நதிகள் நனைவதில்லை



கன்னியாகுமரியில் வாழும் பாலாசிங்கிற்கு ஒரே மகன் பிரணவ். படிப்பில் தங்க மெடல் வாங்கியும் மகனுக்கு வேலை கிடைக்காததால் மகனை வறுத்து எடுக்கிறார். சினிமா இலக்கணத்தின்படி வேலை இல்லாத பிரணவை தீவிரமாக காதலிக்கிறார்கள் ரிஷாவும், மோனிகாவும்.

ஒரு நாள் மோனிகாவை ஆபத்தில் இருந்து காப்பாற்றும்போது காலில் பலத்த காயம் அடைந்து, நடக்கமுடியாமல் அவஸ்தைப் படுகிறார் பிரணவ். அதே சமயம் ரிஷா தன்னுடைய காதலை முறித்துக் கொள்கிறார். ஒரு பக்கம் அப்பாவின் வசை மொழி, இன்னொரு பக்கம் காதல் தோல்வி என தவிக்கும் பிரணவ் வாழ்க்கையில் கரை சேர்ந்தாரா, இல்லையா என்பதே, இந்த நதிகள் நனைவதில்லை.

பிரணவும், மோனிகாவும் கதாபாத்திரங்களை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். வித்தியாசமான நடன அசைவுகளில் கவர்கிறார் ரிஷா. சௌந்தர்யன் இசையில் கே.ஜே.ஏசுதாஸ் பாடியுள்ள ‘உன்னை நேத்து ராத்திரி...’  செவிக்கு விருந்து. கதைக்குத் தேவையான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் கார்த்திக் ராஜா. காதல் காட்சிகள் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளை யதார்த்தமாக சிறப்பாக இயக்கி, பெற்றோருக்கு அறிவுரை சொல்லி அசத்தி இருக்கிறார் இயக்குனர் பி.சி.அன்பழகன்.