புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே....



ஒரு சினிமாப் பாடல் என்பது சாதாரண பாமரன் மனத்துக்குள்ளாகவே முணுமுணுத்துப் பாடுவதற்கு ஏற்ப எளிமையாக இருக்க வேண்டும். சற்று ஆழமாக யோசிக்கவும் சில சங்கதிகள் வேண்டும். அப்படிப்பட்ட திரையிசையை வழங்கிய மாமேதைதான் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அவரது இசை காலம் கடந்து நிற்க என்ன காரணம்?

பெரும்பாலான பாடல்கள், குறிப்பிட்ட ராகங்களை அடிப்படையாகக் கொண்டு -அதே நேரம் பாமரனையும் மகிழ்விக்கும் வண்ணம்- உருவாக்கப்பட்டவை என்பதுதான். கவிஞர் வைரமுத்துவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், “எப்படி தங்கத்தோடு சிறிது செம்பும் கலக்கப்பட்டு நகை செய்யப்படுகிறதோ, அதுபோல கர்நாடக சங்கீதத்தை அளவோடு இறக்கி, வெகுஜன மக்களின் ரசனைக்கு ஏற்ப இசை படைத்தார்”.

பாடலைக் கேட்பவருக்கு வரிகள் விளங்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். முன்னணி இசையமைப்பாளர்கள் சிலர் சொல்வார்கள், “என் இசையில் எந்த வரியைப் போட்டு கேட்டாலும் இனிமையாக இருக்கும்” என்று. எம்.எஸ்.வி, சில நேரங்களில் மெட்டுக்கு பாட்டு என்று கேட்டு வாங்கினாலும், பல நேரங்களில் கவிஞர்களின் பாடலுக்கு ஏற்ப மெட்டு போட்டு ஆயிரக்கணக்கான ஹிட்டுகளை வழங்கியிருக்கிறார்.

‘மேட்டருக்கு மீட்டர்.. மீட்டருக்கு மேட்டர்’ என்பது அவரது கொள்கை. மீட்டருக்கு -அதாவது டியூனுக்கு- பாடல் கேட்டு வாங்கும்போது, அந்த பாடல் -அதாவது மேட்டர்- சரியாக ட்யூனில் அமரவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார். ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ என்பதே அவரது அகராதியில் கிடையாது. சரியான வரிகள் பாடலில் பொருந்தி வரும்போதுதான் அதற்கு உயிர் கிடைக்கிறது என்பதை உணர்ந்திருந்தார்.

பாடல்வரிகள் தெளிவாக உச்சரிக்கப்பட வேண்டும் என்று உறுதியாக இருந்ததால்தான், தமிழை மிகச் சிறப்பாக உச்சரிக்கக்கூடிய பாடக பாடகியரையே தொடர்ச்சியாகப் பயன்படுத்தினார். ஹார்மோனியத்தில் அவரே வாசித்துக்காட்டி ட்யூனை நோட்ஸ் எடுக்கச் சொல்வார். அதை இசைக்கும் கலைஞர்கள் அவரவர் துறையில் மேதைகளாக இருந்தார்கள்.

உதாரணமாக, எம்.எஸ்.வி.க்கு புல்லாங்குழல் வாசித்த கலைஞர்களில் ஒருவர், அவரைவிட அதிக சம்பளம் வாங்கக்கூடியவராக இருந்தார். இதுபோல மிகச்சிறந்த கலைஞர்களைப் பயன்படுத்தியதாலேயே இன்றும் எம்.எஸ்.வி.யின் பாடல்கள் அவ்வளவு நேர்த்தியானதாக தலைமுறைகளைத் தாண்டியும் வாழ்கின்றன.
பாடல்களில் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் புதுமைகளைப் புகுத்தினார்.

 “நான் இசையமைத்த படத்தை தியேட்டருக்கு வெளியே நின்று கேட்டாலும், காட்சியின் சூழல் உங்களுக்கு என்னவென்று புரியும்” என்று தன் பின்னணி இசையின் சிறப்பு என்னவென்று அவரே சொல்லியிருக்கிறார். வெளிநாடுகளில் படம் பிடிக்கப்படும் படங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பின்னணி அமைப்பார். ‘சிவந்த மண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற படங்களை கவனித்தால் இது புரியும்.

 அந்தந்த மண்சார்ந்த இசையை ஒலிக்கச் செய்தால்தான் காட்சிகள் எடுபடும். பார்க்கும் ரசிகனும் படத்தில் ஒன்றிப்போவான் என்பது அவர் எண்ணம்.
கவிஞர் வைரமுத்துவின் தந்தை மறைந்தபோது, அவர் எழுதிய ஒரு கட்டுரையில்... ‘நாதஸ்வரக்காரர் சுதிவிட்டு அழுதுகொண்டிருந்தார்...... விஸ்வநாதனும் கண்ணதாசனும்  கல்யாண வீட்டில் அட்சதை அரிசியாய்; இழவு வீட்டில் வாய்க்கரிசியாய்க் கட்டாயம் இடம் பெறுகிறார்கள்.

என் தந்தையின் மரணத்தில் என் பாடல் ஒன்றுகூட இடம்பெறவில்லை. 8000 பட்டெழுதியும் தந்தைக்கு ஓர் ஒப்பாரி எழுதவில்லை. என்ன எழுதிவிட்டோம்? என்ன கிழித்துவிட்டோம்? சாதித்துவிட்டோம் என்பதெல்லாம் சும்மா’.

வைரமுத்து சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. ஒவ்வொரு தமிழன் பிறக்கும் போதும் சரி, இறக்கும்போதும் சரி, எம்.எஸ்.வி. நிச்சயமாக அருகில் இருப்பார். உடலால் அவர் காலமாகி இருந்தாலும், அவர் இசையமைத்த பாடல்கள் நிரந்தரமானவை. என்றும் அழிவதில்லை. எந்த நிலையிலும் அதற்கு மரணமில்லை.

 ஒரு குறிப்பிட்ட ட்யூனுக்கு வரிகள் தோன்றாமல் யோசித்துக் கொண்டிருந்தார் கண்ணதாசன். எம்.எஸ்.வி.யே, இப்படி ஆரம்பியுங்களேன் என்று அவராக பாட ஆரம்பித்தார். “இன்று முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னிக்கு ராத்திரிக்கு தூங்கவேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்”. கண்ணதாசனுக்கு ஆச்சரியம்.

 “அபாரம்” என்று பாராட்டியவர், உடனே பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாய் எடுத்து அன்பளிப்பாகக் கொடுத்தார். திடீரென்று ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்த கவிஞர், கொடுத்த காசை திரும்ப வாங்கிக் கொண்டார். “ஏண்டா விசு, எவனாவது இன்னைலேருந்து குடிக்க மாட்டேன்னு சொல்லுவானா. பொருட்பிழை இருக்கே? அதுவும் என்கிட்டேயே சொல்றீயே? நாளையிலேருந்து குடிக்க மாட்டேன்னு வேணுமின்னா சொல்லுவான். நானா இருந்தாலும் அப்படித்தான் சொல்லுவேன்” என்றார். இப்படித்தான் கேலியும், ஜாலியுமாக அமரத்துவம் மிக்க பாடல்களை உருவாக்கினார்கள்.

 ‘ராஜபார்ட் ரங்கதுரை’ கம்போசிங்கின் போது பல மெட்டுகள் போட்டார்கள்... எம்.எஸ்.வி போடும் ட்யூன் கண்ணதாசனுக்கு பிடிக்கவில்லை. கண்ணதாசனுக்கு பிடித்த ட்யூன் இவருக்கு பிடிக்கவில்லை. வழக்கம்போல இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது டீ கொடுக்க வந்த பையன் ஜன்னல் வழியாக சைகை செய்திருக்கிறான், ‘முதல் மெட்டு, ஐந்தாவது மெட்டு இரண்டையும் கலந்து போடுங்க’ என்று.

 அவனது பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அந்த மாமேதைகள்  கொடுத்த ஹிட்டுதான் ‘மதன மாளிகையில் மந்திர மாலைகளாம், உதய காலம் வரை உன்னத லீலைகளாம்’  ‘உத்தமன்’ படத்தில் ‘காதல் சந்நியாசி’ பாட்டு செம ஹிட்டு. எல்லோரும் இதற்காக எம்.எஸ்.வியை பாராட்டியபோது, “ரகுபதி ராகவ ராஜாராம் பாடலைத்தானய்யா கொஞ்சம் வேற விதமா கையாண்டேன்” என்று வெளிப்படையாக சொன்னார். புகழ்மாலைகளை தாங்குவதற்கு அவரது கழுத்து என்றுமே கூச்சப்படும்.

 ‘புதிய பறவை’ படத்துக்கு ஸ்டைலான இசையமைப்பு வேண்டும் என்று கேட்டபோது, சென்னையில் பிரபலமாக இருந்த வெஸ்டர்ன் மியூசிக் குழுவினரை பயன்படுத்தினார் எம்.எஸ்.வி. ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடல், அந்தக் காலத்து ஆங்கிலப் பாடல்களுக்கு இணையாக ஹிட் ஆனது. “நம்மளோட நட பைரவி ராகத்தோட எசென்ஸைத்தான் பல்லவி ஆக்கினாரு எம்.எஸ்.வி” என்று அந்த ரகசியத்தை போட்டுடைத்தார் ராமமூர்த்தி. நம் கலாச்சாரத்தின் சொத்தான கர்நாடக இசையை, மேற்கத்திய பாணி இசைக்கு சவால் விடும் வகையில் மாற்றியமைத்த சாதனைக்கு சொந்தக்காரர் அவர்.

 ‘ஊட்டி வரை உறவு’ படத்துக்காக ‘தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது’ பாடலுக்கு மெல்லிசை போட்டிருந்தார் மெல்லிசை மன்னர். “கொஞ்சம் பெப்பியா மாத்தித் தரமுடியுமா?” என்று இயக்குனர் ஸ்ரீதர் கேட்டபிறகு, எம்.எஸ்.வி. கொடுத்ததுதான் படத்தில் இடம்பெற்ற துள்ளல் பாடல். இப்போது கேட்டாலும் ‘பெப்’ கிடைக்கிறது என்பதுதான் அப்பாடலின் சிறப்பு.

 ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்கு அழியாவரம் பெற்ற பாடல் ஒன்று வேண்டும் என்று கேட்டார் ஸ்ரீதர். போட்டுக் கொடுத்த ட்யூன்கள் எல்லாம் ஸ்ரீதரை முழுமையாக திருப்திப் படுத்தவில்லை. பெங்களூர் ஹோட்டல் ஒன்றின் லாபியில் நின்று எம்.எஸ்.வி.யும், ராமமூர்த்தியும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எங்கோ தூரத்தில் ஏதோ ஒரு பாடல் ஒலிக்கிறது.
லேசாக காதில் விழுந்த அந்த பாடலின் ஒரு வரியில் எம்.எஸ்.வி.க்கு ஸ்பார்க் கிடைக்கிறது. அதை அப்படியே வளர்த்து அவர் போட்ட ட்யூன்தான் “நெஞ்சம் மறப்பதில்லை. அது நினைவை இழப்பதில்லை”. அழியாவரம் பெற்ற பாடல்தான் இல்லையா?

 ஒருமுறை பாடல் பதிவின்போது வரவேண்டிய புல்லாங்குழல் கலைஞர் தாமதமாக வந்தார். கோபத்தில் இருந்த எம்.எஸ்.வி., அந்த கலைஞருக்கு தண்டனையாக மிக சிரமமான ஸ்வரத்தினை வாசிக்கும்படி பணித்தார். சவாலை ஏற்றுக்கொண்ட புல்லாங்குழல் கலைஞரும் அதை மிக திறமையாக கையாண்டார். அவர்கள் இருவரின் கோபமும், சவாலும் நமக்கு அளித்த பரிசுதான் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது’ என்கிற ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் இடம்பெற்ற பாடல். இன்றும்கூட அப்பாடலை மெல்லிசை மேடைகளில் பாடும்போது, புல்லாங்குழல் கலைஞர்கள் சிரமப்பட்டே வாசிக்கிறார்கள்.

 எம்.எஸ்.வி.யின் இசையில் ‘ஷெனாய்’ வாத்தியத்துக்கு முக்கியப்பங்கு உண்டு. லாவகமாக தன் இசையில் அதை கொண்டு வருவார். இவரது பெரும்பாலான படங்களுக்கு ஷெனாய் வாசித்த கலைஞரின் பெயர் சத்யம். அவர் காலமானபோது உணர்ச்சிவசப்பட்ட எம்.எஸ்.வி., “இத்தோடு ஷெனாய் செத்தது. இது சத்யம்” என்றார். தன்னுடன் பணிபுரிந்த கலைஞர்களின் மீது வரைமுறையில்லா முரட்டுப்பாசம் வைத்திருந்த குழந்தை அவர்.

- பி.வேதா