வெள்ளித்திரையில் தொடுதிரை!



சாக்கு தைக்கும்  தொழிலாளியாக இருந்து, ஹீரோ- கதாசிரியர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் என்று உயர்ந்தவர் கோபிகாந்தி. ‘முதல் மாணவன்’ படம் முதலுக்கு மோசம் தராமல் ஓடிய துணிச்சலில் இப்போது ‘வீரக்கலை’ படத்தைத் துவங்கியிருக்கிறார். மலைவாழ் கிராமத்து இளைஞன், மாநில அளவிலான சண்டைப் போட்டிகளில் ஜெயிப்பதற்காக தன்னை எப்படி தயார்படுத்திக்கொள்கிறான் என்பதே கதை. ‘தொழில்காரன்’ என்ற படமும் இவரது தயாரிப்பில் இருக்கிறது.

‘அகில உலக சமூகசேவை மைய தலைவராக இருக்கும் இவர், தனது படங்களில் தன்னம்பிக்கையும் மனிதாபிமானமும் தூக்கலாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். ஜெஸி இசையில் பத்திரிகையாளர் பாலபாரதி எழுதியுள்ள ‘தொடுதிரை நான், தொடுவிரல் நீ...’ என்ற பாடல் ‘வீரக்கலை’யின் விலாசமாக இருக்கும் என்று படக்குழு சொல்கிறது. கோபிகாந்தியின் இரண்டு படங்களையும் வாங்கி வெளியிடும் உரிமையை ஒரு கார்ப்பொரேட் நிறுவனம் பெற்றிருப்பது இந்தக் குழுவுக்குக் கிடைத்த வெற்றி.