கமல்ஹாசன் பெயர்சூட்டிய கதாநாயகன்!



தவறு செய்யும் மனிதனுக்கு தண்டனை நிச்சயம். சிலருக்கு உடனே தண்டனை கிடைத்துவிடும், ஒருசிலர் காலம் தாழ்ந்து அனுபவிப்பார்கள். இறந்து போய் மேலுலகம் சென்றாலும் தண்டனையை அடைந்தே தீரவேண்டும். இப்படியொரு கருத்தை அடிப்படையாக வைத்து நகைச்சுவைப் படமாக உருவாகி வருகிறது ‘அந்த 60 நாட்கள்’. படப்பிடிப்பைப் பார்த்துவர முடிவுசெய்து, லொகேஷனை விசாரித்தோம். சென்னை செம்மொழிப்பூங்கா என்கிற தகவல் கிடைத்தது.

நாம் சென்றிருந்த நேரம், இளைஞர்களும் இளம்பெண்களும் சார்லியைச் சூழ்ந்துகொண்டு அன்புத்தொல்லை கொடுக்கும் காட்சி படமாகிக்கொண்டிருந்தது. கார்த்திக் ராஜா கேமராவைக் கையாண்டுகொண்டிருந்தார். ‘என்ன சார் நடக்குது இங்கே?’ என்று இயக்குநர் எஸ்.ராஜசேகரிடம் கேள்வியைப் போட்டோம். ‘‘சார்லி சார் நடிகர் சார்லியாகவே வருகிறார். அவசரமாக பாத்ரூம் போகும் வழியில் அவரை ரசிகர்கள் மடக்கி, ஆட்டோகிராஃப் கேட்கிறார்கள். அவஸ்தையை மறைத்தபடி, ரசிகர்களிடம் அவர் எப்படி அன்பு காட்டுகிறார் என்பதாக காட்சி வருகிறது’’ என்றார்.



காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் சந்திரிகா நாயகியாக அறிமுகமாகிறார். அர்ஜுனன், பவர் ஸ்டார், சங்கிலி முருகன், டி.பி.கஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லி கணேஷ், பாண்டு, சார்லி, மதன்பாப், அனுமோகன், வையாபுரி, நளினி, ஷகீலா, சி.ஐ.டி.சகுந்தலா, ‘அனேகன்’ ராதா, ‘மாரி’ ஷர்மிளா, மதுமிதா, பெஞ்சமின், நெல்லை சிவா, கராத்தே ராஜா, முத்துக்காளை, பாவா லட்சுமணன் என கோடம்பாக்கத்தின் பாதி நடிகர் பட்டாளம் இந்தப்படத்தில் இருக்கிறது. வி.சுப்பையன் கதை, வசனம் எழுதி தயாரிக்கும் இந்தப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்குகிறார் எஸ்.ராஜசேகர். விஸ்காம் முடித்து, குறும்படங்கள் இயக்கி, கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த ராஜசேகரின் கம்ப்யூட்டர் அறிவுத்திறனை அறிந்த எஸ்.பி.ராஜகுமார் ‘சுறா’ படத்தில் உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்டார்.

கே.வி.எஸ். ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு இசையமைக்கும் என்.எஸ்.கே போட்டிருக்கும் மெட்டுக்கு சினேகன் எழுதியுள்ள ‘சண்டாளா உன்னைப்பார்த்து மெண்டலாத்தான் ஆனேன் நேத்து…’ பாடல் ஹிட்டாகும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது படக்குழு. கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றதும், மயில்சாமியின் மகனுக்கு அன்பு என்று பாசத்துடன் பெயர் சூட்டியவர் கலைஞானி கமல்ஹாசன். அதனாலோ என்னவோ, படப்பிடிப்பில் அனைவரும் நாயகன் மீது தனி மரியாதை செலுத்துவதைப்  பார்க்க முடிந்தது. ‘அந்த 60 நாட்கள்’ நூறு நாட்களைத் தாண்டி திரையரங்குகளில் திருவிழாக் காண வாழ்த்தி விடைபெற்றோம்.

- நெல்பா