ஆள்மாறாட்ட அதிரடி!யட்சன் விமர்சனம்

பொதுவாகவே ஆள் மாறாட்டக் கதைகள் என்பது உருவ ஒற்றுமையை வைத்து முடிச்சு போடப்பட்டிருக்கும். ஆனால், யட்சன் சூழ்நிலையை வைத்து மாறாட்டம் நிகழ்த்துகிறான். தலைக்கு மேல் வேலை இருந்தாலும் ‘தல’ படத்தை மிஸ் செய்யாதவர் ஆர்யா. ‘தல’யுடன் சேர்ந்து ஒரு புகைப் படம் எடுக்க வேண்டும் என்பதுதான் அவரது வாழ்நாள் லட்சியம். தூத்துக்குடிவாசியான அவர் எதிர்பாராதவிதமாக ஒரு கொலை பண்ணுகிறார். அதிலிருந்து தப்பிக்க சென்னைக்கு வருகிறார். கட்!பழனிவாசியான கிருஷ்ணாவுக்கு நடிகராக வேண்டும் என்பது லட்சியம். காதலி ஸ்வாதி அதற்கு பொருள் உதவி செய்து சென்னைக்கு வழியனுப்பி வைக்கிறார். இங்கே வரும் கிருஷ்ணாவுக்கு தல படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
இதற்கிடையே சென்னையில் அடைக்கலமாகும் ஆர்யாவிடம் நாயகி தீபா சன்னதியை கொலை செய்ய வேண்டும் என்ற திடீர் அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் கொலைக் களத்துக்குச் செல்ல வேண்டிய ஆர்யா படப்பிடிப்புத் தளத்துக்கும், படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டிய கிருஷ்ணா கொலைக் களத்துக்கும் செல்ல நேரிடுகிறது. இரு நாயகர்களும் பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் மீதிக் கதை.

ஆர்யா நடிப்பில் பெரிதாக மாற்றமில்லை. வழக்கம் போல் கச்சிதம். கிருஷ்ணா சில இடங்களில் அசத்துகிறார். நடிப்பைப் பொறுத்தவரை முதலிடத்தைப் பிடிப்பது ஸ்வாதிதான். தீபா சன்னதி அழகாக இருக்கிறார். க்ளாமரை மூடி வைத்து மறைத்தாலும், ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார். தம்பிராமையா, பொன்வண்ணன் ஏற்றுக்கொண்ட கேரக்டருக்கு சிறப்பு செய்கிறார்கள். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்துக்கு ஓரளவுக்குத்தான் உதவுகிறது. எழுத்து வடிவில் கவர்ந்த சுபாவின் கதையை தன் பங்கிறகு திரைக்கதை அமைத்து சொல்லிக் கொள்ளும்படியாகவே எடுத்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன்.