிரைக்கு மேல்நாட்டு பொண்ணு!



களையான முகம், பக்குவமான பேச்சு, சண்டிக்குதிரை மாதிரி விறுவிறு உடல்மொழியென்று தமிழ் சினிமா ஹீரோவுக்கான அத்தனை மங்கள குணங்களோடும் இருக்கிறார் ராஜ்கமல். ‘மேல்நாட்டு மருமகன்’ ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர், ‘வண்ணத்திரை’க்காக நேரம் ஒதுக்கினார்.“ஏற்கனவே ‘சண்டிக்குதிரை’யில் எஸ்டாப்ளிஷ் ஆயிட்டீங்க. அடுத்து ‘மேல்நாட்டு மருமகன்’.

இதுலே என்ன ஸ்பெஷல்?”“பாஸ். உண்மையை சொல்லணும்னா என்னை சினிமா ஹீரோ ஆக்கினதே இந்த படம்தான். முதலில் இதுலே நடிக்கதான் கமிட் ஆனேன். ஆனா, ரிலீஸுலே ‘சண்டிக்குதிரை’ முந்திக்கிச்சி.

வெளிநாட்டுப் பொண்ணு ஒருத்தங்க தமிழ்நாட்டை சுத்திப் பார்க்க வாராங்க. நான்தான் அந்தப் பொண்ணுக்கு கைடு. இந்த சில நாட்களில் எங்க ரெண்டு பேருக்குமான வாழ்க்கைதான் படம். அதுலே காமெடி, காதல்னு வழக்கமான கமர்ஷியல் சமாச்சாரங்களும் கலந்து கலக்கலா வந்திருக்கு.”“சீரியலிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கீங்க...”

“சினிமாவில் நடிக்கணும் என்பதுதான் என்னோட லட்சியமே. வாய்ப்புக்காக கோடம்பாக்கத்தின் சந்து பொந்து அத்தனையும் நடந்து நடந்து செருப்பு தேய்ஞ்சதுதான் மிச்சம். அந்த நேரத்துலே கல்யாணம் வேற ஆயிடிச்சி. வாழ்க்கை வண்டியை ஓட்டுறதுக்காக தற்காலிகமா டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பிச்சேன்.

திடீர்னு சினிமா சான்ஸ் வந்துடிச்சின்னா, சீரியலில் லீட் ரோல் பண்ணுறவன் அப்படியே விட்டுட்டு வந்துட முடியாதில்லையா? அதனாலே கழுவுற மீனில் நழுவுற மீனா சின்ன கேரக்டர்தான் எடுத்துப்பேன். பெரிய ரோல் எடுத்துக்கிட்டா டிவி நடிகர் என்கிற முத்திரை அழுத்தமா விழுந்துடுமோ, அதனாலே பெரிய திரை வாய்ப்பு மிஸ் ஆயிடுமோன்னு அச்சம் வேற.

இப்படி தட்டுத் தடுமாறிக்கிட்டிருந்த காலத்தில்தான் டைரக்டர் சேரன் சார் எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். ‘சினிமாவில் நடிக்கணும்னா, முதல்லே டிவியிலே நடிக்கறதை நிறுத்து’ன் னாரு. அவரோட ஆலோசனையின்படி டிவி சீரியல்களில் தலைகாட்டுறதை முற்றிலுமா தவிர்த்துட்டேன். அதிசயம் மாதிரி ஒரு விஷயம் நடந்தது. இயக்குநர் எம்.எஸ்.எஸ். என்னை சந்திச்சி கதை சொன்னாரு. அதுதான் இந்த ‘மேல்நாட்டு மருமகன்’.

ஆக்சுவலா, விமலோட கால்ஷீட் கிடைக்காததாலே, அவரோட சாடையில் இருக்கிற என்னை ஹீரோவாக்க அவர் இந்த கதையை சொன்னாரு.டிவியில் இருந்து வந்ததுமே டைரக்டா ஹீரோ என்பதை என்னாலே நம்பவே முடியலை. நான் கேரக்டர் ரோல் ஏதாவது பண்ண கூப்பிடுவாங்கன்னுதான் நினைச்சுக்கிட்டிருந்தேன். படப்பிடிப்போட முதல் நாள் என்னை முதல் ஷாட் எடுத்தபிறகுதான் நான்தான் ஹீரோ என்கிற நம்பிக்கையே எனக்கு வந்துச்சி.”

“உங்க ஹீரோயின்?”
“முதல் படத்துலேயே ஃபாரின் ஹீரோயின் பாஸ். அதுதான் ரொம்ப வெட்கப்பட்டுட்டேன். அவங்க பேரு ஆண்ட்ரியன். பிரெஞ்சுக்காரங்க. பாண்டிச்சேரியில் சொந்தக்காரங்களை பார்க்க அடிக்கடி இங்கே வருவாங்க. அப்படியே எங்க படத்துக்கு ஹீரோயின் ஆயிட்டாங்க. எந்த பந்தாவுமில்லாமே எங்களோட பழகினாங்க. சம்பளத்தை தவிர வேறெந்த கூடுதல் வசதியும் கேட்காம, தயாரிப்பாளரோட செல்லப்பிள்ளை ஆயிட்டாங்க.”

“நா.முத்துக்குமார்?”
“நம்பவே முடியலை. ‘மேல்நாட்டு மருமகன்’ படத்துக்கு அவரை பாட்டு கேட்டிருந்தப்போ, அமெரிக்கா போகிற அவசரத்தில் இருந்தார். ‘ரொம்ப அவசரம்னா, வேற யாரு கிட்டேயாவது கேட்டு வாங்கிக்குங்க’ன்னு சொன்னாரு.

ஆனா, எங்க டைரக்டரோ, ‘நீங்கதான் எழுதிக் கொடுக்கணும்’னு அடம் பிடிச்சாரு. ஏர்போர்ட்டுக்கு போகிற வழியில் காரிலேயே 33 நிமிஷத்துலே ஒரு பாட்டை எழுதிக் கொடுத்தார். ‘யாரோ யார் இவளோ, சந்தோஷத்தின் பேர் இவளா’ என்கிற அந்த பாட்டுதான் முத்துக்குமாரின் குரலாக எங்க குழுவினருக்கு ஒலிச்சிக்கிட்டே இருக்கு.”“சினிமாவில் உங்களுக்கு யார் ரோல் மாடல்?”

“பிரகாஷ்ராஜ். ‘கில்லி’யில் விரட்டி விரட்டி வலுக்கட்டாயமா திரிஷாவை கல்யாணம் பண்ணிக்க முயற்சிக்கிற வில்லனா வந்தவர், ‘அபியும் நானும்’ படத்துலே அதே திரிஷாவுக்கு அற்புதமான அப்பாவா நடிச்சிருப்பாரு. அவர் பண்ணியிருக்கிற ரோலெல்லாம் பாருங்க. அவ்வளவு வெரைட்டி.

அவரை மாதிரி வெரைட்டியான ரோல்கள் செய்யணும்னுதான் எனக்கு ஆசை. எனக்கு ரொம்ப வேண்டிய இயக்குநர்களிடம் எல்லாம் வில்லன் ரோல் இருந்தா கொடுங்கன்னு கேட்டுக்கிட்டிருக்கேன். ‘நீ அதுக்கெல்லாம் வேலைக்கு ஆகமாட்டே’ன்னு சொல்லுறாங்க. பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லாவகையான பாத்திரங்களும் என்னால் செய்யமுடியும்னு நம்பறேன்.”“நெக்ஸ்ட்?”

“பேட்டியை முடிக்கிற மூடுக்கு வந்துட்டீங்க. ஒரு சிலருக்கு சினிமா என்பது எளிதான விஷயம். என்னைப் போன்றவர்களுக்கு அது தவம். ஒவ்வொரு படமுமே எங்களுக்கெல்லாம் முதல் படம்தான். என்னை தேடி வர்ற யாரையும் நான் உதாசீனப்படுத்துறதில்லை. இப்போ ‘இன்னும் கொஞ்சம் நேரம்’, ‘235வது தொகுதி’ படங்கள் செஞ்சுக்கிட்டிருக்கேன். வெறும் கமர்ஷியல் ஹீரோவா மட்டுமல்ல, சமூகத்துக்கு உபயோகப்படுகிற கருத்துகளை சொல்லுகிற பாத்திரங்கள் வந்தாலும் உடனே ஒப்புக்குவேன்.”

- சுரேஷ்ராஜா