அன்று சரத்! இன்று சரவணன்!



கழுத்துல 10 பவுன் செயின், கையில் துப்பாக்கி, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை காஸ்ட்யூம்... இதுதான் ‘சரித்திரம் பேசு’ படத்தில் டாக்டர் சரவணனின் தோற்றம்.  ஸ்டில்ஸை பார்க்கும் போதே இது ஆக்ஷன் படம் என்பது சொல்லாமலே தெரிகிறது. “முழுக்க முழுக்க இது ஆக்ஷன் படம்.

ஹீரோ, வில்லன் என இரண்டு குரூப்புக்கும் இடையில் நடக்கும் பிரச்னைகளை கமர்சியலாக சொல்லியிருக்கிறேன். டாக்டர் ஏற்கெனவே ‘அகிலன்’ படத்தில் என்ட்ரி கொடுத்திருந்தாலும், அவருக்கு இது இன்னொரு அசத்தல் என்ட்ரி!” - தன் நாயகனுக்கு அமர்க்களமாக அறிமுகம் கொடுக்கிறார் இயக்குனர் ஸ்ரீமகேஷ். இவர் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ படத்தை இயக்கியவர். 

‘‘இதில் வித்தியாசமான சரவணனைப் பார்க்கலாம். அவர் ஸ்கிரீன்ல வந்து போனாலே மிரட்டுற மாதிரி இருக்கும். ஏன்னா, அந்தளவுக்கு அவரை கொடூர வில்லனாக காட்டியிருக்கிறேன். இந்தக் கேரக்டரில் அவரை நடிக்க வைக்க ரொம்பவே தயங்கினேன். அதற்குக் காரணம், மதுரை மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அபிமானம். மதுரையில் அவர் வைத்திருக்கும் மருத்துவமனை மூலம் ஏராளமான மக்கள் மறுவாழ்வு அடைந்திருக் கிறார்கள். அந்தப் பயனாளிகளில் நானும் ஒருவன்.

இளம் ஜோடி களாக கிருபா, கன்னிகா நடித்திருக்கிறார்கள். ‘பதினெட் டாம் குடி’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்த யோகேஸ்வரன் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். ‘பசங்க’ படத்தில் சிறுமியாக நடித்த தாரணி இதில் நாயகியாக அறிமுகமாகிறார். இசை ஜெயகுமார். இவர் தேவாவிடம் கிடாரிஸ்டாக வேலை செய்தவர்.

படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் நிஜத்தில் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கும் சரவணனை வில்லனாக நடிக்க வைத்தது இப்போதும் எனக்குள் உறுத்தலாக இருந்துகொண்டே இருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றிதான் சரவணனுக்கு நான் கொடுக்கும் பரிசு” என்கிறார் ஸ்ரீமகேஷ்.

-ரா