அந்தந்த நேரத்துல அது அத பண்ணணும்!



காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஹீரோயின் காஜல் அகர்வால். இப்போது ‘மாரி’ தனுஷின் ஜோடி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மாரி’ தயாரிப்பு அலுவலகத்தில் நம்மோடு பேசினார். ‘நல்லா இருக்கீங்களாண்ணா, சாப்பிட்டீங்களாண்ணா?’ என்பது உள்பட சில தமிழ் வார்்த்தைகளை அழகாக உச்சரிக்கிறார். ‘அண்ணா’ என்பதை கொஞ்சம் அழுத்தியே உச்சரிக்கிறார்.

‘மும்பை தொழில் அதிபர் ஒருவரை கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களாமே’ன்னு முதல் கேள்வி கேட்டதுமே ஜர்க் ஆனார். “பாத்தீங்களாண்ணா! இதுதான் மீடியாகிட்ட வரவே பயமா இருக்கு. இப்போ எனக்கு காதலிக்கிற வயசுதான்ங்றத மறுக்கல. காதலிக்கிறதுக்கு நேரமில்லியே. எப்போ வேணாலும் காதலிக்கலாம். கல்யாணம் பண்ணிக்கலாம். 5 வருஷம் இடைவெளிவிட்டு திரும்ப நடிக்க வந்தா ஏத்துப்பாங்களா?

எந்த நேரத்துல எது பண்ணணுமோ அதை அந்த நேரத்துல பண்ணணும். இப்போ நடிக்கிற நேரம். நடிக்கிறேன். கல்யாணம் பண்ணிக்கிற நேரம் வரும்போது பண்ணிக்குவேன். பெத்தவங்க நல்ல மனிதரைப் பிடித்துத் தந்தால் பண்ணிக்குவேன். எனக்கு ஒருத்தரைப் பிடித்திருந்தால் பண்ணிக்குவேன்.

காஷ்மீர்லேருந்து கன்னியாகுமரி வரைக்குமான நிலப்பரப்பில் எங்கு பிறந்தவராக இருந்தாலும் சரி, அகர்வால் மாப்பிள்ளைதான் வேணும்னு அடம்பிடிக்க மாட்டேன்” என்றார்‘2 கோடி சம்பளம் கேட்கிறீங்களாமே?’ என்றால் அதிர்ச்சியாகிறார்..

“அண்ணா இதுதான் கடைசி கேள்வின்னா பதில் சொல்றேன்” என்று நிபந்தனை விதித்தார். சரி என்ற பிறகு. “இதோ ‘மாரி’ படத்தோட புரொட்யூசர் ராதிகா மேடம் இருக்காங்க. அவுங்ககிட்ட கேளுங்க, எனக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாங்கன்னு” என்று ராதிகா பக்கம்  கை காட்டினார்.உடனே உஷாரான ராதிகா, “நீங்க சொல்ற அளவுக்கு சம்பளம் கொடுக்கவில்லை” என்றார்.

‘அப்போ எவ்ளோதான் சம்பளம்?’ என்றதும் முறைத்தார் காஜல். ‘இது துணைக் கேள்விதான் சிஸ்டர்’ என்றதும், “என் தகுதிக்கு என்ன சம்பளமோ அதை புரொட்யூசர் தர்றாங்க. நான் வாங்கிக்கிறேன்” என்று சரோஜாதேவி காலத்து பதிலை அழகான ஆங்கிலத்தில் ெசான்னார் காஜல்.

-கதிர்