மாப்ள சிங்கம்



காமெடி லயன்

ஒரு ஊர்ல ஒரு கோயில். அந்த கோயிலுக்கு சொந்தமாக ஒரு தேர். அனைத்து வசதிகள் இருந்தும் தேர் இழுக்க முடியாத நிலை. காரணம் இரண்டு குடும்பங்களிடையே பரம்பரை பகை. இரண்டு குடும்பமும் தங்களுக்குத்தான் முதல் மரியாதை என்று மல்லுக்கட்டுகிறார்கள். எதிராளிகள் குடும்பத்துக்குள் காதல் வந்தால்? ஹைதர் காலத்து சிங்கத்துக்கு ஹ்யூமர் இன்ஜெக்‌ஷன் போட்டு கர்ஜிக்கவிட்டிருக்கிறார்கள். வெள்ளை வேட்டிச் சட்டை, முறுக்கு மீசை என இதுவரை பார்க்காத தோற்றத்தில் வித்தியாசம் காட்டுகிறார் விமல். தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை மிகச் சரியாகச் செய்திருக்கிறார். காதலர்களை பிரிக்கும் காட்சியில் பிரித்து மேய்ந்திருக்கிறார். காதல் காட்சிகள், நடனக் காட்சிகளில் முந்தைய படங்களைவிட நல்ல வளர்ச்சி தெரிகிறது.



ஹீரோ தேனீ என்றால் ஹீரோயின் அஞ்சலி வாஷிங்டன் ஆப்பிள். மிடுக்கான வக்கீல் வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். அலட்சியப் பார்வையாலேயே பாஸாகிறார். குட்டைப் பாவடையில் கூட தென்படாத க்ளாமரை சேலையில் காட்டுகிறார். குத்துப்பாடலுக்கு நடனமாடி ரசிகர்களையும் குலுக்குகிறார். ஒரே மைனஸ் - கொஞ்சம் சரீர கனம். சூரி, காளி, சுவாமிநாதன் கூட்டணியில் காமெடி அதிரி புதிரியாக இருக்கிறது. கிராமத்துக் கதைகளில் வரும் கேரக்டர்கள் இந்தப்படத்திலும் இருக்கின்றனர். ஊர் பெரியவராக வரும் ராதாரவி, அஞ்சலியின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ், விமலின் அப்பாவாக ஞானசம்பந்தம், மாவட்டஆட்சித்தலைவராக வருகிற பாண்டியராஜன் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

தருண்பாலாஜியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. அஞ்சலி முதல் ஆல் ஆர்டிஸ்டுகளையும் பளிச் என்று காண்பித்திருக்கிறார். ரகுநந்தனின் இசையில் ‘எதுக்கு மச்சான் காதலு’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் ஓகே. இயக்குநர் ராஜசேகர், நகைச்சுவையாக ஒரு படத்தைக் கொடுக்கவேண்டும் என்று முடிவுசெய்து படத்தை எடுத்திருப்பதால் லாஜிக்கில் கவனம் செலுத்தவில்லை. எதிரியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவங்க வீட்டுப்பெண்ணை தூக்கிட்டு வந்து தாலி கட்டுடா என்று விமலிடம் அசைன்மென்ட் கொடுக்கும் போது தியேட்டரே சிரிப்பலையில் அதிர்கிறது. ஒரு வெள்ளைக்காரர் வேடத்தை வைத்துக்கொண்டு நம்முடைய ஆணவ பழக்கவழக்கங்களைக் கேள்வி கேட்டிருப்பதில் இயக்குனரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. டான் அசோக்கின் வசனங்கள் பக்கா. மொத்தத்தில் மாப்ள சிங்கம்... காமெடி லயன்!