பின்னணிக்குரலில் முன்னணிக் கலைஞர்!



சென்னை திருவல்லிக்கேணியில் நீலகண்டன் - லலிதா பெற்றோரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார் எஸ்.என்.சுரேந்தர். எம்.ஜி.ஆர் மற்றும் ராமகிருஷ்ணா பள்ளிகளில் ஆரம்பக்கல்வி கற்றவர், ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தார். வாகினி ஸ்டுடியோவில் அப்பா நிகழ்ச்சிப் பொறுப்பாளராக இருந்ததால், வீட்டிலும் சினிமா வாசனை வீசியது. இன்னிசைக் கச்சேரி நடத்திவந்த அப்பாவும் அம்மாவும் தேர்ந்த பாடகர்கள் என்பதால், சுரேந்தருக்கும் பாட்டு மீது பாசம் ஏற்பட்டது.



சுந்தர் - சுரேந்தர் - ஷோபா (நடிகர் விஜய்யின் அம்மா) - ஷீலா என குடும்பத்திலுள்ள எல்லா குழந்தைகளுக்கும் இசையின்மீது ஆர்வம் வந்தது. அப்பாவின் ஏற்பாட்டில் ஆர்.எல்.பால்ராஜ் மாஸ்டர் பக்திப்பாடல்களைக் கற்றுக் கொடுத்தார். உடன்பிறப்புகளுக்கு வடபழனி முருகன் கோவிலில் அரங்கேற்றம் நடந்தது. பின்னர் மீனாட்சி  சுந்தரம் அய்யர்  மற்றும் களக்காடு மகாதேவன் அய்யர் ஆகியோரிடம் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையைக் கற்றுக்கொண்டார் சுரேந்தர். அபிநயத்தோடு மேடையில் பாடும் மகனின் திறனறிந்த அப்பா, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார். ‘நம்ம குழந்தைகள்’ படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலாவின் தம்பியாக நடித்த சுரேந்தர், ‘கண்மலர்’ படத்தில் பாடி, நடித்தார்.

எம்.எஸ்.வியிடமிருந்து பிரிந்து வந்து, டி .கே.ராமமூர்த்தி இசையமைத்த முதல் படம் ‘சாது மிரண்டால்’. அந்தப்படத்தில் அப்போதைய புகழ்மிகு குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரபாகருக்கு பின்னணி பாடினார் சுரேந்தர். ‘பாமா விஜயம்’ படத்தில் வரவேற்புப் பெற்ற ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ பாடலில் சுரேந்தரின் குரலும் சுவை சேர்த்தது. ‘தாமரை நெஞ்சம்’ படத்தின் ‘ஆலயம் என்பது வீடானால்’ பாடலில் ஒலித்த சுரேந்தரின் குழந்தைக்குரல் பாராட்டுப் பெற்றது. திரைப்படங்களில் பாடிக்கொண்டும் நடித்தபடியும் இருந்தாலும், மேடை நாடகங்களிலும் இவரது பங்களிப்பு இருந்தது. ‘அண்ணாவின் ஆசை’ நாடகத்தில் அண்ணன் சுந்தருடன் இணைந்து நடித்தார். சென்னை பாஷையில் வள்ளி திருமணத்தைச் சொல்லிக்கொடுத்து, குழந்தைகளை நடிக்க வைத்தவர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன். சகோதரர்கள் பாவலர் வரதராஜன்,  பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் நடத்தும் நாடகங்களில் பாடி நடிக்கும் வாய்ப்பு சுரேந்தருக்குத் தொடர்ந்தது.



சுரேந்தரின் சினிமா வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் புகழ்மிகு பின்னணிக் கலைஞர் லலிதா ரங்காராவ். ‘அதிசய மாப்பிள்ளை’ கன்னடப்படத்தின் தமிழ் வடிவத்துக்கு, இரண்டாம் நாயகனின் வாயசைப்புக்கு குரல்கொடுத்து, டப்பிங் துறையில் கால் பதித்தார் சுரேந்தர். ‘நீ பேசுவதே பாடுவதுபோல இருக்கிறது’ என்று பாராட்டியிருக்கிறார் ஒலிப்பதிவுப் பொறியாளர். அந்தப்படத்தில் இவர் பேசிய முதல் வசனம், ‘லலிதா!’ என்று நாயகியை அழைப்பதாக அமைந்தது. அம்மாவின் பெயர் லலிதா- டப்பிங் துறைக்கு அறிமுகப்படுத்தியவர் லலிதா- முதல் வசனம் ‘லலிதா!’ என்பதில் உருகினார் சுரேந்தர். அன்று தொடங்கிய பின்னணிக்குரல் பணி, சுரேந்தரை முன்னணிக்குக் கொண்டுவந்தது. புகழ்மிகு பின்னணிக்குரல் கலைஞர் ஹேமமாலினி, இவருக்கு பரிந்துரை செய்து படவாய்ப்பு வாங்கிக் கொடுத்ததை நன்றியுடன் குறிப்பிடுகிறார். இவர் குரல் கொடுத்த முதல் நேரடி தமிழ்ப்படம் ‘ஒரு கை ஓசை’.

‘மோகனுக்குக் குரல் கொடுப்பவர்’ என்று அடையாளம் சொல்லுமளவுக்கு 75 படங்களில் மோகனுக்கு குரல் கொடுத்திருக்கிறார் இவர். பின்னாளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், ‘மனிதன் மாறிவிட்டான்’ படத்தில் மோகனுக்காக சிலர் குரல் கொடுத்துப் பார்த்தார்கள். இறுதியில் சுரேந்தர்தான் பேசினார். மோகனுக்காக இவர் குரல் கொடுத்த முதல் படம் ‘பஞ்சமி’. அது வெளிவரவில்லை. ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் மோகனுக்குக் குரல்கொடுக்க முதலில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கேட்டார்கள். அவர் மறுத்துவிடவே, அந்த வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

இயக்குநர் மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில், பிரதாப் போத்தனுக்குக் குரல் கொடுக்க 40 பேர் வரிசை கட்டியதில், இயக்குநர் தேர்ந்தெடுத்த குரல் இவருடையது. ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் விடலை கொஞ்சும் கார்த்திக், இவரது குரலில்தான் பேசினார். ‘தங்கைக்கோர் கீதம்’ படத்தில் ஆனந்த்பாபு உள்பட டி.ராஜேந்தர் படத்து ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் சுரேந்தர்தான் ஆஸ்தான பின்னணிக் கலைஞர். ‘காதல் ஓவியம்’ படத்தில் நாயகன் கண்ணன் இவர் குரலில் பேசினார். ரகுமானுக்கும் இவரது குரல் பொருந்தி வந்தது. ‘அந்நியன்’ படத்தில் நெடுமுடி வேணுவுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘சாட்சி’, ‘வெற்றி’, ‘ஏமாறாதே ஏமாற்றாதே’, ‘சபாஷ்’ படங்களில் இவரது குரல்தான் விஜயகாந்துக்காக ஒலித்தது. ‘சட்டம் ஒரு இருட்டறை’யில் இவர் பாடிய ‘தனிமையிலே ஒரு ராகம்...’தான் விஜயகாந்துக்கு முதல் வெற்றிப்பாடல். ‘சென்னை 600028’ படத்தில் ஜெய்க்கு அப்பாவாக நடித்தது உள்பட ஐந்து படங்களில் நடித்திருக்கும் சுரேந்தருக்கு இன்றைய நாயகர்களுடன் நடிக்கவேண்டும் என்பது கலைவிருப்பம்.இன்றைய இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிப் பாடவேண்டும் என்பது குறிக்கோள். 

‘சிறைப்பறவை’யில் இளையராஜா இசையில் யேசுதாசுடன் பாடிய ‘ஆனந்தம் பொங்கிட...’, ‘ஊமை விழிகள்’ படத்தில் மனோஜ் கியான் இசையில் சசிரேகாவுடன் இணைந்த ‘கண்மணி நில்லு...’, ‘மாமரத்து பூவெடுத்து...’ மற்றும் ‘குடுகுடுத்த கிழவனுக்கு...’, ‘நட்பு’ படத்தில் இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவனுடன் சேர்ந்த ‘சிங்கம் ரெண்டும் சேர்ந்ததடா...’, ‘நான் பாடும் பாடல்’ படத்தில் இளையராஜா இசையில் ஜானகியுடன் பாடிய ‘தேவன் கோவில் தீபம் ஒன்று...’, ‘சேது’வில் இளையராஜா இசையில் ‘அண்ணன் சேதுவுக்கு...’ மற்றும் ‘மாலை என் வேதனை கூட்டுதடி...’, ‘சிக்காத சிட்டொன்று...’, ‘திருப்பதி எழுமலை வெங்கடேசா’வில் எஸ்.ஏ .ராஜ்குமார் இசையில் மனோ, வடிவேலுவுடன் பாடிய ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா...’ ‘நிலாவே வா’வில் வித்யாசாகருடன் இணைந்து பாடிய ‘அக்குதே அக்குதே...’, ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் தேவா இசையில் சித்ராவுடன் கைகோர்த்த ‘பூவே பூவே பெண் பூவே...’, ‘ரசிகன்’ படத்தில் தேவா இசையில் ஸ்வர்ணலதாவுடன் குரல்கொடுத்த ‘சில்லென சில்லென நீர்த்துளி பட்டு...’, ‘தீ’ படத்தில் ‘சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததுன்னு...’ ரஜினியின் ‘வள்ளி’ படத்தில் இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவனுடன் பாடிய ‘வள்ளி வரப் போறா...’, ‘இன்னிசை மழை’ படத்தில் இளையராஜாவுடன் பாடிய ‘மங்கை நீ மாங்கனி...’, ‘சிகரம்’ படத்தில்  எஸ்.பி.பி இசையில் சைலஜாவுடன் ‘முத்தமா...’, எஸ்.பி.பி சைலஜாவுடன் பாடிய ‘ஏதோ ஏதோ...’, ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில்  சித்ராவுடன் ‘பாரிஜாதப் பூவே அந்த தேவலோகத் தேனே...’, ‘இதயம்’ படத்தில் தீபன் சக்கரவர்த்தியுடன் ‘ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே...’, ‘காதலுக்கு மரியாதை’யில் ‘ஆனந்தக் குயிலின் பாட்டு...’ ‘ப்ரியமுடன்’ படத்தில் ‘ஒய்ட்டு லக்கான் கோழி ஒண்ணு கூவுது...’, ‘கோபுர வாசலிலே’வில் ‘தேவதை போலொரு பெண்ணிங்கு...’, ‘வசந்தராகம்’ படத்தில் ‘ஒரு தெய்வம் நேரில் வந்தது...’, ‘நான் உள்ளதைச் சொல்லட்டுமா...’, ‘நீதிக்குத் தண்டனை’யில் ‘மனிதர்களே ஓ மனிதர்களே...’ என சுரேந்தரின் சுந்தரக்குரல் இசை விரும்பிகளைக் கவர்ந்து வருகிறது.

‘கலைமாமணி’ கவுரவம் பெற்ற இவருக்கு 2005ல் சிறந்த பின்னணிக்குரல் கலைஞருக்கான தமிழக அரசு விருது கிடைத்தது. 500க்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் குரல், 400க்கும் அதிகமான மொழிமாற்றுப் பாடல்கள், 4000க்கும் கூடுதலான மேடைக் கச்சேரிகள் என  திரைவலம் வரும் சுரேந்தர் நடத்திவரும் ‘சுகமான ராகங்கள்’ இசைக்குழு, இங்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த இதழில்
இசையமைப்பாளர்  சாம்.டி. ராஜ்