காதலூம் கடந்து போகும்



காதல் மெதுவாகக் கடக்கிறது!

‘மை டியர் டெஸ்பரட்டோ’ என்கிற கொரியன் படத்தின் கதையை முறையாக அனுமதி வாங்கி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். சென்னையில் சில இடங்களில் மதுபான பார் நடத்தும் ஒருவரிடம் அடியாள் போஸ்டிங்கில் இருக்கிறார் விஜய் சேதுபதி. அரைகுறை அடியாளான அவருக்கு சொந்தமாக பார் நடத்த வேண்டும் என்பதுதான் லட்சியம். என்ஜினியரிங் முடித்துவிட்டு சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற லட்சியத்தோடு விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் மடோனா செபாஸ்டியன். ஒரு நாள் மடோனா வேலை செய்யும் ஐ.டி.கம்பெனி இழுத்து மூடப்படுவதால், குறைந்த வாடகை உள்ள வீட்டுக்கு ஷிப்ட்டாகிறார். அந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் விஜய் சேதுபதி குடியிருக்கிறார். எதிர்வீட்டுக்காரர் ரவுடி என்று தெரிந்ததும் அந்த வீட்டை காலி செய்ய திட்டமிடுகிறார் மடோனா. ஆனால், மோதலும், நட்புமாக அவர்கள் உறவு தொடர்கிறது. விஜய்சேதுபதி, மடோனா உறவு காதலா, நட்பா என்பதை தனக்கே உரிய ஸ்டைலில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் நலன்.



யதார்த்தமான ரோல் என்பதாலேயே அடியாள் கேரக்டரை அநாயாசமாக ஊதித் தள்ளுகிறார் விஜய்சேதுபதி. தன்னுடைய அபாரமான திறமையால் ஃப்ரெஷ் ஃபீல் கொடுக்கிறார்.  தண்ணி அடித்துவிட்டு உளறும் அந்த ஒரு காட்சியே மடோனாவின் நடிப்புக்கு மகுடம். அழகு, நடிப்பு இரண்டிலுமே எளிதில் தேர்ச்சி பெறுகிறார். ‘மொடா குமாரு’ என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி. மூன்றே மூன்று காட்சிகளில்தான் வருகிறார். சமுத்திரம் அளவுக்கு இல்லையென்றாலும் நதியளவுக்காவது அவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

பார் ஓனராக வரும் சத்யாசுந்தர் தன்னுடைய பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார். விஜய் சேதுபதி கூடவே வரும் மணிகண்டனும் கவனம் ஈர்க்கிறார். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் சிறப்பு. பின்னணி இசை அதைவிட மிகச் சிறப்பு. கதையை சிதைக்காமல் காட்சிகளை மிக நுட்பமாக உணர்ந்து இசையமைத்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத தினேஷின் ஒளிப்பதிவு அருமை. மூலக்கதை கொரிய கதையாக இருக்கலாம். அதற்காக அதே மாதிரி மெதுவாக கதை சொல்ல முயற்சி செய்திருப்பதை தவிர்த்திருக்கலாம். மற்றபடி வசனங்களிலும், பாத்திரப் படைப்பிலும் மின்னுகிறார் நலன் குமாரசாமி.