சினிமான்னா மீன்; டிவின்னா கருவாடு!



முரட்டுத் தோற்றத்தில் மிரட்டல் நடிப்பைக் கொட்டும் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இவரது நகைச்சுவை கலந்த அதிரடி நடிப்புக்கு தமிழில் மட்டுமல்ல, மலையாளத்திலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

350 திரைப்படங்களைத் தாண்டி, 40 சீரியல்களைக் கடந்து இவரது நடிப்புச்சேவை தொடர்கிறது. பெரிய நிறுவன விளம்பரப்படங்களிலும் இவரது பங்களிப்பு இருக்கிறது. கண்டிப்புமிகுந்த காவல்துறை ஆய்வாளராக பணியாற்றியவர் இவர்.

37 வருட சினிமா அனுபவம் உள்ள பயில்வான் ரங்க நாதன், ‘சினிமாவைவிட தொலைக்காட்சித் தொடர்கள்தான் அதிகமான மக்களைச் சென்றடைகின்றன’ என்கிறார்.‘‘சினிமா மீன் மாதிரி, டிவி தொடர் கருவாடு மாதிரி. கருவாடு எப்போதும் கிடைக்கும். சினிமாவில் கட்டுப்பாடு அதிகம். டிவி சீரியலில் சுதந்திரம் உண்டு.

நான் நடித்த பல படங்கள் தியேட்டர்களில் ஓடி வரவேற்பைப் பெற்றதைவிட, அதில் இடம்பெற்ற காமெடிக்காட்சிகள் தொலைக்காட்சிகளில்  பலமுறை இடம்பெற்று, கிடைத்த வரவேற்பே அதிகம். நாள்தவறாமல் செய்யும் உடற்பயிற்சிதான் இளமைத் துடிப்போடு இயங்க வைக்கிறது’’ என்கிறார் பயில்வான்.