மதங்கள் ஒன்றுசேர ஆசைப்படும் கவிஞர்!



பாட்டுச்சாலை 49

முஹமது மேத்தா என்கிற மு.மேத்தா பெரியகுளத்தில் பிறந்தார். பள்ளிக்காலத்திலேயே கவிதை எழுதும் கலை கைக்குள் அகப்பட்டது. ஆரம்பத்தில் மரபுக்கவிதைகள் எழுதியவர், புதுக்கவிதையால் ஈர்க்கப்பட்டு, புகழடைந்தார். 'மேத்தா - புதுக்கவிதையின் தாத்தா' என்று வார்த்தைச்சித்தர் வலம்புரி ஜான் குறிப்பிடு மளவுக்கு புதுக்கவிதையின் முகவரியாகவே திகழ்ந்தார்.

 சினிமாவைப் பற்றிய சிந்தனையை சிரத்தில் ஏற்றிக்கொள்ளாமல் இருந்தவரைத்தேடி சினிமாப்பாடல் வாய்ப்பு வந்தது. இவரது கல்லூரி நண்பர் சுப்பிரமணியனின் அப்பா உடையப்பத்தேவர் நாடக உலகில் பிரபலமாக இருந்து, 'அனிச்சமலர்' என்ற பெயரில் படம் தயாரித்து வந்தார். பாடல்களை மேத்தா எழுதவேண்டும் என்பது உடையப்பத்தேவரின் விருப்பமாக இருந்தது.

பாடல் எழுதுவதற்காக ஏவி.எம் ஒலிப்பதிவுக்கூடத்துக்கு வந்தார் மேத்தா. ஆஜானுபாகுவான உடையப்பத்தேவர் ஆளுயர மாலையை இவருக்கு அணிவித்து, 'இவர்தான் எங்கள் கவிஞர்' என்று இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். மெட்டு கொடுக்கப்பட்டது. புதியவரான மேத்தாவுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. 'அந்த ட்யூனை எனது தமிழால் தடவிப் பார்த்தேன்' என்று பின்னாட்களில் குறிப்பிடுகிறார். '

காத்து வீசுது புதுக்காத்து  வீசுது...' என்று இவர் எழுதிய வரிகள் பாராட்டப்பட்டன. பாடுவதற்கு வந்திருந்த வாணி ஜெயராம், 'நான் உங்கள் கவிதையின் தீவிர ரசிகை' என்று கவிஞரிடம் கூறியிருக்கிறார். 'நான் உங்கள் பாட்டுக்கு பைத்தியம்' என்று பதில் சொல்லியிருக்கிறார் இவர்.

முதல்பாட்டு எழுதியபிறகும் இவருக்கு சினிமா ஆர்வம் அதிகரிக்கவில்லை. அந்தப்படமும் சரியாகப் போகாததால், பேராசிரியர் பணியிலும், கதை-கவிதைகளிலும் கவனத்தைச் செலுத்தினார். இவரது கவிதைகளின் ரசிகராக கமல்ஹாசன் இருக்கிறார் என்ற தகவல் எழுத்தாளர் பாலகுமாரன் மூலமாகத் தெரிந்திருக்கிறது. கமலைச் சந்திக்க பாலகுமாரன் ஏற்பாடு செய்தார். 'உங்களது இலக்கியத் திமிரைப் பாராட்டுகிறேன். இதுவரை உங்களது 'கண்ணீர்ப்பூக்கள்' கவிதைப் புத்தகத்தை ஒன்றரை லட்சம் பேர் படித்திருக்கிறார்கள்.

நாளைக்கே ஒரு பாட்டு வெளிவந்தால், ஒரே நாளில் கோடிக்கணக்கான் பேர் அந்தப்பாடலைக் கேட்பார்கள். அதுதான் சினிமாவின் வீச்சு' என்று சொன்னதுடன், மனோபாலாவிடம் அறிமுகப்படுத்தச்சொல்லி பாலகுமாரனிடம் கூறியிருக்கிறார் கமல். பிரசாத் ஸ்டுடியோவுக்குப் போனபோது, 'உங்கள் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன்' என்று சொல்லி வரவேற்றிருக்கிறார் ராஜா.

மனோபாலா இயக்கத்தில் இளையராஜா இசையில், 'ஆகாய கங்கை' படத்தில் பாட்டு எழுதினார் மேத்தா. 'தேனருவியில் நடந்திடும் மலரோ...' என்ற அந்தப் பாடலில் 'முகவாசல் மீது கண்கள் இரு தீபமானதோ' என்றெல்லாம் புதுவரி புகுத்தி, அனைவரது பாராட்டு களையும் அள்ளிக்கொண்டார். 

அடுத்தடுத்து பாடல் வாய்ப்புகள் வந்தாலும் பாலசந்தர் தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'வேலைக்காரன்' படம்தான் சினிமா வெளிச்சத்தை இவர்மீது சிறப்பாகப் பாய்ச்சியது. அந்தப் படத்தின் ஆறு பாடல்களையும் எழுதும் பேறு இவருக்குக் கிடைத்தது. 'வா வா வா கண்ணா வா...' பாடலில், 'தாஜ்மகாலின் காதினில் ராமகாதை கூறலாம், மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்' என்று எழுதி மானுட விரும்பி களின் மனப்பூர்வமான பாராட்டைப்பெற்றார்.

அந்தப்படத்தின் 'மாமனுக்கு மயிலாப்பூருதான்...', 'வேல இல்லாதவந்தான் வேல தெரிஞ்சவந்தான்...', 'தோட்டத்துல பாத்தி கட்டி...', 'எனக்குத் தா உன் உயிரை எனக்குத் தா...', 'பெத்து எடுத்தவதான் என்னையும் தத்துக் கொடுத்துப்புட்டா...' என அத்தனை பாடல்களும் அபார வெற்றி பெற்றன.

'ஆகாயத்துக்கு அடுத்த வீடு' கவிதை நூலுக்காக இவருக்கு 2006ஆம் ஆண்டில் 'சாகித்ய அகாடமி', கவுரவம் சேர்த்தது. கலைஞர் ஆட்சி யில் திரைப்படத் தணிக்கைக்குழு பொறுப்பில் இருந்திருக்கிறார் இவர். 'கலை வித்தகர்', 'பாரதிதாசன் விருது', 'கலைமாமணி' ஆகியவை இவரது முத்தமிழுக்கு முத்தம் கொடுத்த முக்கிய பரிசுகள். 'அழகிய தமிழ் மகன்' படத்தில் விஜய்க்கு பரிசளிக்கும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார் இவர். 'இரயில் பயணங்களில்' படத்தில் இவரது 'ஊர்வலயம்' கவிதைத் தொகுப்பி லிருந்து ஒரு கவிதையைக் காட்டி, திருப்புமுனைக் காட்சியை அமைத்திருந்தார் டி.ராஜேந்தர்.

'பாரதி' படத்தில் இளையராஜா இசையில் இவர் எழுதிய 'மயில் போல பொண்ணு ஒண்ணு...' பாடல் பவதாரி ணிக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. பாலுமகேந்திராவின் 'ரெட்டைவால் குருவி'யில் எழுதிய 'ராஜராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம்...' பாடல் கேட்டு இவரை புதுக்கவிதையின் முகவரியாகத் திரையுலகமும் இலக்கிய உலகமும் போற்றிக் கொண்டாடின. 'உதயகீதம்' படத்தில் இடம்பெற்ற 'பாடு நிலாவே...' பலத்த வெற்றி பெற்றதுடன், பாடிய எஸ்.பி.பாலசுப்ரமண்யத்துக்கு 'பாடும் நிலா பாலு' என்ற பட்டத்தை வழங்க வைத்தது.

 'கேளடி கண்மணி' படத்தில் எழுதிய 'கற்பூர பொம்மை ஒன்று...' தாய்ப்பாசம் குழைந்த உணர்வுப்பாடலாக ஊராரால் கொண்டாடப் பட்டது 'இதயக்கோவில்' படத்தில் எழுதிய 'யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ...' இசைப் பிரியர்களால் ஆராதிக்கப்பட்டது. 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் இடம்பெற்ற ''பெண்மானே சங்கீதம் பாடி வா' பாடல் இனிய மெல்லிசையாய் காதுகளுக்கு விருந்து கொடுத்தது. 'சூரிய வம்சம்' படத்தில் எழுதிய 'நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது...' தன்னம்பிக்கையின் தேசிய கீதமாக காற்றலைகளில் பரவியது.

'காசி' படத்தின் 'என் மன வானில் சிறகு விரிக்கும்...' பாடல் இயலாத மனிதனின் இயல்புப் புலம்பலை அரிதாரம் இல்லாமல் அடை யாளம் காட்டியது. மிஷ்கின் இயக்கிய 'நந்தலாலா படத்தில் எழுதிய' அன்பு 'மட்டும் அனாதையா' பாடல் மனித உணர்வை மறுபதிப்புச் செய்தது. 'வாய்ப்புத்தேடிப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாலும், இவரைத்தேடி வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

அடுத்த இதழில்...
இசையமைப்பாளர் தாஜ்நூர்

நெல்லைபாரதி