பூஜையறைக்கு வந்த பாட்டுச் சகோதரிகள்!



தஞ்சாவூர் சூலமங்கலம் கிராமத்தில் பிறந்தவர்கள் ‘சூலமங்கலம் சகோதரிகள்’ என்று இசைத்துறையால் அழைக்கப்பட்ட ஜெயலட்சுமி மற்றும் ராஜலட்சுமி. முன்னவருக்கும் பின்னவருக்கும் நான்கு வயது வித்தியாசம்.  பெரிய அக்ரகாரத் தெருவில் வசித்த கர்ணம் ராமசாமி அய்யர், தனது இரண்டு  குழந்தைகளையும் ‘சங்கீத பூஷணம்’ கே.ஜி.மூர்த்தியிடம் சேர்த்து, இசை கற்க வைத்தார்.

திடீரென ஒருநாள் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. மாமா சாமிநாத அய்யரின் ஆதரவில் சென்னைக்கு வந்த சகோதரிகளுக்கு ‘ஆனந்த விகடன்’ காசாளர் வைத்தியநாத அய்யரும் ‘நாரதர்’ சீனிவாசராவும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்கள். பத்தமடை கிருஷ்ணன் சொல்லிக்கொடுத்த சங்கீதம், சகோதரிகளுக்கு ஏணிப்படியாக அமைந்தது.

 ‘நாரதர்’ சீனிவாசராவ் நடத்திய பொருட்காட்சியில் சூலமங்கலம் சகோதரிகள் பாடினார்கள். கச்சேரி கேட்கவந்த தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் மெய்மறந்து ரசித்து, பொய்யில்லாமல் பாராட்டினார்கள்.சகோதரிகளில் மூத்தவரான ஜெயலட்சுமி ஒருசில படங்களில் பாடினார். ‘போஜன்’,  ‘சக்ரதாரி’ மற்றும் ‘நாட்டிய ராணி’ படங்கள் பெயர் வாங்கித் தந்தன.

ராஜலட்சுமி பாடிய முதல் பாடல், ‘கனவில் கண்டேனே, கண்ணன் மேல் காதல் கொண்டேனே’.  குசலகுமாரி ஆடிய அந்த நடனப்பாடல் இடம்பெற்ற படம் ‘கிருஷ்ண பக்தி’ . பி.யு. சின்னப்பா, மூன்று வேடங்களில் நடித்த ‘மங்கையர்க்கரசி’ படத்தில் ‘அரனே ஆதி தேவா...’ என்கிற பாடல் ராஜலட்சுமியின் குரலில் ஒலித்தது. ‘ரத்னகுமார்’  ‘லைலா மஜ்னு’ படங்களிலும் ராஜலட்சுமிக்கு பெயர் கிடைத்தது.

சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் சகோதரிகளின் கச்சேரி நடந்தபோது பார்வையாளராக வந்திருந்தார் இசைமேதை ராஜரத்தினம் பிள்ளை. ‘நான் நாயனத்தில் வாசிக்கிறதை இவங்க குரலில் காட்டினாங்க. இவங்க அடைய வேண்டிய புகழ் இன்னும் எவ்வளவோ இருக்கு’ என்று வாழ்த்தினார். ‘நிலவே நிலவே ஓடி வா’ என்று கே.ஆர். ராமசாமியுடன் ராஜலட்சுமி பாடிய பாடல் ‘சொர்க்க வாசல்’  படத்தில் இடம்பெற்றது. அப்போது ராஜலட்சுமிக்கு 13 வயது. ‘சம்மதித்தால் என்றும் சந்தோஷமே’ என்று கே.ஆர்.ராமசாமியுடன் ‘துளிவிஷம்’ படத்தில் பாடினார்.

ஆர். பார்த்தசாரதி இசை அமைத்த முதல் படம் ‘மகதலநாட்டு மேரி’ அதில் ‘ஜெய ஜெயமே’ என்ற பாடலை ராஜலட்சுமியும் ராணியும் இணைந்து பாடினார்கள். ‘சபாஷ் மீனா’ படத்தில் டி.ஜி.லிங்கப்பா இசையில்  டி.எம்.எஸ் கூட்டணியில் பாடிய ‘சித்திரம் பேசுதடி’, பாடல் அவருக்கு பெயர்வாங்கித் தந்தது.

‘நல்ல இடத்து சம்பந்தம்’, ‘குழந்தை போல ஒரு கணம்’, ‘சொன்னாலும் கேட்பதில்லை’, தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை,  ‘சந்தேகம் தீராத வியாதி’, ‘பாட்டி சொல்லும் கதை கேட்டாலே’, தெய்வமே துணை  ‘கண்ணைக் கவரும் கலை’, ‘சிங்கார சங்கீதம்’, மாலா ஒரு மங்கல விளக்கு  ‘நான் ஆட நீ பாடு கண்ணா’, ‘பெண் மனம் போல’ ஆகிய படங்களில் தனியாகவும் பிறருடன் இணைந்தும் ராஜலட்சுமி பாடினார்.

 ‘நாலு வேலி நிலம்’ படத்தில், ஆத்மநாதன் இசையில் பாரதியாரின் ‘காணி நிலம் வேண்டும்’ பாடலையும் ராமலிங்க வள்ளலாரின் ‘உனக்கும் எனக்கும் இசைந்த பொருத்தம்...’ பாடலையும்  மகாதேவன் இசையில் பாடினார்.‘தங்கப் பதுமை’ படத்தில்  எம்.எல்.வசந்தகுமாரியுடன் சேர்ந்து பாடிய ‘வருகிறாள் உன்னைத் தேடி...’ ரசிகர்களை வசீகரித்தது. ‘ஒருமையுடன்’ என்றுஒரு பாடல். காருகுறிச்சி அருணாசலத்தின் நாதசுரத்துடன் இணைந்து ஒலித்து ராஜலட்சுமிக்குப் புகழ் சேர்த்தது. ‘படிக்காத மேதை’யின் ‘ஒரே ஒரு ஊரிலே...’ பாடலும் அவருக்கு பெருமை கொடுத்தது.

‘சாரதா’ படத்தில் இடம்பெற்ற ‘மணமகளே மருமகளே வா வா...’ பாடல் திருமண வீடுகளில் எல்லாம் திகட்டத்திகட்ட ஒலிக்கிறது. கே.வி.மகாதேவன் இசையில்  எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் எல்.ஆர்.அஞ்சலியுடன் இணந்து பாடி, வரவேற்பைப் பெற்றார். ‘குங்குமம், மங்கல மங்கையர் குங்குமம்...’ என்கிற  ‘குங்குமம்’ படப்பாடலும் ராஜலட்சுமியின் குரலுக்கு கவுரவம் சேர்த்தது. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் ‘கர்ணன்’ படத்தில் பாடிய ‘போய் வா மகளே போய் வா...’ பாடல் தாய்க்குலத்தின் ஆதரவை அள்ளியது.

ஜெயலட்சுமியின் கணவரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.டி.அரசு, ‘தரிசனம்’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை சூலமங்கலம் சகோதரிகளுக்கு வழங்கினார். அதில் ‘மாலை நேரத்து மயக்கம்...’ பாடல் பாட்டுப்பிரியர்களால் கொண்டாடப்பட்டது. விரகதாபத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவதாகவும், துறவு தேடுவதாக டி.எம்.செளந்தரராஜன் பாடுவதாகவும் அமைந்த அந்தப்பாடல், சகோதரிகளின் இசைத்திறனுக்கு சான்றாக நிற்கிறது. ‘டைகர் தாத்தாச்சாரி’ மற்றும் ‘பிள்ளையார்’ படங்களிலும் சகோதரிகளின் இசை கவனிப்பைப் பெற்றது.

‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...’, ‘ஆறுமுகமான பொருள்’ ஆகிய ‘கந்தன் கருணை’ படப்பாடல்கள்,  ‘எழுதி எழுதிப் பழகி வந்தேன்’ என்கிற ‘குமாஸ்தாவின் மகள்’ படப்பாடல், ‘வருவான்டி தருவான்டி...’ என்கிற ‘தெய்வம்’ படப்பாடல், ‘கெளரி கல்யாணம்’ படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடிய ‘திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்...’ ஆகியவை சகோதரிகளை பூஜை அறைக்குக் கொண்டுசேர்த்தன.

ஆபேரி, சுப பந்துவராளி, கல்யாணி, தோடி, மத்யமாவதி என ஐந்து ராகங்களில் சூலமங்கலம் சகோதரிகள் இசையமைத்துப்பாடிய ‘கந்தர் சஷ்டி கவசம்’ உலகில் உள்ள இந்துக்களின் வீடுகள்தோறும் இறைவணக்கப் பாடலாக பக்தியுடன் போற்றப்படுகிறது. மஞ்சள் காமாலையின் பிடியில் சிக்கி, 1992ல் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார் ராஜலட்சுமி. அவரது மகன் முரளியுடன் வசித்து வருகிறார் ஜெயலட்சுமி.

அடுத்த இதழில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்....