காவல்



கூலிக்கு கொலை செய்யும் கூலிப்படையைப் பற்றியது கதை. தமிழ்நாட்டையே கலக்கிக் கொண்டிருக்கும் கூலிப்படைத் தலைவன் தேவாவை என்கவுண்டர் பண்ணும் அசைன்மென்ட் போலீஸ் அதிகாரியான சமுத்திரக்கனியிடம் வழங்கப்படுகிறது.

அவரும் மாறுவேடத்தில் தேவாவைக் கண்காணித்து என்கவுண்டருக்கு நாள் குறிக்கிறார். ஆனால் அந்த திட்டத்தை முன் கூட்டியே அறிந்து கொள்ளும் தேவா, போலீஸ் வலையில் இருந்து தப்பிக்கிறார். இறுதியில் குற்றவாளிக்கு எப்படி தண்டனை கிடைக்கிறது என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் விமல் ஹீரோ இல்லை என்பதால் அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டுமோ அதைத்தான் கொடுத்திருக்கிறார்கள். கதையின் நாயகனாக வரும் சமுத்திரக்கனிதான் மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார். பலூன் வியாபாரி, மிடுக்கான போலீஸ் அதிகாரி என அந்தந்த கேரக்டருக்குரிய பாவங்களை மிக அழகாக தன் முகத்தால் கடத்துகிறார்.

இந்தப் படத்தின் நாயகனுக்கே ‘நோ வேகன்ஸி’ என்பதால் நாயகி கீதாவுக்கு அப்படி என்ன வேலை கிடைத்திருக்கும்? வில்லனாக வரும் தேவா மிரட்டியிருக்கிறார். நிஜ போலீஸ் தோற்குமளவுக்கு எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி ஆகியோரின் நடிப்பு கச்சிதம்.

போலீஸ் கதைக்குத் தேவையான வேகத்தை ஏகாம்பரத்தின் கேமரா வாரி வழங்கியிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் முடிந்தளவுக்கு தன் இசையால் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். முக்கியமான சமூகப் பிரச்னையை கமர்ஷியலாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் நாகேந்திரன்.