கவர்ச்சி ராணி அஞ்சலி பராக் பராக்!



‘சகலகலா வல்லவன்’ சுராஜ் கலகல பேட்டி!

காமெடி பிராண்டி கலக்குவதில் சுராஜ் கில்லாடி. ‘சகலகலா வல்லவன்’ வெடிக்க ரெடி. ரிலீஸ் பரபரப்பில் இருந்த சுராஜ், ரிலாக்ஸாக ஓய்வெடுத்த நொடியில் அவர் முன் ஆஜரானோம்.

“டைட்டில் ஏன் மாத்திட்டீங்கன்னுதானே கேட்கப் போறீங்க?” என்று டைரக்டாகவே மேட்டருக்கு வந்தார்.

“அப்பாடக்கர்’னு டக்கர் டைட்டில்தான் வெச்சிருந்தோம். அந்த அதிரடி சொல்லுக்கு அர்த்தம் ‘எல்லாம் தெரிஞ்சவன்’ என்பது. ஆனா ‘டக்கர்’ என்பது ஆங்கில வார்த்தைன்னு சொல்லிட்டாங்க. அப்படின்னா ‘அப்பாடக்கர்’ என்பதற்கு தமிழில் என்ன அர்த்தம்னு ஆராய்ச்சி செஞ்சோம். விடையாக வந்தது ‘சகலகலா வல்லவன்’. இந்த டைட்டில் ஏ.வி.எம். முருகன் சாரிடம் இருந்தது. நம்ம படத்தோட தயாரிப்பாளர் முரளிதரன் அவரிடம் கேட்க, பெருந்தன்மையா அனுமதி கொடுத்திருக்காரு.”

“கதை?”

“தர்மசங்கடமான கேள்வி. சுராஜ் படத்துலே என்ன கதைன்னு கேட்ட உங்களோட நம்பிக்கையை பாராட்டி ஆளுயர சிலை வெச்சா என்னன்னு தோணுது பாஸ். இருந்தாலும் கஷ்டப்பட்டு சொல்ல முயற்சிக்கிறேன். வீணாப்போன வெட்டிப்பசங்க ரெண்டு பேர். அவங்க ரெண்டு பேரும் ஊர் சுத்துறதும், ஒரண்டை இழுக்கறதும்தான் கதை. ஓக்கேவா?

ஜெயம் ரவியும், சூரியும் பரம்பரை எதிரிகள். ரெண்டு பேரும் சந்திக்கும் இடமெல்லாம் ‘அக்னி நட்சத்திரம்’ பாணியில் ரணகளம்தான். சூரியோட அத்தைப் பொண்ணு அஞ்சலி. ரவியோட முறைப்பொண்ணு த்ரிஷா. இரு துருவங்கள்தான் ஒண்ணை ஒண்ணு ஈர்க்கும் என்கிற அறிவியல் விதியின்படி இவரோட முறைப்பொண்ணை அவரும், அவரோட முறைப்பொண்ணை இவரும் டாவு கட்டுவாங்க. கடைசியில யாருக்கு யாரு மாப்பிள்ளைன்னு முழுநீள காமெடி கலாட்டா. படம் ஓடுற தியேட்டர்ல ஸ்க்ரீனெல்லாம் சிரிப்பால கிழியப்போவுதுன்னு மட்டும் இப்பவே கேரண்டி கொடுக்கறேன்.”



“காமெடி கதையில் ஜெயம் ரவி?”

“இதே கேள்வியைத்தான் ரவி சாரும் கேட்டாரு. ஒரு பக்கம் ‘ரோமியோ ஜூலியட்’ மாதிரி காதல் படம், இன்னொரு பக்கம் ‘தனி ஒருவன்’ மாதிரி ஆக்‌ஷன் படம்னு பண்ணுறீங்க. ஏன் எங்களுக்காக காமெடி ட்ரை பண்ணக்கூடாதுன்னு கேட்டேன். என்னோட அப்ரோச் அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. கம்ப்ளீட்டா சீன் பை சீனா நான் சொன்ன விதத்தில் அசந்துட்டு, க்ரீன் சிக்னல் போட்டாரு.”

“வடிவேல், விவேக்குன்னு ஜோடி சேர்ந்து அமர்க்களம் பண்ணீங்க. அடுத்து சூரியா?”

“நான் எப்பவுமே காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்னு எல்லாருக்கும் தெரியும். ஹீரோயினை செலக்ட் பண்ணுறதுக்கு எப்படி எல்லாரும் மெனக்கெடுறாங்களோ, அதுமாதிரி காமெடியனை செலக்ட் பண்ண நேரம் எடுத்துப்பேன்.

 ஒண்ணுக்கு நூறு வாட்டி யோசிச்சிதான் ஓக்கே பண்ணுவேன். சின்ன புஜ்ஜி சின்னசாமி என்கிற இந்த கேரக்டருக்கு சூரியைத் தவிர வேற யாரும் செட் ஆகமாட்டாங்க. கெட்டப் சேஞ்செல்லாம் பண்ணியிருக்காரு. பளிச்சின்னு தெரியும். வழக்கத்துக்கு மாறா இதில் நிறுத்தி நிதானமா டயலாக் பேசி அசத்தியிருக்காரு. காமெடி ஜாம்பவான் விவேக்கும் இருக்காரு. அவரோட கேரக்டர் பத்தி நான் பேசமாட்டேன். படம் வந்தப்புறம் எல்லாரும் பேசுவீங்க.”



“தமிழ்நாடே எதிர்பார்க்குது. அஞ்சலியோட ரீ என்ட்ரி எப்படி இருக்கப்போகுது?”

“இரண்டு ஹீரோயின். ஒருத்தங்க துறுதுறுன்னு இருக்கணும். அதுக்கு அஞ்சலிதான் கரெக்ட். அவங்களை படத்துக்குள்ளே கொண்டுவர அநியாய அலைச்சல். இவங்களை புக் பண்ணுறதுக்குள்ளே கன்னித்தீவு கதையே முடிஞ்சிடுமோன்னு சலிச்சிப் போயிருந்தோம். ஒருநாள் திடீருன்னு அவங்களே லைனுக்கு வந்தாங்க. ‘தமிழில் வேண்டாமே’ன்னு கொஞ்சம் தயக்கமா சொன்னாங்க.

முதல்ல கதையைக் கேளுங்க. அப்புறம் வேணுமா வேணாமான்னு முடிவு பண்ணுங்கன்னு சொல்லிட்டு ‘வீணாப்போன வெட்டிப்பசங்க ரெண்டு பேரு..’ன்னு ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல அசுவாரஸ்யமா கேட்டவங்க விறுவிறுப்பாகி, ‘நிச்சயம் பண்ணலாம் சுராஜ்’னு சுறுசுறுப்பு ஆயிட்டாங்க.

அஞ்சலின்னா மங்களகரமான தோற்றம்தான் நினைவுக்கு வரும். இதில அவங்களுக்கு அசத்தலான க்ளாமர் லுக். பாங்காக் அருகில் பட்டாயாவுல ஒரு பாட்டு எடுத்திருக்கிறோம். பட்டையை கிளப்பி இருக்காங்க. சும்மா கிர்ருன்னு வந்திருக்கு. அவங்க ரொம்ப என்ஜாய் பண்ணி எங்க படத்தில ஒர்க் பண்ணியிருக்காங்க. இதோட பலன் ஸ்க்ரீனில் தெரியும்.”



“திரிஷா?”

“ரெண்டு ஹீரோயினுக்குமே ஈக்குவல் ரோல்தான். நீங்க எதிர்பார்க்கிற ஸ்கூப் நியூஸ் எதுவும் என்கிட்டே இல்லை. ரெண்டு பேருக்கும் காம்பினேஷன் சீன்ஸ் கூட ரொம்ப குறைவுதான். எந்த பிரச்சினையுமில்லாம பூசணிக்காய் உடைச்சிருக்கோம். கண்ணு போட்டுறாதீங்க.”

“திரிஷாவை எப்படி சமாளித்தீர்கள்?”

“திரிஷா, அஞ்சலி இருவருக்கும் சமமான ரோல் என்பதால் நோ பாலிடிக்ஸ். ரெண்டு பேருக்கும் காம்பினேஷன் குறைவு என்பதால் ஸ்பாட் டென்ஷனும் இல்லை. ஈகோ மோதலும் இல்லை. ஐயம் வெரி ஹேப்பி!”

“உங்க படம்னாலே பாட்டெல்லாம் சும்மா பரபரன்னு இருக்குமே?”

“தமன் தெலுங்கில் போட்ட சில மெட்டுகளையே திரும்ப தமிழுக்கு பண்ணிக் கொடுங்கன்னு விருப்பப்பட்டு அவரிடம் கேட்டேன். அந்தப் பாட்டெல்லாம் அங்கே அதிரிபுதிரி ஹிட் ஆனவை. அதனாலேதான் அதையே ரீபுரொடியூஸ் பண்ணி கொடுக்க சொன்னேன். சூப்பரா தந்திருக்காரு.

ஏன் பாட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர்றோம்னா, நாம எடுக்கிறது பக்கா கமர்ஷியல் படம். ‘காக்கா முட்டை’ மாதிரி ஆல்டர்னேட் படங்கள் வந்து ரசிகர்களோட ரசனையை மேம்படுத்தியிருக்கு. இரண்டு மணி நேரம் அசையாம அந்தப் படங்களை பார்க்கிறாங்க. நம்ம படம் முழுக்க காமெடி தோரணம் கட்டினாலும், சில சீன்களில் கொஞ்சம் சுணங்கிட்டா கூட போர் அடிக்குதுன்னு பேஸ்புக், ட்விட்டர்ல எல்லாம் கிழிச்சி தொங்க விட்டுடுவாங்க. அதனாலதான் பாட்டு சீனையெல்லாம் ரொம்ப மெனக்கெட்டு எடுக்கறோம். படம் தொய்வில்லாம போறதுக்கு பாட்டு எடுபடறது ரொம்ப அவசியம்.”

“அலெக்ஸ் பாண்டியன்?”

“இந்த டைட்டிலைக் கேட்கறப்ப எல்லாம், கஜினிக்கு வந்த மாதிரி ஷார்ட் டெர்ம் மெமரி வந்துக்கிட்டிருந்தது. இப்போ அந்தப் படம் வந்து லாங் டெர்ம் ஆகிட்டதால லேசா நினைவில் இருக்கு. யார் மீதும் பழிபோட விரும்பலை. ‘அலெக்ஸ் பாண்டியன்’ தோல்விக்கு நான்தான் முழுக் காரணம். காமெடியாகவும் சொல்லாம, சீரியஸாகவும் சொல்லாம சொதப்பிட்டேன்.

முதல் பாதி முழுக்க நம்ம வழக்கமான கூத்தை கட்டிட்டு, இரண்டாவது பாதியில் மருத்துவத்துறை அநியாயங்களை எதிர்த்து பொங்கியிருந்தேன். நாம மெசேஜ் சொன்னா, ஆடியன்ஸ் ஏத்துக்க மாட்டாங்க என்கிற அரிய உண்மை புரிஞ்சது. இனிமே வழக்கமான காமெடி ரூட்டுலேயே வண்டிய ஓட்டுறா சூனாபானான்னு என்னைத் தேத்திக்கிட்டு ஓடிக்கிட்டிருக்கேன். நம்ம படம் பார்க்க தியேட்டருக்கு வர்றவங்க, எல்லா கவலைகளையும் மறந்து வாய்விட்டு சிரிக்கணும். விழுந்து விழுந்து சிரிக்கணும். குலுங்கிக் குலுங்கி சிரிக்கணும். அதுமட்டும்தான் குறிக்கோள். ‘சகலகலா வல்லவன்’, நிச்சயமா ஒரு சிரிப்பு சுனாமி.”

- சுரேஷ் ராஜா