காக்க முட்டை
வறுமையில் வாடித் தவிக்கும் ஒரு குப்பத்துக் குடும்பக் கதை. காக்கா முட்டைகளாக நடித்திருக்கும் ரமேஷும், விக்னேஷும்தான் கதை நாயகர்கள். அண்ணன், தம்பிகளான இருவருக்கும் பச்சை முட்டை குடிக்க ஆசை. ஆனால் கோழி முட்டை குடிக்குமளவுக்கு சிறுவர்களிடம் பணம் இல்லை. இதனால் மரத்தில் இருக்கும் காக்கா முட்டையை உடைத்து சாப்பிடுகிறார்கள்.
 அதுமுதல் சிறுவர்கள் காக்கா முட்டைகளாக அழைக்கப்படுகிறார்கள். பிறகு சிறுவர்களின் ஆசை, அவர்கள் பகுதியில் புதிதாக வந்திருக்கும் பீட்சா கடை மீது விழுகிறது. இப்போது வாழ்க்கையில் ஒரு முறையாவது பீட்சா சாப்பிட வேண்டும் என்று சபதம் எடுக்கிறார்கள். ஏழைச் சிறுவர்களின் ஆசை நிறைவேறியதா, இல்லையா என்பது மீதிக் கதை.
காக்கா முட்டை சகோதரர்களாக வரும் ரமேஷும், விக்னேஷும் நூறு படங்களில் நடித்த ஜாம்பவான்கள் போல் சர்வ சாதாரணமாக நடித்திருக்கிறார்கள். யதார்த்தமான நடிப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தங்களை அறியாமல் நடித்திருக்கும் அந்த சிறுவர்கள்தான் உண்மையில் பெரிய நடிகர்கள். அம்மாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் குப்பத்துப் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார். இவருக்கு விருது இல்லை என்பது சற்றே அதிர்ச்சியைத்தான் கொடுக்கிறது.
ஜோ மல்லூரி, யோகி பாபு, சிறுவர்களின் பாட்டி என அனைவரும் கிடைத்த சந்தர்ப்பத்தில் தூள் கிளப்புகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மனதுக்கு மகிழ்வு! படத்தின் இயக்குனர் மணிகண்டன்தான் படத்துக்கு ஒளிப்பதிவு. கருவை சுமக்கும் கர்ப்பிணி போல் கவனத்தோடு, எளிமையான அழகையும் சேர்த்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கும் இயக்குனர் ‘மணி’கண்டனாக மாறுவது உறுதி. அருமையான கதையை படமாக்க முன்வந்த தயாரிப்பாளர் தனுஷ், வெற்றிமாறனுக்கு ஸ்பெஷல் பாராட்டு! இது குவாலிட்டி படம் மட்டும் அல்ல! கோடிகளைக் குவிக்கும் கமர்ஷியல் படம்!
|