அஜீத் படத்தின் தலைப்பு ‘AK-57’?‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து அல்டிமேட் ஸ்டாருடன் ஹாட்ரிக் அடிக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் சிவா. ‘தொடரி’, ‘முடிசூடா மன்னன்’ படங்களை தற்போது தயாரித்து வரும் சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார்.

வேதாளத்தைத் தொடர்ந்து இதிலும் இசை அனிருத்தான். சிவாவின் கிளாஸ்மேட்டும், ஆஸ்தான ஒளிப்பதிவாளருமான வெற்றி பழனிச்சாமி கேமரா.

இந்தப் படத்தில் அஜீத், ‘ரா’ உளவாளியாக துப்பறிகிறார் என்று பரவலாக பேசிக்கொள்ளப் படுகிறது. எனவே, படத்துக்கு ‘உளவாளி’ என்கிற டைட்டிலை வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ரசிகர்களோ அஜீத்தின் 57வது படமான இதற்கு ‘AK-57’ என்று ‘கெத்’தாக டைட்டில் வைக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

விஜய்யின் வெற்றிப்படமான ‘துப்பாக்கி’ டைட்டில் மாதிரி, இந்த டைட்டில் வைத்தால் கம்பீரமாக இருக்குமென்பது அவர்களது எதிர்பார்ப்பு. ஆனால், ஆங்கிலத்தில் டைட்டில் வைத்தால் வரிவிலக்கு பெறுவதில் பிரச்சினைகள் வருமே என்று தயாரிப்பு தரப்பு யோசிக்கிறதாம்.

இதுபற்றி இயக்குநர் சிவாவிடம் கேட்டால், “தல ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு ரசிகர்களும் விரும்புகிற படமாக இருக்கும். வேறெதுவும் இப்போது கேட்காதீர்கள்” என்கிறார்.“ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் ரசனை மாற்றத்தை கருத்தில் கொண்டு சிறந்த கலைஞர்களை வைத்து தரமான படங்களைத் தயாரித்து வருகிறோம்.

அவ்வகையில் இப்போதைய இளைஞர்களை பெரிதும் கவர்ந்த நடிகரான அஜீத்குமாரை வைத்து படம் தயாரிப்பது எங்கள் நிறுவனத்துக்கு பெருமை சேர்க்கும் விஷயம். அவரோடு இணைந்து பணியாற்றுவதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம்.

இயக்குநர் சிவா சொன்ன கதை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவரது நேர்த்தியான திட்டமிடுதலைப் பார்த்து அனுபவஸ்தர்களான நாங்களே அசந்து போயிருக்கிறோம். முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப் போகிறோம்; பிரும்மாண்டமான இந்த திரைப்படம் தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும் என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியும். தலைப்பு பற்றி மட்டும் கேட்காதீர்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ற டைட்டிலை விரைவில் அறிவிப்போம்” என்கிறார் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்.

- ரா