பாட்டுத் துறையில் கலைஞரின் முத்திரை!



தொடுவிரலுக்கும் பெருவிரலுக்கும் நடுவிருந்து எழுத்தால் நல்விருந்து படைப்பது கலைஞரின் எழுதுகோல்.எழுத்துத்துறையின் எல்லாத்தளங்களிலும் சிகரம் தொட்டு கிரீடம் பெற்றிருக்கிறார் கலைஞர். வசன எழுத்தாளருக்கு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் இவரது எழுதுகோல்தான் அமைத்துக்கொடுத்தது.

 உதவியாளர் வைத்துக்கொள்ளாமல், சொந்தக் கையெழுத்தில் அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதும் உலகின் ஆகச்சிறந்த எழுத்தாளர் என்ற பெருமை கலைஞருக்கு உண்டு.

இந்த பல்துறைக்கலைஞர் தமிழ் சினிமாவின் பாட்டுச்சாலையிலும் தனது பயணத்தை சிறப்பாக நடத்தியிருக்கிறார்.‘பராசக்தி’ படத்தில் சுதர்சனம் இசையமைப்பில் கலைஞர் எழுதிய ‘இல்வாழ்வினிலே ஒளியேற்றும் தீபம்…’ ‘பூமாலை நீயே…’ என இரண்டு பாடல்களும் பாட்டுப்பிரியர்களால் கொண்டாடப்பட்டன.

‘மந்திரிகுமாரி’ படத்தில் எழுதிய ‘என்னருமைக் கன்னுக்குட்டி…’ என்கிற சமூக சீர்திருத்தத் தத்துவப் பாடல் எல்லாத்தரப்பினரையும் ஈர்த்தது. ‘பூம்புகார்’ படத்தில் இடம்பெற்ற ‘வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்…’ பாடல் கே.பி.சுந்தராம்பாள் குரலில் காது உள்ள அனைவரையும் கவுரவித்துக் கவர்ந்தது. வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லும் மிகச்சிறந்த பாடல்களின் பட்டியலில் இந்தப்பாடலுக்கு முன்னணி இடம் உள்ளது. ‘காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்…’ என்று ‘மறக்கமுடியுமா’ படத்துக்கு கலைஞர் எழுதிய பாடல், டி.கே.ராமமூர்த்தி இசையில், பி.சுசீலா குரலில் ஏழையின் சோகத்தை எல்லாத்தரப்புக்கும் எடுத்துச்சொல்லும் விதமாக அகிலமெங்கும் ஒலித்தது.

‘காஞ்சித்தலைவன்’ படத்தில் எழுதிய ‘வெல்க காஞ்சி வெல்க காஞ்சி வெல்க வெல்கவே…’ பாடல் தணிக்கைக்குழுவின் தலையீட்டால் ‘வெல்க நாடு வெல்க நாடு…’ என்று மாற்றி அமைக்கும்படி ஆனது. அந்தப்பாடலில் ‘குழலைப்போல மழலை பேசும் குழந்தைகளின் முத்தமும் கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின் கோலமொழிச் சத்தமும்…’ என்கிற வரிகளில் தனது அன்னையாரின் பெயரை இணைத்து அழகு சேர்த்திருப்பார் கலைஞர். ‘வேங்கைப்புலி மன்னனடா…

வீரர்களின் தலைவனடா…’ என்று அறிஞர் அண்ணாவின் புகழோவியத்தையும் அந்தப்பாடலில் புகுத்தி யிருப்பார். கே.வி.மகாதேவன் இசையில் சி.எஸ்.ஜெயராமன் குரலில் ஒலிக்கிறது அந்த றநானூற்றுப்பாடல். இதே படத்தில் ‘உலகம் சுத்துது எதனாலே…’ என்ற பாடலையும் கலைஞர் எழுதியிருக்கிறார்.

சிவாஜிபத்மினி நடித்த ‘ராஜாராணி’ படத்தில் மூன்று முத்தான பாடல்களை எழுதியிருக்கிறார் கலைஞர். ‘இன்றிரவு மிக நல்லிரவு…’, ‘பூனை கண்ணை மூடிக்கொண்டால்…’ மற்றும் ‘ஒரு சொல்லாலே வீணானதே…’ ஆகியவையே அந்தப்பாடல்கள். ‘குறவஞ்சி’ படத்தில் ‘அகல இருக்குது…’ என்கிற பாடல் கலைஞரின் கைவண்ணத்தில் கவனம் ஈர்த்தது.

‘ரங்கோன் ராதா’ படத்தில் பானுமதி பாடும் ‘காற்றில் ஆடும் தீபம்…’ மற்றும் ‘தமிழே தேனே…’ பாடல்கள் கலைஞரின் எழுத்தோவியத்தின் எடுத்துக்காட்டுகள்.
‘மக்கள் ஆணையிட்டால்’ படத்தில் எழுதிய ‘ஆற அமர கொஞ்சம் யோசிச்சுப்பாரு… அடுத்துவரும் தலைமுறையைக் காப்பது யாரு…’ பாடல் விழிப்புணர்வை ஏற்படுத்திய வெண்திரைப்பாடல்.

‘மண்ணின் மைந்தன்’ படத்தில் ‘கண்ணின் மணியே…’, ‘பெண் சிங்கம்’ படத்தில் ‘வீணையில் எழுவது வேணுகானமா? திருவாவடுதுறையின் தோடி ராகமா…?’  என்று எழுதி, மறைந்த  இசைச் சக்கரவர்த் திக்கு இசையஞ்சலி செலுத்தினார். ‘பாசக்கிளிகள் படத்தில் ‘தங்கை எனும் பாசக்கிளி…’ என கலைஞரின் பாட்டுச்சாலைப் பாசப் பயணமாய் தொடர்கிறது.சங்கத்தமிழிலிருந்து தங்க வார்த்தைகளாகத் தேர்ந்தெடுத்து வடித்த ‘செம்மொழியாம்…’ பாடல் இன்னொரு தமிழ்த்தாய் வாழ்த்தாக உலகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

தகவல் உதவி :
இயக்குநர் பாரதி மோகன்

அடுத்த இதழில்
இசையமைப்பாளர்  பாடகர் சி.எஸ்.ஜெயராமன்

நெல்லைபாரதி