மாரி விமர்சனம்



செஞ்சிருவேன், பார்த்துக்க!

‘ஒரே ஒருமுறை ‘போட்டுத்தள்ளிவிட்டு, (அதுவும் அரைகுறையாக) ஊரே பயப்படும் தாதாவாக கெத்து காட்டும் குப்பத்து இளைஞனின் கதை. புறா பந்தயத்தில் தொடர்ந்து ஜெயிக்கும் ஹீரோவாகவும் இருக்கும் அந்த இளைஞனுக்கு எதிரிகளாலும், காவல்துறையாலும் வரும் தொல்லைகள் மற்றும் அதற்கான தீர்வை திரைக்கதையாக்கி, படம் காட்டுகிறார்கள்.

கழுத்து நிறைய நகைகள், முறுக்கு மீசை, கிருதா, வேட்டி-சட்டை என பளபள கெட்-அப்பில் வருகிறார் தனுஷ். படம் முழுக்க அவர்தான் வருகிறார்; நிற்கிறார். ‘‘எரிஞ்சு போன கூண்டுக்கு புறா திரும்பி வராது’’ என்றதும் அவர் முகத்தில் தவழும் சோகம் நம்மையும் பற்றுகிறது. போலீசிடம் காட்டிக்கொடுத்துவிட்டு, கூட்டத்தில் ஒளிந்திருக்கும் காஜல் அகர்வாலை, கண்களால் தேடி, ஒரு லுக் விடுகிறாரே, அது ஒருபக்க வசனத்துக்கு சமம்.

‘’நான் கலப்படமா நல்லவனா இருக்கறதவிட, சுத்தமான கெட்டவனா இருக்கேன்’’ என்று வசனம் பேசும்போதும், ‘செஞ்சிருவேன்’ என்று விரல்களால் காற்றைக் கலைக்கும்போதும் கைதட்டல்களை அள்ளுகிறார். ஃபேஷன் டிசைனராக வரும் காஜல் அகர்வாலுக்கு காதல் காட்சிகளில்கூட அதிகம் வேலையில்லை.  இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கும் விஜய் யேசுதாஸ், பால்வடியும் முகத்தில் பீர் வடிவதுபோல காட்டுவதற்கு ரொம்பவே முயற்சி செய்திருக்கிறார்.

சண்முகராஜனுக்கு காட்டப்படும் பில்டப், காட்சிகளில் ‘சப்’ ஆகிவிடுகிறது. மைம் கோபி மிரட்டுகிறாரா, பதுங்குகிறாரா என்று தெரியவில்லை. தனுஷின் நண்பர்களாக வரும் ரோபோ சங்கர் முக்கியத்துவம் பெறுகிறார். ஆனால், பாடி லாங்வேஜில் விஜயகாந்தை நினைவு‘படுத்தி’க்கொண்டே இருக்கிறார். அலட்டிக்கொள்ளாமல் அப்ளாஸ் வாங்குகிறார் ‘கல்லூரி’ வினோத்.

ஏட்டு ஆறுமுகமாக வரும் காளி வெங்கட் எதார்த்த நடிப்பில் எடுபடுகிறார். காஜலின் அம்மா ரஞ்சனி பதற்றம் காட்டுகிறார். ரோகேஷ் எழுதிய ‘பகுலு ஒடையும் டகுலு மாரி...’, பாடலை தனுஷ் பாடி, ஆடுகிறார். ‘டான் யூ டான் யூ ...’ என்று தனுஷ் எழுதிப்பாடும் பாடலுக்கு அவருடன் அனிருத் ஆட்டம் போடுகிறார். விக்னேஷ் சிவன் எழுதி தனுஷ், சின்னப்பொண்ணு, மகிழினி பாடிய ‘தப்பாதான் தெரியும்...’  பாடலும் அனிருத் இசையில் காதுகளைக் கவர்கிறது.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு பிரகாசம். மாஸ் படம் என்று சொன்னார்கள். புறாப்பந்தயமும் விரிவாக இல்லை, தாதாயிஸமும் சவுண்டாக இல்லை. சென்னை பாஷை தெரிந்தவரை உடன் வைத்துக்கொண்டு வசனம் எழுதி, புறாப்பந்தயம் நடத்துபவர்களிடம் ஆலோசனை கேட்டு படமாக்கியிருந்தால், இன்னும் நல்லா செஞ்சிருக்கலாம்.

-நெல்பா