தங்கும் விடுதியில் நடிகையிடம் டார்ச்சர்
சரோஜாவை இன்னும் காண வில்லையே என்று கவலை யுடன் காத்துக் கொண்டிருந்த நேரத்தில், ‘‘வாய்ப்புப் பறிபோன நடிகர் போல நீங்களும் கவலையாக இருக்கிறீர்களே?’’ என்று கேட்டுக்கொண்டே வந்தமர்ந்தார். அவருக்கு சூடாக ஒரு தேநீர் சொல்லிவிட்டு, ‘‘எந்த நடிகருக்கு வாய்ப்புப் பறிபோனது?’’ என்று கேட்டோம். ‘‘விண்ணைத் தாண்டிய இயக்குநர், முந்தைய படத்தின் வெறுப்பிலிருந்து மீள இந்தியில் படமெடுக்கப் போனார். காட்சிக்குக் காட்சி அப்படியே எடுத்ததால் சீக்கிரமாகப் படத்தை முடித்து விட்டாராம்.
அதோடு தமிழில் அடுத்த படமெடுக்கத் தயாராகிவிட்டாராம். அந்தப் படத்தில் நாயகனாக நடிக்க யாரும் எதிர்பாராத வகையில் சூப்பர் தயாரிப்பாளரின் மகனைத் தேர்வு செய்து விட்டாராம். இதனால் இயக்கு நரோடு அடுத்த படத்திலும் சேர்ந்து நடிக்கும் விருப்பத்தில் இருந்த வம்பு நடிகர் பேரதிர்ச்சி அடைந்து விட்டாராம். அதிர்ச்சியோடு நின்றுவிடாமல், நேராக இயக்குநரிடம், ‘‘நான்தான் உங்கள் படத்தில் நடிக்கவேண்டும்’’ என்று சொன்னாராம். அதற்கு இயக்குநர், ‘‘அவரிடம் பேசி ஒப்பந்தம் செய்துவிட்டோம்.
எனவே அடுத்த படத்தில் பார்க்கலாம்’’ என்று சொல்லிவிட்டாராம். இதைச் சற்றும் எதிர்பாராத வம்பு நடிகர், ‘‘என்னை வைத்துப் படமெடுக்க வில்லையென் றாலும் பரவா யில்லை, ஆனால் அந்தநடிகரை வைத்துப்படமெடுக்க வேண்டாம்’’ என்று கேட்டுக் கொண்டாராம். ‘‘நடிகர் இப்படிச்சொல்வார் என்று இயக்குநர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம். அவருக்கு ஏதேதோ சமாதானம் சொல்லி பேச்சைத் துண்டித்தாராம்’’ என்று சொல்லிமுடித்தார் சரோஜா. ‘‘சூப்பர் தயாரிப்பாளரின் மகனை விட சம்பளம் மற்றும் ரசிகர்கள் வகையில் உயரத்தில் இருக்கும் வம்பு நடிகருக்கு ஏன் இந்த வேலை?’’ என்று நாம் கேட்டதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அடுத்த செய்திக்குப் போனார் சரோஜா.
‘‘சென்னையில் உள்ள குறள் சம்பந்தப்பட்ட புகழ்பெற்ற கட்டிடத்தின் பெயரில் ஒரு படம் தயாராகிறதாம். அந்தப்படத்தில் கன்னட தேசத்தைச் சேர்ந்த ஒரு புதுநடிகையை நாயகியாக ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்திருக் கிறார்களாம். கொஞ்ச நாட்கள் படப்பிடிப்புடன் நிற்கிறதாம் அந்தப்படம். இந்நிலையில் நாயகியைத் தொடர்புகொண்ட தயாரிப்பாளர், ‘‘சென்னையில் படப் பிடிப்பு இருக்கிறது” என்று அழைத்தாராம். நடிகையும் வந்து சேர்ந்தாராம். தயாரிப்பாளர், நடிகையிடம் டின்னருக்குப் போகலாம் என்று கூப்பிட்டாராம். நடிகையும் கிளம்பிப் போனாராம். தயாரிப்பாளரோ உணவு விடுதிக்குப் போகாமல் ஒரு தங்கும்விடுதிக்குப் போனாராம். அங்குள்ள அறை ஒன்றுக்கு நடிகையை அழைத்துப் போனால் அங்கு வேறொரு நபர் இருந்தாராம்.
அவருடன் தங்கும்படி தயாரிப்பாளர் நடிகையிடம் சொல்ல, அதிர்ந்துபோன நடிகை அங்கிருந்து ஓடிவந்து விட்டாராம். இப்போது அடுத்த கட்டப் படப்பிடிப்புக்குக் கூப்பிட்டபோது ‘‘நான் இனிமேல் நடிக்க வரமாட்டேன்’’ என்று சொல்லி விட்டாராம் நடிகை. இதனால் படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் மொத்தப்படக்குழுவும் தடுமாறிப்போயிருப்பதாகப் பேச்சு’’ என்று சொல்லிமுடித்த சரோஜா, உடனடியாகக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
|