அவியல்



அஞ்சு பேரு சமைச்ச அவியல்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் டாக்கீஸ், ஐந்து குறும்படங்களை ஒன்று சேர்த்து அவியலாக கொடுத்திருக்கிறார்கள். ருசி எப்படி? தன்னைத்தானே கிண்டல் செய்துகொண்டும், ஊக்கம் அளித்துக் கொண்டும் ஒரு கேரக்டர். அவ்வளவுதான் அந்தக் குறும்படம். தன்னை விட ஒரு வயதே மூத்தவரான சித்தி மீது நாயகனுக்கு காதல் வந்து விடுகிறது. ஏடாகூடக் காட்சிகள் இல்லாத காரணத்தால் படம் சர்ச்சையில் இருந்து தப்புகிறது. இது மற்றொன்று. ணதனது படைப்பினை பிக்பாக்கெட்காரனிடம் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் ஒரு குறும்பட இயக்குனர் புத்திசாலித்தனமாக தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்கிறார் என்பது இன்னொன்று.  இறந்த பின்னும் தன் நண்பர்களுடன் ஊர் சுற்ற நினைக்கும் ஒருவனைப் பற்றிய கதை ஒன்று. ஒருவன் தன்னை பூனையாகப் பாவித்து, விதி எப்படி எலியை வீழ்த்துமென கதையைச் சொல்லுகிறான். ஆனால், விதி யாரை எலியாக்குகிறது என்பதே கடைசிப்படம்.



ஒரு குறும்படத்தில்தான் நாயகி இருக்கிறார். அம்ருதா. அந்த வகையில் அவியலின் நாயகி  என்ற பெருமை இவருக்கு கிடைக்கிறது. பாபி சிம்ஹா, நிவின் பாலி இருவருமே சரிசமமாக நடிப்பில்  மிரட்டியிருக்கிறார்கள். ஐந்து படங்களையும் ஐந்து இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள். திறமைசாலிகளை தன் நிறுவனத்தின் மூலம் அடையாளம் காண்பித்திருக்கும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜின் முயற்சிக்கு ஒரு பூங்கொத்து. மொத்தத்தில் அவியல் அபார ருசி!