மறந்துபோன விளையாட்டு!



“கில்லி, பம்பரம், கோலி போன்ற விளையாட்டுகள் இன்றைய யூத் பசங்க மறந்து போன விஷயம். மறந்துவிட்டார்கள் என்பதை விட வாழ்க்கைக்கு தேவையில்லாதது என்று பெரியவர்கள் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். மறந்து போன அந்த விளையாட்டை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான்  ‘கில்லி பம்பரம் கோலி’யின் கதை” - நிதானமாகப் பேசுகிறார் இயக்குனர் மனோஹரன். இவர் அஞ்சலி நடித்த ‘மகாராஜா’ படத்தை இயக்கியவர்.

‘‘படத்தில் கில்லி, பம்பரம், கோலி விளையாட்டு இருந்தாலும் இது முழுக்க முழுக்க விளையாட்டு சம்பந்தமான கதை என்று சொல்லிவிட முடியாது. பெற்றோர்களால் புறக்கணிப்பட்ட விளையாட்டு பசங்களுக்கு எப்படி நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருகிறது என்பதை யதார்த்தமாக சொல்லியுள்ளேன். இந்தப் படத்தில் காதல் கிடையாது. நட்புதான் பிரதானமாக இருக்கும்.

 நரேஷ், தமிழ், பிரசாத் நாயகர்கள். நாயகி தீப்தி ஷெட்டி. முக்கியமான வேடத்தில் கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய் நடிக்கிறார்கள். வில்லனாக புதுமுகம் சந்தோஷ்குமார் அறிமுகமாகிறார்.
முழுப் படப்பிடிப்பும் மலேசியாவில் நடக்கிறது. மணிஷர்மாவின் உதவியாளர் பிரசாத் இசையமைக்கிறார். ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ உள்ளிட்ட  படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நாக கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் அஞ்சலி நடித்திருந்தால் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும் என்பது உண்மை. ஆனால் இந்தக் கதை அஞ்சலி மாதிரி பிரபல ஹீரோயினைக் கேட்கவில்லை. சமீபத்தில் வெளியான ‘பசங்க’, ‘கோலிசோடா’ போன்ற படங்கள் எப்படி புது டிரெண்டில் இருந்ததோ அதுபோல் இருக்கும்!”

-எஸ்