அனுபவத்தைப் பாட்டாக்கிய அமரகவி!



செட்டிநாட்டின் சிறுகூடல்பட்டியில் சாத்தப்பன்- விசாலாட்சி தம்பதிக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்தார், முத்தையா என்ற இயற்பெயர்கொண்ட கவியரசு கண்ணதாசன். எட்டாம் வகுப்புடன் அவரது படிப்பு முடிவுக்கு வந்தது.கண்ணதாசனின்  முதல்கவிதை ‘காலை குளித்தெழுந்து…’ என்று 1944ல் பிறந்தது.

புதுக்கோட்டை அருகே ராமச்சந்திரபுரத்தில் இருந்த ‘திருமகள்’ பத்திரிகையில், கவிஞரின் முதல் இலக்கியப்பணி ஆரம்பமானது. அப்புறம் சில பத்திரிகைகளில் வேலை பார்த்தார். பின்னர் சேலம் மாடர்ன் தியேட்டர்சில் வேலை கிடைத்தது.

அது, அவரது சினிமா எழுத்துக்கானதாக இருக்கவில்லை. எனவே அந்த வேலையை விட்டு விலகி, கோவை ஜூபிடர் பிக்சர்ஸ்க்கு வந்தார். அங்கிருந்த மேலாளர் டி.எஸ்.வேங்கடசாமி, முன்னரே அறிமுகமானவர் என்பதால், அவரிடம் கதை, வசனம் எழுத வாய்ப்புக் கேட்டார். அவர், இயக்குநர் ராம்நாத்திடம் அறிமுகம் செய்துவைத்தார். பாடல் எழுத வாய்ப்புக்கிடைத்தது.

சூழ்நிலைக்கேற்ப கவிஞர் எழுதிய வரிகளைப் பாராட்டிய எஸ்.எம்.சுப்பையா நாயுடு, அதன்பிறகு மெட்டுப்போட்டு பதிவு செய்தார். ‘கலங்காதிரு மனமே…’ என்பதுதான் கவிஞர் எழுதிய முதல் திரைப்பாடலாக அமைந்து ‘கன்னியின் காதலி’ படத்தில் இடம்பெற்றது.

கவிஞரின் திறமையை அறிந்த இயக்குநர் ராம்நாத், மேலும் சில பாடல்களை எழுதச்சொல்லி, படத்தில் சேர்த்துக்கொண்டார். முதல் படத்தில் ஒரு பாட்டுக்கு கவிஞருக்கு கொடுக்கப்பட்ட சன்மானம் நூறு ரூபாய்.

‘பராசக்தி’ படத்தில் பாடல் வாய்ப்புக் கேட்டுப்போன கவிஞரை நீதிபதி கேரக்டர் கொடுத்து நடிக்கவைத்துவிட்டார்கள். அது 1949ஆம் ஆண்டு.அதுவரை கண்ணதாசன் என்று மட்டுமே அறியப்பட்டவரை, பொள்ளாச்சியில் மேடையேற்றி, ‘கவிஞர் கண்ணதாசன்’ என்று அறிமுகப்படுத்தினார் கலைஞர்.

‘மகாதேவி’யில் ‘கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே…’. ‘மன்னாதி மன்னன்’ படத்தில் ‘அச்சம் என்பது மடமையடா…’, ‘பணத்தோட்டம்’ படத்தில் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…’, ‘என் அண்ணன்’ படத்தில் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…’, ‘ கடவுள் ஏன் கல்லானான்…’ என்று கவிஞர் எழுதிய பாடல்கள் எம்.ஜி.ஆரின் புகழை உயர்த்தின.

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கப்பலில் இடம்பெறும் பாடலுக்கான வரிகளை பல கவிஞர்களை வைத்து எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி வரவில்லை. கண்ணதாசனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் டி.எம்.எஸ் குரலில் ஒலித்த ‘அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்…’ பாடல் சுதந்திர கீதமாக போற்றிப் பாராட்டப்பட்டது.

‘தாய் பேச நினைப்பதெல்லாம்…’ என்று ஒரு பாடல் எழுதினார் கவிஞர். அந்தப்படம் நின்றுபோனது. அதையே கொஞ்சம் மாற்றி, ‘நான் பேச நினைப்பதெல்லாம்…’ என்று அமைத்தார். அந்தப்பாடல் ‘பாலும் பழமும்’ படத்தில் இடம்பெற்று, காதலையும் தாய்மையையும் கலந்து கொடுத்து ரசிகர்கள் மனதைக் களவாடிச் சென்றது.

சூலமங்கலம் ராஜலட்சுமி இசையில் ‘தரிசனம்’ படத்தில் அவர் எழுதிய ‘இது மாலை நேரத்து மயக்கம்…’ பாடலில் உறவு கேட்கும் நாயகியின் ஆசையும், துறவு கேட்கும் நாயகனின் எண்ணமும் அருமையாகப் பதிவாகியிருந்தது.

‘ராணி’ படத்தில் பானுமதி பாடுவதாக ஒரு பாடல். கவிஞர் திரும்பத்திரும்ப வரிகளை மாற்றியும், நல்லாயில்லை என்று சொல்லிவிட்டார் பானுமதி. பாட்டு எடுபடாமல்போய், கவிஞர் மனம் கலங்கினார். நாட்கள் நகர்ந்தன. ‘அம்பிகாபதி’ படத்துக்காக பாட வந்தார் பானுமதி. அவரைப்பார்த்து, ‘பானுமதி மாறிவரும் வானகத்து மீனே…’ என்று எழுதினார் கவிஞர். பாராட்டி மகிழ்ந்தார் பானுமதி.

கருத்துவேற்பாடு காரணமாக சிவாஜி படங்களுக்கு எழுதாமல் இருந்தார் கவிஞர். அப்புறம் சமரசம் ஆனபிறகு, ‘பாசமலர்’, ‘பாகப்பிரிவினை’, ‘படிக்காத மேதை’, ‘பாவ மன்னிப்பு’, ‘விடிவெள்ளி’ என சிவாஜி படங்களின் பாடல்கள் ரசிகர்களைக் குளிர்வித்தன.

 ‘மழைகூட ஓர் நாளில் தேனாகலாம்…’ பாடல் 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பாராட்டுகளை அள்ளியது.‘காட்டுக்கு ராஜா சிங்கம், கவிதைக்கு ராஜா கண்ணதாசன்’ என்று பாராட்டி யிருக்கிறாா் பெருந்தலைவா் காமராஜா்.‘மருதமலை மாமணி யே முருகையா,‘தேவரின்’ குலம்காக்கும் வேலய்யா...’ என்று கவிஞர் எழுதிய தைப் பாராட்டி, ஒரு பெருந்தொகையை பரிசாக வழங்கி யிருக்கிறார் சாண்டோ சின்னப்பா தேவர்.

முன்னாள் காதலியை சென்னைத்தெருவில் பார்த்திருக்கிறார் கவிஞர். அதை நினைவு படுத்தும் வகையில் எழுதிய பாடல்தான் ‘பாலும் பழமும்’ படத்தில் இடம்பெற்ற ‘என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…’ ‘ பாவாடை தாவணியில் பார்த்த உருவமா…’ பாடலும் அதே தாக்கத்தில் பிறந்ததுதான். அதே படத்தில் இடம்பெற்ற ‘பாலும் பழமும் கைகளில் ஏந்தி…’ பாடல், மனைவி பொன்னழகியின் பாசத்தால் பிறந்திருக்கிறது.

‘ரத்தத்திலகம்’ படத்தில் எழுதி, நடித்த ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு…’ பாடல் கவிஞரின் சுயவிமர்சனமாக அமைந்து பாராட்டுப்பெற்றது.மியூசிக் அகாடமியில் நடந்த ஒரு கவியரங்கில், ‘கவிஞர் குடிப்பதை நிறுத்தவேண்டும்’ என்று ஒரு கவிஞர் குரல் கொடுத்திருக்கிறார். ‘நாளை முதல் குடிக்கமாட்டேன்’ என்று கவிதையில் பதில் சொல்லியிருக்கிறார் கண்ணதாசன். அதுவே ‘நீதி’ படத்தில் பாடலாக இடம்பெற்றது.

தி.மு.கவை விட்டுப் பிரிந்து காங்கிரசில் சேர்ந்த சிவாஜியை ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று வாழ்த்தினார் அறிஞர் அண்ணா. அதையே முதல்வரியாக்கி ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துக்குப் பாட்டெழுதினார் கவிஞர்.சிகிச்சைக்குச் செல்லும் அவசரத்தில் பத்து நிமிடத்தில் கவிஞர் எழுதிய பாடல் ‘கண்ணே கலைமானே…’. அதுவே அவரது கடைசிப் பாடலாக அமைந்துவிட்டது.

எண்ணற்ற விருதுகளைப்பெற்று , ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். அவர் எழுதியதில் சிறந்த பாடல்கள் என்று பட்டியலிடுவது, வாரத்துக்கு எத்தனை நாட்கள் என்ற கேள்விக்கான பதிலைபோல எளிதானதல்ல. வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் என்ற கேள்விக்கான பதிலைப்போல கடினமானது.

சிகிச்சைக்காக சிகாகோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கவிஞர், 17.10.81ல் மரணமடைந்தார். உடல் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, அரசு மரியாதையுடன் 22.10.81ல் எரியூட்டப்பட்டது.‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை’ என்று சொன்ன அந்த பாட்டுச்சக்கரவர்த்தி, சொன்னதைப்போலவே தனது பாடல்களால் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

அடுத்த இதழில்
பின்னணிப்பாடகி எஸ்.ஜானகி

நெல்லைபாரதி