நானும் மனுஷன்தான்!வம்பு நடிகரோடுதான் முதல் லவ்வு. அமாவாசை பூசணிக்காய் மாதிரி சுக்குநூறாக உடைந்ததுமே தமிழையே வெறுத்து தெலுங்குக்கு மொத்தமாகப் போய்விட்டார் அந்த நடிகை. அங்கே ஒரு முன்னணி ஹீரோவின் கஸ்டடியில் இருக்கிறார் என்று அக்கடதேசத்து பத்திரிகைகள் கிசுகிசு எழுதின. எனவே மீண்டும் தமிழுக்கு மாற கடுமையாக பிரயத்தனம் செய்தார்.

வம்புவின் போட்டி நடிகரான சூப்பர் மாப்பிள்ளைதான் மீண்டும் தமிழில் அவருக்கு என்ட்ரி கொடுத்தார். மறுபடியும் என்ஜின் பிக்கப் ஆனது. இம்முறை டான்ஸ் ஹீரோவோடு காதல். கிட்டத்தட்ட திருமணம் வரை போனது. டான்ஸின் குடும்பமே டப்பா டான்ஸ் ஆடிவிட்டது. அடுத்தடுத்து ‘யா’ நடிகர், மீண்டும் வம்பு என்று நடிகையின் காதலர் லிஸ்ட் நீண்டது. அந்தக்காலத்தில் காதல் மன்னன் கோலிவுட்டில் கோலோச்சியதைப் போல, இந்தக் காலத்தில் காதல் ராணியாக இந்த நடிகையும் கோடம்பாக்கத்தை ஆட்சி செய்தார்.
இதற்கிடையே வம்புவின் வட்டாரத்தில் சுற்றிக் கொண்டிருந்தவர், கைலாய தெய்வத்தின் பெயரை பிற்பாதியாக வைத்திருக்கும் ‘டா டீ’ பட இயக்குநர்.

‘டா டீ’ படு ஊத்தல் படம் வேறு. வம்புவுக்கும் புதுப்பட ரிலீஸ் எதுவும் வருடக்கணக்காக இல்லை என்பதால், கேங் மாற முடிவெடுத்தார் இயக்குநர். நேராக வம்புவின் போட்டியாளரான சூப்பர் மாப்பிள்ளையிடம் போய் வாய்ப்பு கேட்டார். மாப்பிள்ளைக்கு ஒப்புக்கொண்ட படங்களே ஏராளம் என்பதால், இயக்குநருக்கு எப்படி உதவுவது என்று தெரியாமல் விழித்தார். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார். “என்னாலே இப்போ நடிக்க முடியாது. ஆனா உனக்கு வாய்ப்பு கொடுக்கறதுக்காகவே ஒரு படம் தயாரிக்கிறேன்” என்று பெருந்தன்மையாக சொன்னார்.வெற்றியை பெயராகக் கொண்ட ஹீரோவை வைத்து மீடியமான பட்ஜெட்டில் படமெடுப்பதாக முடிவு ஆனது. இப்போதுதான் இயக்குநர் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தார். தன் முன்னாள் நண்பரான வம்புவை வெறுப்பேற்றுவதற்காக என்றே வம்புவின் முன்னாள் காதலியான அந்த நடிகையைத்தான் ஹீரோயின் ஆக்கவேண்டும் என்று அடம்பிடித்தார். அந்த நடிகையை ஒப்பந்தம் செய்ததால், மாப்பிள்ளை நினைத்ததைவிட பட்ஜெட் கொஞ்சம் கூடுதலாகவே எகிற ஆரம்பித்தது.

ஐம்பது நாள் படப்பிடிப்பு என்று திட்டமிட்டு தொடங்கினார்கள். படப்பிடிப்பில் எப்படியோ இயக்குநர், நடிகையை கரெக்ட் செய்துவிட்டார். அதன்பிறகு எங்கிருந்து படம் பிடிப்பது? படப்பிடிப்பே இயக்குநருக்கும், ஹீரோயினுக்குமான டேட்டிங் ப்ளேஸ் ஆகிவிட்டது. வெற்றிகரமான ஹீரோவுக்கோ செம காண்டு. தயாரிப்பாளரான மாப்பிள்ளையிடம் லேசுபாசாக சொல்லிப் பார்த்தார். மாப்பிள்ளை, பெருந்தன்மை மிக்கவர் என்பதால், “அது அவங்க பர்சனல். நமக்கு நம்ம வேலை ஆனா சரி” என்று சொல்லிவிட்டார்.

ஆனால்- வேலை ஆகவில்லை. ஐம்பது நாள் என்று திட்டமிடப்பட்ட படப்பிடிப்பு, எழுபத்தைந்து நாட்களுக்கு நீண்டது. திட்டமிடப்பட்ட பட்ஜெட்டைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக செலவு ஆனது. ‘ஆரம்பிச்சிட்டோம், முடிச்சிதானே ஆகணும்’ என்று மாப்பிள்ளை பல்லைக் கடித்துக் கொண்டே சகித்துக் கொண்டார். இயக்குநர் மீண்டும் மாப்பிள்ளையிடம் போய், “இன்னும் அஞ்சுநாள் கூடுதலா ஷூட் பண்ணணும். எக்ஸ்ட்ராவா ஃபண்ட்ஸ் தேவைப்படுது” என்று சொல்ல, வெடித்துவிட்டாராம் மாப்பிள்ளை.

“நானும் மனுஷன் தாங்க. எவ்வளவு நாளைக்குதான் நீங்க அடிக்கிற கூத்தை சகிச்சுப்பேன். நீங்க ரெண்டு பேரும் டேட்டிங் பண்ணுறதுக்கு நான் பைனான்ஸ் பண்ணணுமா? ஏற்கனவே கொடுத்த காசுலே சொன்னபடி படத்தை முடிச்சிக் கொடுங்க. இல்லைன்னா நடக்கறதே வேற” என்று ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார். இஷ்டத்துக்கும் கும்மியடித்துவிட்ட இயக்குநர், இப்போது படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு விழித்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி.

- மிஸ்டர் பிளாக்