எம்.ஜி.ஆர் வீட்டில் பேய்!



“ஜின் என்பது மதுபானம். அதே ஜின்னுக்கு அரபியில் பேய் பிடித்தவர் என்று பொருள். இரண்டாவதாக சொன்ன ஜின்தான் என்னுடைய படத்தோட மையக்கரு’’ - வார்த்தைகளுக்கு வலிக்காமல் பேசுகிறார் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன். எஞ்ஜினியரிங் முடித்துவிட்டு சினிமா மீதான காதலால் கோலிவுட்டுக்கு வந்தவர்.‘‘நான் பக்கா சென்னைப் பையன்.

 என்ஜினியரிங் முடித்ததும் பிரபல சாஃப்ட்வேர் கம்பெனியில நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை. அந்த சமயத்தில் நாம் ஏன் குறும்படங்களை எடுக்கக்கூடாது என்று யோசித்தேன். அப்படி விளையாட்டாக எடுக்க ஆரம்பித்த குறும்படங்களுக்கு உலகளவில் 20 விருதுகள் மூலம் நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக இந்தப் படத்தை என் நண்பர் ரமீஸுடன் சேர்ந்து தயாரித்து இயக்கியிருக்கிறேன். எனக்கும்  நண்பனுக்கும் நடந்த சம்பவத்துக்குத்தான் சினிமா வடிவம் கொடுத்திருக்கிறேன்.

ஒருத்தர் உடம்புல பேய் இருந்தால் அவருக்கு ஜின் பிடிச்சிருக்கு என்று சொல்வாங்க. அப்படி ஜின் பிடித்த ஒருவருடன் 5 இளைஞர்கள் மலைப்பகுதிக்குச் சுற்றுலா செல்கிறார்கள். அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்னைதான் படம். இந்தப் படத்தில் ஹாரர் இருக்கும். ஆனால் இது ஹாரர் படம் இல்லை. நட்புக்கும், ரொமான்ஸுக்கும்தான் முக்கியத்துவம் இருக்கும்.

‘மெட்ராஸ்’ படத்துல கார்த்தி நண்பராக வந்த கலையரசன்தான் லீட் ரோல் பண்றார். நண்பர்களாக ‘மெட்ராஸ்’ படத்துல ஜானியாக வந்த ஹரி, ‘முண்டாசுபட்டி’ காளிவெங்கட், ‘முண்டாசுபட்டி’ ராம்தாஸ், அர்ஜுனன், நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் ரமீஸ் ஜோடியாக புதுமுகம் ப்ரீத்தி வர்றாங்க, ‘அன்பே வா’ படத்துல இடம்பெற்ற எம்.ஜி.ஆர் வீட்டில்தான் ஷூட்டிங் நடத்தினோம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் வீடியோ ஆல்பங்களுக்கு ஒளிப்பதிவாளராக வேலை பார்த்த விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சந்தானம் நடிக்கும் ‘வாலிப ராஜா’ படத்துக்கு இசையமைத்திருக்கும் ரதன் இசையமைத்திருக்கிறார்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்தப் படத்தை ‘ஃபண்ட்’ பிரச்னையால், தயாரிக்க கஷ்டப்பட்டோம். அப்போது எடுத்தவரை உறவினர்கள், நண்பர்களுக்கு திரையிட்டுக்காட்டி  ‘ஃபண்ட்’ சேர்த்தோம். படம் நல்லா வந்திருக்கு. உங்களுக்கு பிடிச்ச சினிமாக்களில் இதுவும் இருக்கும்’’ என்று அழுத்தம் கொடுக்கிறார் சதீஷ் சந்திரசேகரன்.

-எஸ்