பாட்டுக்கு ஒரு சங்கம்!



இயக்குனர் எஸ்.எழில் இயக்கத்தில், இசையமைப்பாளர் சுனில் இசையில், ‘அமுதே’ திரைப்படத்தில், 2005ல் அனைத்துப் பாடல்களும் எழுதி, பாடலாசிரியராக  அறிமுகமானபோது தமிழமுதனுக்கொரு எண்ணம் தோன்றியது.

‘ஏன் பாடலாசிரியர்களுக்கென்று ஒரு தொழிற்சங்கம் இல்லை? எல்லாத் துறைக்கும் தனியாக தொழிற்சங்கம் இருக்கிறது. ஏன் நமக்கில்லை? திரைத்துறையிலே பாத்திரம் கழுவும் தொழிலாளர்களுக்கு உட்பட 24 சங்கங்கள் இருக்கின்றன. நமக்கேன் இல்லை?’ என்ற கேள்வி எழுந்தது.

பாடல் எழுத முயற்சி செய்து கொண்டிருந்தபோது இவருடன் பயணிக்கும்  தோழன் பாலமுரளி வர்மனோடு இதைப்பற்றிப் பேசியிருக்கிறார். ‘அவசரப்படாதே,  நாம் இப்பொழுதுதான் அடியெடுத்து வைத்துள்ளோம். உன் பாடல்கள் வெற்றிப்பாடல்களாக அமையும்போது உன்னை எல்லோருக்கும் தெரியும். அப்போது தொடங்கினால் நலமாயிருக்கும்’ என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார் பாலமுரளி.

அதற்குப் பிறகு ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தில் எழுதிய பாடல், ‘களவாணியே களவாணியே....’, ‘கோரிப்பாளையம்’ படத்தில்  எழுதிய ‘அழகுக் காட்டேரி....’, ‘மிளகா’ திரைப்படத்தில் ‘கிறுக்குப்பையா....’ போன்ற பாடல்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிக படங்களுக்குப் பாடல்கள் எழுத ஆரம்பித்தார் தமிழமுதன்.

2012 ஜனவரி 25-ஆம் தேதி மாலை நண்பர் பாலமுரளி வர்மனுடன் பேசி,   சங்கத்திற்கு என்ன பெயர் வைப்பது என்றும், அதன் நோக்கம், குறிக்கோள், என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் முடிவெடுத்து அன்றே தொடங்கிவிட்டார்கள்.ஜனவரி 27ஆம் தேதி மாலை நண்பரும் இசையமைப்பாளருமான ஏ.எஸ். அன்புசெல்வம் ஒலிப்பதிவுக் கூடம் ‘காவ்யாஸ்ரீ’-யில் இவருடன் திரைப்படங்களில் பாடல்கள் எழுதிய நான்கு பாடலாசிரியர்களை வரவழைத்து, பாலமுரளியோடு தொடர்புள்ள பாடலாசிரியர்களையும்  அழைத்து, கூட்டம் நடந்தது.

கலந்துகொண்ட 12 பேரும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தனர். துணைத் தலைவர்களாக கவிஞர் சி. புண்ணியா, கவிஞர் மதுமதி,  துணைச் செயலாளர்களாக கவிஞர் மதுரகவி, கவிஞர் சீர்காழி சிற்பி, ெசயற்குழு உறுப்பினர்களாக கவிஞர் தமிழ்க்குமரன், கவிஞர் கவிக்குமரன், பொருளாளராக கவிஞர் பச்சியப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவராக வேறொருவரை தமிழமுதன் சுட்டிக் காட்டியபோதும், எல்லோரும் சேர்ந்து ‘நீங்கள்தான் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தவே பொறுப்பை ஏற்றுக்கொண்டார். செயலாளர் பதவிக்கு கவிஞர் இளைய கம்பன் பெயரைச் சொல்லியிருக்கிறார் தமிழமுதன்.

2வது கூட்டத்துக்கும், 3வது கூட்டத்துக்கும் கம்பன் கலந்து கொள்ள முடியாத சூழல். பின்னர் கலந்து கொண்ட கூட்டத்தில் செயலாளராக இளைய கம்பன் பொறுப்பேற்றார். சங்கத்தின் நெறியாளராக  பாலமுரளி வர்மன் நியமிக்கப்பட்டார். சங்கத்துக்கு  வழிகாட்டியாக கவிஞர் ஈரோடு தமிழன்பன் இருந்து வருகிறார்.

சங்கம் தொடங்கிய முக்கிய காரணம் குறித்து பேசுகிறார் ‘தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத் தலைவர் தமிழமுதன்: ‘‘பாடல் எழுதிய பாடலாசிரியர்களுக்கு உரிமைத் தொகையைப் பெற்றுத் தருவது முக்கியமான கடமை. புகழ்பெற்ற பாடல் ஆசிரியர்கள் அவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகையைப் பெற்றுக் கொண்டு, இளம் தலைமுறை பாடலாசிரியர்களுக்கு வழிகாட்டாமல் விட்டுவிட்டார்களோ என்ற கவலையில், புதிய பாடலாசிரியர்களுக்கு உரிமையைப் பெற்றுத் தருவதும் அவர்களின் நலனைப் பேணுதலும் எனது நோக்கமாக இருந்தது.

இதுவரை உள்ள உறுப்பினர்களில் 70 பேருக்கு மேல் உரிமை பெறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, IPRS-ல் உறுப்பினராக்கி இதுவரை எழுதிய பாடல்களுக்கான உரிமைத் தொகையைச் சங்கம் பெற்றுத் தந்திருக்கிறது.

அது மட்டுமல்ல, பாடல் எழுதியவர்களின் பெயர், விளம்பரங்களில் போடாமல் இருப்பது, இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர்களை மேடையேற்றி சிறப்புச் செய்யாமல் இருப்பது, ஊதியம் கொடுக்காமல் இருப்பது என அனைத்துச் சிக்கலையும் கையிலெடுத்தோம். சங்கம் தொடங்கிய பிறகு இந்தச் சிக்கல்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கின. இசை வெளியீட்டு விழாக்களில் புறக்கணிப்பது குறையவில்லை.

நாங்கள் இசை வெளியீட்டு விழாவிற்குச் சென்று அந்தப் படத்தில் பாடல் எழுதியவர்களை, அந்தப் படத்தின் மக்கள் தொடர்பாளர்களின் உதவியோடு மேடையேற்றி சங்கம் சார்பாக சிறப்பு செய்வோம். அதன்மூலம் அந்தப் பாடலாசிரியரை உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் வேலையைச் செய்தோம்.

மூத்த பாடலாசிரியர்களைக் கண்டு சிறப்புச் செய்வது, அவர்களின் பிறந்த நாள்களைக் கொண்டாடுவது, விருதுகள் தந்து கௌரவப்படுத்துவது போன்றவைகளைச் செயல்படுத்தினோம். சங்கம் தொடங்கிய நேரத்தில் ஒரு புகழ்பெற்ற பாடலாசிரியருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த செய்தியைக் கேள்விப்பட்டு உடனே எங்களால் முடிந்த நிதியுதவியைச் செய்தோம். இயக்குனர் எஸ்.பி. ஜனனாதன், இசையமைப்பாளர் காந்த் தேவா, இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் நிதியை அந்தப் பாடலாசிரியருக்கு வழங்கினோம்.

 இன்னொரு பாடலாசிரியர் கை, கால் வாதத்தால் செயல்படவில்லை என்று அறிந்து அவருக்கும் நிதியளித்தோம்.இந்தச் சூழலில், நான், முன்னாள் மேயர் மா. சுப்ரமணியன், கவிஞர் சொற்கோ,  மூவரும் கவிஞர் வாலி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று பார்த்து விசாரிக்கச் சென்றோம். அப்போது அண்ணன் மா.சு. அவர்களும், சொற்கோ அவர்களும் அய்யா வாலி அவர்களிடம் அறிமுகப்படுத்தி, இவர் த.தி.பா.ச. தொடங்கி நடத்தி வருகிறார் என்றார்கள். வாலி அய்யா அவர்கள் புருவத்தை உயர்த்தி ஆச்சரியத்தோடு பார்த்து, ‘எவ்வளவு நாளாகிறது? என்றார்.

நான் ‘எட்டு மாதம்’ என்றேன். ‘எட்டு மாதமா? என்னய்யா சொல்ற?’ என்றார்.‘ஆமாம்’ என்றேன். ‘நீ கெட்டிக்காரன்யா. எப்படி எட்டு மாதம் சாத்தியமாயிற்று?’ என்றார்.பிறகு அவர் சொன்னார். ‘‘நான், கவியரசு கண்ணதாசன், கவிஞர் மருதகாசி மூவரும் சேர்ந்து பாடலாசிரியர்களுக்கென்று சங்கம் தொடங்கினோம். நான் கவியரசைப் பார்த்து ‘நீங்கள் தலைவராய் இருங்கள்’ என்றேன். ‘வேணாம்யா, நமக்கெல்லாம் மூத்தவர் அண்ணன் கவிஞர் மருதகாசி. அவர் தலைவராய் இருக்கட்டும்’ என்றார்.

மருதகாசி அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார். பிறகு கவியரசைப் பார்த்து ‘நீங்கள் செயலாளராக இருங்கள். நான் பொருளாளராக இருக்கிறேன்’ என்று மூவரும் பேசி சங்கத்தைத் தொடங்கினோம். அன்று முழுவதும் அறையிலேயே தங்கி மகிழ்ச்சியாய் இருந்தோம். அன்று மாலை எங்களுக்குள் சிறு பிணக்கு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டோம். உலகிலேயே காலையில்  தொடங்கி மாலையில் கலைந்த சங்கம் எங்கள் சங்கமாகத்தான் இருக்கும்’ என்று சொல்லிச் சிரித்தார்.

முதலாண்டு விழா வரப்போகிறது. அதில் நீங்கள் கலந்து கொண்டு தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றோம். சரி என்றார். நானே வந்து நடத்துகிறேன் என்றார்.அவருக்காகக் காத்திருந்தோம். உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றவர் வரவேயில்லை.முதலாண்டு விழாவில்  புலவர் புலமைப்பித்தன் தலைமையில் கவிஞர் முத்துலிங்கம்  முன்னிலையில் இசைக்கலைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார், இயக்குனர் விக்கிரமன், பெப்ஸி சங்கத் தலைவர் இயக்குனர் அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆண்டு விழாவில் கவிஞர் வாலி, கவிஞர் ஆத்மநாதன் இருவரின் படங்களைத் திறந்து வைத்தோம்.. பிறகு கவிஞர் ஆத்மநாதன் அவர்களின் இல்லத்திற்குச் சென்று குடும்பத்தாரிடம் நிதியுதவி செய்தோம். அது மட்டுமின்றி, 2012-ல் அறிமுகமான புதிய பாடலாசிரியர்களுக்கு ‘இளந்தளிர்’ எனும் விருதளித்து சிறப்புச் செய்தோம்.
மூன்றாம் ஆண்டு முடிந்து, நான்காம் ஆண்டுத் தொடக்க விழாவை சிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் SRM பல்கலைக்கழகத்தின் பாரிவேந்தர் தலைமையில் நடத்தினோம்.

விழாவைத் தொடங்கி வைத்த கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன். த.தி.பா.ச உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடும், உறுப்பினர்களின் குழந்தைகளுக்குக் கல்வியில் முன்னுரிமையும் பாரிவேந்தர்  வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.விழாவில் புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், கவியரசர் இளந்தேவன் அவர்களுக்குப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விருதும், கவிஞர் யுகபாரதி அவர்களுக்குக் கவியரசு கண்ணதாசன் விருதும் அளித்தோம்.

2013 - 2014ல் அறிமுகமான பாடலாசிரியர்களுக்கு இளந்தளிர் விருதும், அஜந்தா பாபு அவர்களுக்கு விருதுச் செம்மல் விருதும் அளிக்கப்பட்டது.
விருதுகளை வழங்கி தலைமையுரையாற்றிய டாக்டர் பாரிவேந்தர் அவர்கள், கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் வைத்த கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறேன் எனவும், அடுத்த ஆண்டிலிருந்து விருது பெறுவோருக்கு நான் பொற்கிழி தருகிறேன் எனவும்  வாக்குறுதி அளித்தார்.

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம் நடத்துவதற்கு நான்காண்டுகளாக அலுவலகம் கொடுத்து உதவியவர் கவிஞர் கோட்டைக்குமார்.  தற்போது நெறியாளர்களாக கவிஞர் பாலமுரளி வர்மன், கவிஞர் கோட்டைக்குமார், கவிஞர் சொற்கோ ஆகியோர் உள்ளனர். சங்கத்தின் செய்தித்தொடர்பாளர்களாக வி.எம்.ஆறுமுகம் மற்றும் நெல்லைபாரதி செயல்படுகிறார்கள்’’ என்று விளக்கம் சொல்லும் தமிழமுதன் தலைமையில் பாடலாசிரியர்களின் பாட்டுச்சாலைப் பயணம் பாதுகாப்பாகச் செல்கிறது.

(இசைப்பயணம் இனிதே நிறைந்தது)

நெல்லைபாரதி