இசை வர்ஷன் என்றொரு மனுஷன்!



“பணத்துக்காகவும் புகழுக்காகவும் மட்டும் இசையமைக்காமல் ஒரு படத்தின் பின்னணி இசை, ஹாலிவுட்டில் ஒரு படத்தின் இசை தனி ஆல்பமாக வெளிவருவது போல் வெளிவரவேண்டும். அப்போதுதான் நம்முடைய இசைக்கு உலகளவில் அந்தஸ்து கிடைக்கும்’’ என்கிறார் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தின் இசையமைப்பாளர் வர்ஷன்.

சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் வர்ஷன். சினிமா மீது கொண்ட காதலால் பள்ளி நாட்களிலேயே தன்னுடைய வாழ்க்கை இசைதான் என்று முடிவெடுத்திருக்கிறார். முதலில் அவர் சென்னை பல்கலைக் கழகத்தில் இசை படித்தார்.

பின்னர் அடையாறு இசைக் கல்லூரியிலும் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியிலும் இசை பயின்றார். ஆரம்பத்தில் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்து வந்த அவர் யாரிடமும் உதவியாளராக வேலை பார்க்காமலேயே சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார். ஜனநாதன் இயக்கத்தில் தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படம்தான் வர்ஷனின் முதல் சினிமா. இயக்குனர் ஜனநாதன் போலவே வர்ஷனும் முற்போக்கு சிந்தனை கொண்டவர் என்பதால் இவ்விருவர் இணைந்ததில் ஆச்சர்யங்கள் எதுவும் இல்லை.

‘‘‘புறம்போக்கு’ படத்துக்காக ஊண், உறக்கம் இல்லாமல் வேலை பார்த்திருக்கிறேன். அதன் பிரதிபலன்தான் படத்தோட பிரமாண்ட வெற்றி. முதல் படம் என்பதால் இந்தப் படத்தில் எனக்கு சம்பளம் குறைவு அல்லது சம்பளம் இல்லை என்று சொல்லலாம். ஆனால் இந்தப் படம் என்னை அடுத்த லெவலுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும். ‘புறம்போக்கு’ படம் இசைக்கு சவாலான படம்.

சீரியஸாக போகும் கதையை சிதைக்காமல் பாடல்கள் தர வேண்டும். அந்த வகையில் மிகவும் கவனத்துடன்தான் இசை அமைக்கும் பணியைச் செய்தேன். ஏக்நாத் எழுதிய ‘தேகம் தாக்கும் ஊசிக் காற்று’ பாடலுக்கு நிஜ பூட்ஸ் சவுண்டை  கம்போஸ் பண்ணி எடுத்ததால் அந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம்  நல்ல பாராட்டு கிடைத்தது.

மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்ற அனைத்து இசையமைப்பாளர்களும் என்னை பாதித்தவர்கள்தான். என்னுடைய ஸ்டைலை ஒரே படத்தில் காட்டிவிட முடியாது. என்னுடைய இசை கதைக்கு உதவி செய்ய வேண்டும். ரசிகர்களின் மனதைத் தொட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு பாடல் உருவாக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லித் தரும் விதத்தில் இருக்கும்’’ என்கிறார் வர்ஷன்.   

எஸ்