ரஜினிக்கு ஜோடி சதா!



ஒரு காலத்தில் அஜீத், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன், ஸ்ரீகாந்த் போன்ற இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். யார் கண் பட்டதோ தெரியவில்லை. சான்ஸ் கிடைக்காமல் தவிக்கிறார். அதனால்தானோ என்னவோ, ‘எலி’யில் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்தார். மும்பையில் பெற்றோருடன் வசிக்கும் சதாவை போனில் பிடித்தோம்...

“திரைத்துறையில் பத்து வருடங்களாக இருக்கிறீர்கள். திருப்தியாக உணர்கிறீர்களா?”

“தமிழ்,  இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று முப்பத்தைந்து படங்களில்  ஹீரோயினாக நடித்துவிட்டேன். இன்னும்கூட நான் முழு திருப்தி அடையக்கூடிய  வேடம் எனக்கு அமையவேயில்லை. என்னுடைய அழகுக்கும் திறமைக்கும் நான்  இருந்திருக்க வேண்டிய இடமே வேறு. ஆனால்- யாரோ திரைமறைவில் ஏதோ  செய்கிறார்கள் என்று மட்டும் புரிகிறது. எங்கோ ஏதோ தவறு நடந்திருக்கிறது.  அதை கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். இனிமேல் அதுபோல நடந்துவிடக்கூடாது  என்று கவனத்தோடு இருக்க வேண்டும்.”

“ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நீங்கள் நடிக்கப் போவதாக ஒரு பேச்சு இருக்கிறது. உண்மையா?”

“கிண்டல் பண்ணாதீங்க சார். ஆனா, ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியா நடிக்க என்னை கேட்டது உண்மைதான். லகலக லகலக லக்கா என்று ஜோதிகா கலக்கினாரே சந்திரமுகியில். அந்த வேடத்தில் நடிக்கவும் என்னிடம்தான் கேட்டார்கள், நான் மறுத்துவிட்டேன். இப்போது சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால், அதுதான் உண்மை. எனக்கு முன்பாக சிம்ரனிடமும் பேசி அவரும்கூட மறுத்துவிட்டார்.

ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த வேடத்திலாவது நடிக்கச் சொன்னார்கள். அப்போது நான் ஒப்புக்கொண்டிருந்த படங்களுக்கே கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்ததால் மறுத்துவிட்டேன். சந்திரமுகி-2 என்று கன்னடத்தில் பி.வாசு எடுத்தபோதும் கேட்டார்கள். அப்போதும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அப்போதிருந்த என்னுடைய கமிட்மென்டுகள் அப்படி”

“பி.வாசு டென்ஷன் ஆகியிருப்பாரே?”

“அப்படி நடந்துகொண்டால் யாராக இருந்தாலும் திமிர் பிடித்த பெண் இவள் என்று நினைப்பது சகஜம்தான். நம்முடைய நிலைமை என்னவென்று அவர்களுக்கு எப்படித் தெரியும். பி.வாசு சாருக்கும் என் மீது கோபம் வந்திருக்கும். அவரை கூல் செய்ய வேண்டுமென்று ஒப்புக்கொண்ட படம்தான் ‘புலிவேஷம்’. இதில் ஆர்.கே.வுக்கு ஜோடி. படம் ரிலீஸ் ஆனபிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என்றுதான் நினைத்தேன்.

துரதிருஷ்டவசமாக ஒரு படம்கூட புக் ஆகவில்லை. வேண்டாம் என்று நினைக்கும்போது வாய்ப்புகளுக்கு மேல் வாய்ப்புகள் வருவதும், வேண்டும்போது யாருமே சீண்டாமல் போவதும் சினிமாவில் சகஜம்தான். வேறு வழியில்லாமல் சென்னையை விட்டுவிட்டு மும்பைக்கு வந்துவிட்டேன். தமிழில் பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது.”

“மதகஜராஜாவில் விஷாலோடு நடித்தீர்கள் இல்லையா?”

“சுந்தர்.சி இயக்கும் படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். ஹீரோயின் கேரக்டரும் பேசப்படும் என்பதால் அவரது இயக்கத்தில் மதகஜராஜா படத்தில் அஞ்சலி, வரலட்சுமியோடு இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டேன். அடிப்படையில் நான் ஒரு டேன்ஸர். அந்தப் படத்தில் விஷாலோடு போட்ட ஆட்டம் செமத்தியானது. அந்தப் படம் ரிலீஸ் ஆகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனோ, அது ரிலீஸ் ஆகாமலேயே கிடப்பில் கிடக்கிறது.”

“கதை கேட்கிறீர்கள். ஆனால் ஓக்கே செய்வதில்லை என்று உங்கள் மீது குற்றச்சாட்டு இருக்கிறதே?”

“ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட் என்று நிறைய பேர் வந்து கதை சொல்கிறார்கள். நடிக்கலாமா என்று ஆசை வரும். ஆனால் மறுத்துவிடுகிறேன். ஒருவேளை அந்தப் படம் கமர்ஷியலாக ஓடவில்லை என்றால் மொத்தப் பழியையும் என் மீது தூக்கிப் போட்டுவிடுவார்களோ என்று அச்சம்தான். ராசியில்லாத ஹீரோயின் என்று முத்திரை குத்திவிட்டால் மூலையில் உட்கார்ந்துவிட வேண்டியதுதான்.”

“அப்படியென்றால் என்னமாதிரி படங்கள்தான் நடிப்பீர்கள்?”

“முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கத்தான் ஆசை. கிடைக்கும் வாய்ப்பெல்லாம் புதுமுகங்களோடு நடிக்கக்கூடியதாகத்தான் இருக்கிறது. அதுபோல ஒப்புக்கொள்ளும் போது பயம் ஏற்படுகிறது. ஏனெனில் அந்தப் படம் ரிலீஸாக வேண்டும். வர வேற்பு கிடைத்து வெற்றிபெற வேண்டும். கமர்ஷியல் ஹிட் ஆன படங்களில் நடித்தவர்களுக்குத்தான் சினிமாவில் மரியாதை. ரசிகர்களின் ரசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகையாக இருப்பதுதான் என்னுடைய விருப்பம்.”

“உங்களைப் பற்றி கிசுகிசு எழுத எங்களுக்கு வாய்ப்பே அமையமாட்டேன் என்கிறதே?”

(சத்தமாக சிரிக்கிறார்) “என்னைப் பற்றி எப்படி கிசுகிசு வரும்? ஷூட்டிங் முடிந்தவுடனேயே வீட்டுக்குப் போய்விடுவேன். கூட பணியாற்றுபவர்களிடம் நட்பு வைத்துக் கொள்வதில்லை. எனக்கு நண்பர்களும் அதிகமாக இல்லை. திரையுலகில் நிறைய நண்பர்களோடு இருப்பவர்கள்தான் ஈகோ பிரச்சினை, அதன் காரணமாக கருத்து வேறுபாடு என்று அவதிப்படுகிறார்கள்.

 இதனால் ஒருவரைப் பற்றி ஒருவர் தவறாக தகவல்களைப் பரப்புகிறார்கள். இதனால்தான் நான் யாரிடமும் நெருங்கிப் பழக அச்சப்படுகிறேன். நான் உண்டு, என் வேலை உண்டு என்று அமைதியாக இருக்கிறேன். இதுதான் என்னுடைய பலம். அதேநேரம் இதுதான் என்னுடைய பலவீனமும்”.

“உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கு பாய்ஃபிரண்டே கிடையாதா?”

“மும்பையில்தான் வசிக்கிறேன். இந்திப் படங்களிலும் நடிக்கிறேன். ஆனாலும் நட்சத்திர ஹோட்டல் இரவுநேர பார்ட்டிகளில் என்னை யாருமே பார்த்திருக்க முடியாது. நிஜமாகவே எனக்கு பாய்ஃபிரண்ட் கிடையவே கிடையாது. ஆனாலும் ஒவ்வொரு பெண்ணும் திருமணம் செய்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். என்னை முழுமையாக நம்பக்கூடிய ஓர் ஆணைத் தேர்ந்தெடுத்து என் கணவராக ஏற்றுக் கொள்வேன். நிச்சயமாக ரகசியத் திருமணமாக இருக்காது. உங்களுக்கெல்லாம் இன்விடேஷன் கொடுத்து அழைப்பேன். மொய் கவரோடு கட்டாயம் வந்து கலந்துக்கணும்.”

- தேவராஜ்