அட்ரா மச்சான் விசுலுநடிகனால் மோசம் போகும் ரசிகர்கள்!

பவர்ஸ்டார்தான் படத்தில் சூப்பர்ஸ்டார். சிவா, செண்ட்ராயன், அருண்பாலாஜி மூவரும் அவருடைய தீவிர ரசிகர்கள். ஒவ்வொரு முறை பவர்ஸ்டார் படம் வெளிவரும்போதெல்லாம் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து தியேட்டர்களில் திருவிழா நடத்துபவர்கள்.

பவர்ஸ்டாரின் ஒரு படத்தை வாங்கி வினியோகம் செய்து வாழ்க்கையில் செழிக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக அந்த படம் பப்படமாக, பவர்ஸ்டாரிடம் உதவிக்கு செல்கிறார்கள். அவர் இவர்களை ஏறெடுத்தும் பார்க்காததால் ஏமாற்றப்பட்டதாக உணர்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் படம்.

சிவாவின் நடிப்பு சிறப்பு. அவரது நடனத்திலும் கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட் இருக்கிறது. நாயகி நைனா சர்வார் ரசிகர்களின் இளமையை தூண்டுகிறார். மேக்கப் கொஞ்சம் தூக்கல் என்பதைத்தவிர குறையேது மில்லை. பவர்ஸ்டார், செண்ட்ராயன், அருண்பாலாஜி, ராஜ்கபூர், மன்சூரலிகான், சிங்கமுத்து, மதுமிதா என்று குவிக்கப்பட்ட நட்சத்திரப் பட்டாளம் தங்கள் பங்கை சரியாகவே செய்திருக்கிறார்கள்.

ரகுநந்தனின் இசையில் பாடல்கள் பிரமாதம். காசிவிஸ்வநாதனின் ஒளிப்பதிவும் ஓக்கே. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் சூப்பராக விசில் அடித்திருக்கலாம். ஒரு மசாலாப் படத்தில் இளைஞர்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்தி இருப்பதற்காக இயக்குநர் திரைவண்ணனைப் பாராட்டலாம்.