எம்.ஜி.ஆர் பார்முலாவை உடைத்த இயக்குனர்!



திரைப்பட இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் எம்.ஏ எழுதிய ‘நெஞ்சம் நிறைந்த நினைவுகள்’ புத்தகத்திலிருந்து...நானும் கதைகளை வைத்துக் கொண்டு அலைந்த காலம் உண்டு. தயாரிப்பாளர்களுக்கும் சொல்கிறேன்.

டைரக்டர்களுக்கும் சொல்கிறேன். தேவை இருந்தால் கதை கேளுங்கள், இல்லை என்றபோது வீணாக எழுத்தாள இளைஞர்களின் உள்ளங்களை நம்பிக்கையை உண்டாக்கும் நாடகமாடி உடைத்து விடாதீர்கள். உங்களுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக எனக்கு அவர் தெரியும், இவர் தெரியும், அவரிடம் சொல்கிறேன், இவரிடம் சொல்லி இருக்கிறேன் என்று இழுத்தடித்து அவர்களின் பொருளையும், நேரத்தையும், உழைப்பையும் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தி வீணடிக்காதீர்கள்.

என் பாதை வழி திரும்பியது. திருப்பி விட்டவர் திரு. சரவணன் அவர்கள். ‘பார்த்தால் பசி தீரும்’ (ஒரிஜினல்), ‘அவள் அளித்த வாழ்வு’, ‘பா’ பாக்கியத்தில் நம்பிக்கை கொண்ட பீம்சிங் அவர்கள் அதற்குப் ‘பார்த்தால் பசி தீரும்!’ என்று நாமகரணம் சூட்டினார். அதே ஸ்டூடியோவில் மற்றொரு படத்தை நான் டைரக்ட் செய்து கொண்டிருந்தும், திரு. சிவாஜிகணேசன் எனக்கு அறிமுகம் கிடையாது.

செட்டில் சந்தித்ததும் இல்லை. பின்னர் அவர் வாழ்க்கையில் 25 படங்களை எடுக்கப் போகிறேன். வருடக் கணக்காக ஒன்றாக உண்டு, ஒன்றாகத் தூங்கி எங்கள் காலத்தைக் கழிக்கப் போகிறோம் என்பதற்காகத்தான் ஆண்டவன் அன்று அவசரப்பட்டு எங்களை அறிமுகம் செய்து வைக்கவில்லை என்று நினைக்கிறேன்.

நான் ஜனாதிபதியின் பரிசு வாங்க அன்று டெல்லி செல்ல வேண்டும். விமானம் மதியம் 1 மணி. என் மனைவி நிறைமாத கர்ப்பிணி. நான் ஊருக்குப் போகும் முன் குழந்தை பிறந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று தவித்துக் கொண்டிருந்தேன். என் மகள் மல்லிகேஸ்வரி எனக்கு அந்தச் சோதனையை நீடிக்கவிடவில்லை. காலை 6 மணிக்கே பிறந்து விட்டாள். திருப்தியாகப் பரிசு வாங்க, என் ஏவி.எம் சகோதரர்களோடு, உண்மையாகவும், சந்தோஷத்தோடும் வானில் பறந்தேன். திரும்பி வரும்போது ஜனாதிபதி பரிசோடு, என் அருமை மகள் மல்லிக்கும் ஒரு சின்ன செயின் பரிசாக வாங்கி வந்தேன்.

என்.டி.ராமராவ் எல்லா வகையிலும் சற்று மாறுபட்டவர். இரவு 9 மணிக்கெல்லாம் தூங்கப் போய்விடுவார். எந்தக் காரணம் கொண்டும் 7 மணிக்கு மேல் படப்பிடிப்பு வைத்துக் கொள்ளமாட்டார். நான் நேரில் பார்த்திருக்கிறேன்; அவர் கண்கள் தானாக மூடிவிடும். வசனங்கள் மனதில் ஏறாது. ஆனால் காலை 3.30 மணிக்கு எழுந்து விடுவார். கிணற்றிலிருந்து வாளி வாளியாகத் தண்ணீர் சேந்தி இழுத்து அவர் தோட்டத்துக்கெல்லாம் தண்ணீர் விடுவார்.

பிறகு நிறைய, விதவிதமாக தேகப்பயிற்சிகள், யோகாசன அப்பியாசம். காலை 6 மணிக்கு மீண்டும் ஒரு குளியல். உடனே ஃபுல் மீல்ஸ். அதுதான் அவர் மதியச் சாப்பாடு. சிக்கன், மட்டன், வெண்ணெய், நெய், கீரைகள், காய்கறிகள் எல்லாம் சுடச்சுட சமைத்துப் பரிமாறப்படும். முழுக்க வஞ்சனை இல்லாமல் சாப்பிட்டுவிட்டுச் சற்று ஓய்வெடுத்து விட்டு நன்றாகக் குறட்டைவிட்டுத் தூங்கி விடுவார். பிறகு எழுந்ததும், மேக்கப். நேரம் தவறாமல் 9 மணிக்கு அவரது பிரம்மாண்ட சிவப்புக் கார் அவரே ஓட்டிக் கொண்டு வர, ஸ்டூடியோவுக்குள் நுழைந்து விடும்.

அவர் பெரிய சாப் பாட்டு ரசிகர். அதிகமாகவும் சாப்பிடக்கூடியவர். மிளகாய் பஜ்ஜி வேண்டுமென்று சாயந்திரம் டிபனுக்குக் கேட்டபோது, ஒரு எவர்சில்வர் பக்கெட் நிறைய மிளகாய் பஜ்ஜி வாங்கி வந்தார்கள். மற்றவர்கள் சூழ்ந்திருக்க, காரியமே கண்ணாய் அவ்வளவு பஜ்ஜிகளையும் அவர் ஒருவரே சாப்பிட்டு முடித்தார். பார்வையாளர்களான நாங்கள் அசந்து நின்றோம்.  எம்.ஜி.ஆர் வெற்றிப் படங்களுக்குச் சில இலக்கணங்கள் இருந்தன.

அவர் ஏழையாக, எளியவராக இருப்பார். பல ஏழைகளின் கஷ்டங்களைப் புரிந்து அதைத் துடைத்தெடுக்கப் பாடுபடுவார்.பல முரடர்களை, விதவிதமான முரடர்களைச் சந்திப்பார். பயங்கரமாகச் சண்டை போடுவார். ஆக்ஷன் படம், வெற்றிப்படங்களில் அவருக்கு நோய்வாய்ப்பட்ட அல்லது விதவையான, புருஷனால் கைவிடப்பட்ட ஒரு தாய் இருப்பாள். அவள் சொல் தட்டாமல் பாடுபடுவார். அல்லது கற்பழிக்கப்பட்ட தங்கைக்காகப் போராடுவார்.

இவர் வெறுத்துச் செல்லச் செல்லப் பெண்கள்தாம் இவரைத் தொடர்வார்கள். பலவிதமான வேஷங்கள் போட்டு வில்லனைப் பழிவாங்குவார்.அதிகமாக நடனம் ஆடமாட்டார். இப்படிப் பல லட்சணங்கள் இருக்கும் கட்டாயமாக. ஆனால் ‘அன்பே வா’வில் அவர் முதல் கட்டத் திலேயே பிறவிக் கோடீஸ் வரனாகக் காட்டப்படுவார்.

 மேல் படிப்பு; ஏராளமாய் வெளிநா டெல்லாம் சென்று படித்த வன். விளையாட்டுக் களில் பல பரிசு களைத் தட்டிச் சென்றவன். ஆகாய விமானத்தில் வந்து இறங்குகிறான். மாலையோ மாலை குவிகிறது. தாய், தந்தை கிடையாது. படத்துக்குப் பூப் போடும் காட்சிகூட கிடையாது. அட்டகாச புருஷன். குறும்புக்காரன்.

அழகான, அவன் மனதுக்குத் திருப்தியான பெண்ணைச் சந்திக்கிறார். தான் யார் என்று காட்டிக் கொள்ளாமல் அவரிடம் தன் மனதை இழக்கிறார். தொடர்ந்து தொடர்ந்து காதலிக்கிறார்.
இவரிடம் போராடக்கூடிய பெரிய விரோதிகள் கிடையாது. சண்டைக் காட்சிகள் கிடையாது. இனிப்பு, சிரிப்பு, மகிழ்ச்சி கலந்த பலகாரம் ‘அன்பே வா’. ஏழைகள் யாரையும் அவர் பிரமாதமாகக் காப்பாற்றி விடவில்லை. நியாயம் கேட்கும் சீன்கள் கிடையாது. காதலியிடம் தோற்றுப் போவார்.

நடனங்கள் நிறைய உண்டு. போட்டியே இளைஞர் களோடு தான். ‘புலியைப் பார் நடையிலே...’ என்ற பாட்டுக்கு நடன மாஸ்டர் சோப்ரா சார் நடனம் அமைத்து, இவரை ரிகர்சலுக்கு அழைத்தார். என்னை அழைத்த எம்.ஜி.ஆர். ‘திருலோக், படு பயங்கரமான அன்றைய நவீன ஆங்கில, இந்திய, கதக் பாணிகளை சோப்ரா சார் அமைத்திருக்கிறார். இது என்னால் முடியாது என்று நினைக்கிறேன்.

நேரத்தை வீணடிக்க வேண்டாம். வேறு ஒரு நல்ல நடனக்காரப் பையனை வைத்து ஆடச் சொல்லி எடுத்துவிடுங்கள். என்னுடைய குளோசப்புகளை அங்கங்கு போட்டுக் கொள்ளலாம்’ என்று சொன்னார்.- நெஞ்சம் நிறைந்த நினைவுகள், நூல் விலை: ரூபாய் 220, வசந்தா பிரசுரம், புதிய எண் 15, பழைய எண் 6, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33.