பாடமெடுக்கும் பேய்!



ஸ்ட்ராபெரி விமர்சனம்

சில ஆண்டுகள் முன்பு தமிழகத்தையே கண்ணீர்க்கடலில் ஆழ்த்திய பள்ளிப்பேருந்து விபத்தை, பேய் படத்துக்கு கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆவிகளுடன் பேசுவதுதான் ஜோ மல்லூரியின் முழுநேரத் தொழில். அவரிடம், செத்துப் போன ஒரு சிறுமி ஆவியாக வந்து தனக்கு உதவி செய்யுமாறு ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுக்கிறது. சிறுமிக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் அதற்கு கால் டாக்சி டிரைவர் பா.விஜய் மனசு வைத்தால்தான் முடியும். விஜய்யோ பேய் என்றாலே பேஜார் ஆகிறவர். அவரை எப்படியாவது தன் வலைக்குள் இழுத்து வர முயற்சிக்கும் ஜோ மல்லூரி, அதற்கு தன் மகள் அவனியை தூண்டில்புழு ஆக்குகிறார்.

அவனியின் அழகில் மயங்கும் விஜய், கொஞ்சம் கொஞ்சமாக அவனியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு ஆவியிடம் பேசத் தயாராகிறார். ஆவியை சந்திக்கும்போது தான், தான் நேரில் கண்ட ஒரு விபத்தில் இறந்த குழந்தையின் ஆவி அது என்று தெரிந்து கொள்கிறார். அந்த ஆவி எதற்காக அவரைத் தேடி வந்தது, அந்த ஆவியின் இலட்சியத்தை விஜய் தீர்த்து வைத்தாரா என்பதையெல்லாம் திகில் கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
 


இயக்குநராக ஜெயித்திருக்கும் கவிஞர் பா.விஜய், நடிகராகவும் ஜொலிக்கிறார். ஆவியைக் கண்டு அதிகமாக பயந்து கேரக்டருக்கு செயற்கை சாயம் பூசாமல் அளவாக கேரக்டரை பெருமைப்படுத்துகிறார். அவனிக்கு படத்தில் சொல்லும்படியாக வேலை இல்லை. எனினும் அவரது கவர்ச்சி நன்றாகவே செல்லுபடியாகிறது. சமுத்திரக்கனிக்கு கேரக்டர் பொருத்தமாக இருந்தாலும் நடிப்பு பொருத்தமாக இல்லை. தேவயானி பிரமாதம். ஜோ மல்லூரியின் கேரக்டர் சில இடங்களில் பயத்தையும் சில இடங்களில் சிரிப்பையும் வரவழைக்கிறது. படத்தின் ஆகச்சிறந்த இரு கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் மாறவர்மன், இசையமைப்பாளர் தாஜ் நூர். கை வீசும் பாடல் மனதை வருடும் அருமையான பாடல். வண்ணத்துபூச்சியும் ஒரு கேரக்டர் என்பதால் அதையும் ரசிக்கும்படியாக படமாக்கியிருக்கும் கிராஃபிக்ஸ் அருமை. கல்வி மீதும், பள்ளிக்குழந்தைகள் மீதும் கவனம் செலுத்தாத பள்ளிகளுக்கு, செல்லுலாயிட் மூலம் பாடம் எடுத்திருக்கும் இயக்குனரின் தைரியத்தை பாராட்டியே தீர வேண்டும்.