ஹீரோயினிஸம்



ஹீரோயின்  அந்தஸ்தை தூக்கியெறிந்த  துணிச்சல்காரர்! சச்சு

“திருமணம் என்கிற மரபை எல்லோரும் காப்பாற்ற வேண்டும். இன்றைக்கு எல்லாப் பெண்களும் சம்பாதிக்கிறார்கள். சொந்தக் காலில நிற்கிறார்கள். ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் தனித்து வாழமுடியும் என்கிற காலம் வந்துவிட்டது. அதனால், திருமணம் என்கிற புனிதமான பந்தம் அணைந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இதற்காகவாவது அனைவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.” இப்படிச் சொல்பவர் யார் தெரியுமா? தன் குடும்பம் முன்னேற வேண்டும் என்றால் தனக்கொரு குடும்பம் இருக்கக் கூடாது என்று திருமணமே ெசய்து கொள்ளாத சச்சு. ஓரிரு படங்களில் மட்டும் ஹீேராயினாக நடித்த சச்சு, ஐந்நூறு படங்களுக்கு மேல் காமெடி நடிகையாகவே நடித்திருந்தாலும், இன்றைக்கும் சொந்த வாழ்வில் ஹீரோயினாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.



தமிழ் சினிமாவில் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் வந்திருக்கிறார்கள், வென்றிருக்கிறார்கள். அதன் பிறகு ஹீரோயினாகவும் ஆகி சக்கைப்போடு போட்டிருக்கிறார்கள். நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வந்த முதல் குழந்தை நட்சத்திரமே சச்சுதான். தங்கள் குழந்தைகள் சினிமாவில் நடிப்பதை பெற்றோர் இழிவாகக் கருதிய காலத்திலேயே, சச்சு ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சாதனை புரிந்தார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தபோது பருவ வயதைத் தொட்டதும், குழந்தை நட்சத்திரம் என்கிற பட்டத்தைத் துறந்தார். சிறிய இடைவெளி விட்டார். இப்போது மீண்டும் நடிக்க வேண்டும். குழந்தை நட்சத்திரமாக நடிக்க முடியாது. ஹீரோயினாக நடிக்கும் வயதும் பக்குவமும் வந்து விட்டது. ஆனால் எப்படி நடிப்பது? அவர் குழந்தையாக நடித்தபோது இருந்த அதே ஹீரோக்கள்தான் இப்போதும் ஹீரோக்கள். அப்பா.... அண்ணா... மாமா... என்று அழைத்து திரையிலும், நிஜத்திலும் பாசத்தைப் பொழிந்த அதே ஹீரோக்களை இப்போது அத்தான் என்று எப்படி கொஞ்சமுடியும்? சிக்கல் அங்கே உருவானது. சில படங்களில் ஹீரோயினாக நடித்தபோதும் அது ஏனோ சச்சுவுக்கு மனோரீதியாக ஒத்துவரவில்லை.

அதனால்தான் துணிச்சலுடன் ‘காதலிக்க நேரமில்–்லை’ படத்தில் ஹீரோயின் பட்டத்தைத் துறந்து காமெடி நடிகையாக அவதாரம் எடுத்தார். அதே படத்தில் ஹீரோயினாக நடித்த காஞ்சனாவுக்கும், ராஜக்கும் கொஞ்சமும் இவர் சளைத்தவர் அல்ல. அதே அழகு, அதே திறமைதான் சச்சுவுக்கும் இருந்தது. ஒரு படத்தில் காமெடி நடிகையாகி விட்டால் ஆயுசுக்கும் காமெடி நடிைகதான் என்பது தெரிந்தே இந்த ரிஸ்க்கை எடுத்தார். அங்குதான் நிஜ ஹீேராயின் ஆகிறார் சச்சு. அவர் காலத்து நடிகைகள் பலர் இப்போது இல்லை. சிலர் வயோதிகத்தோடு இருக்கிறார்கள். இன்றைக்கும் பட்டுப்புடவை பளபளக்க, பொன் நகையுடன் புன்னகையும் தவழ துடிப்போடு வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றைக்கும் ஹீரோயினான சச்சு.

- மீரான்