பாட்டுச் சீட்டில் காதல் சொன்ன பாடகர்!



பாட்டுச்சாலை


ஆண்பிள்ளை வேண்டி ஆந்திராவிலுள்ள ரேணுகாபுரத்தில் பிள்ளையார் கோவில் கட்டினார் மன்மதராஜு. வேண்டுதல் பலித்தது. மன்மதராஜு -லக்ஷ்மம்மா தம்பதிக்கு மகனாகப்பிறந்தார் ஏமல மன்மதராஜு ராஜா என்கிற ஏ.எம்.ராஜா. குழந்தை பிறந்த அடுத்த மாதத்திலேயே அப்பா இறந்துவிட்டார். ஆந்திராவில் ஆரம்பக்கல்வியை முடித்து, பி.ஏ படிப்புக்காக சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு வந்து சேர்ந்தார் ராஜா. கல்லூரியில் நடந்த இசைப் போட்டியில் பரிசு வாங்கினார்.

அதை அறிந்த ஹெச்.எம்.வி நிறுவனம் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தது. 'ஓ ஹ்ருதய ராணி', 'எந்த தூரம் ஈ பயணம்' என்று ராஜாவே தெலுங்கில் எழுதி, மெட்டமைத்த பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. அதற்குக் கிடைத்த வரவேற்பு அவரை சினிமாவுக்குக் கொண்டுவந்தது. 'ஓ ஹ்ருதய ராணி ' பாடலை வானொலியில் கேட்ட ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ராஜாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான 'சம்சாரம்' படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். 'சம்சாரம் சம்சாரம் சகல தர்மசாரம்...' என்ற பாடல் பிரபலமானது.

எம்.ஜி.ஆர் - மாதுரிதேவி நடித்த 'குமாரி' படத்தில் 'இருளிலே நிலவொளிபோல் அவர் வருவார்...' டூயட்டை ஜிக்கியுடன் இணைந்து பாடினார் ராஜா. 'பெற்ற தாய்' படத்தில் பி.சுசீலாவுடன் சேர்ந்து 'ஏதுக்கழைத்தாய் ஏதுக்கு...' பாடலைப் பாடினார். சுசீலாவுக்கு அதுதான் முதல் பாடல். கலைஞர் வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த 'நாம்' படத்தில் சி.எஸ். ஜெயராமன் இசையில் 'பேசும் யாழே பெண் மானே...'

 பாடலை ஜிக்கியுடன் இணைந்து பாடினார்.ராஜா- ஜிக்கியை ராஜ்கபூர் இந்திக்கு அழைத்தார். 'ஆஹ்' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் பாடல்களை அந்த ஜோடி பாடியது. 'குலேபகாவலி' படத்தில் எம்.ஜி.ஆருக்காக ராஜா பாடிய 'மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ...' நல்ல வரவேற்பைப் பெற்றது.

எஸ். “ராஜேஸ் வரராவ் இசையில் 'மிஸ்ஸியம்மா' படத்தில், 'பழகத்தெரிய வேணும்...', 'பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...', 'வாராயோ வெண்ணிலாவே...' பாடல்கள் ராஜாவுக்கு உச்சகட்ட புகழைக் கொடுத்தன. மாடர்ன் தியேட்டர்ஸ் ஒலிப்பதிவுக் கூடத்தில் தனியாக இருந்த ஜிக்கியிடம் பாட்டுக் காகிதத்தில் ,'உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசையா இருக்கு' என்று எழுதி நீட்டினார் ராஜா.  அம்மா லக்ஷ்மம்மாவும் அக்கா நாகம்மாவும் முறைப்படி பெண் கேட்டுப் போனார்கள். திருமணம் நடந்தது. சலபதிராவ் இசையில் 'அமரதீபம்' படத்தில், சுசீலாவுடன் இணைந்து பாடிய 'தேன் உண்ணும் வண்டு...' ராஜாவின் அங்கீகாரத்தை அகலப்படுத்தியது.

'மல்லிகா' படத்தில் டி.ஆர். பாப்பா இசையில் சுசீலாவுடன் சேர்ந்து பாடிய 'வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே...' ராஜாவின் ஹிட்களில் முக்கியமானது. 'பெற்ற மகனை விற்ற அன்னை' படத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் சுசீலாவுடன் இணைந்த 'தென்றல் உறங்கியபோதும்...' பாடலுக்கு அமோக வரவேற்புக் கிடைத்தது. ஸ்ரீதர் இயக்கிய 'கல்யாணப்பரிசு' படத்தில் இசையமைப்பாளர் நாற்காலியில் அமர்ந்தார் ராஜா. 'வாடிக்கை மறந்ததும் ஏனோ...', 'உன்னைக் கண்டு நான் ஆட...:, 'காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்...’, 'துள்ளாத மனமும் துள்ளும்...' பாடல்கள் ரசிகர் களின் பேராதரவைப் பெற்றன.          
                          
'களத்தூர் கண்ணம்மா' படத்தில் சுதர்சனம் இசை யில், 'ஆடாத மனமும் ஆடுதே...', 'கண்களின் வார்த்தைகள் புரியாதோ...', 'அருகில் வந்தாள்...' பாடல்கள் ஜெமினி கணேசன் சொந்தக் குரலில் பாடுவது போலவே அமைந்தன. ஸ்ரீதரின் 'தேன்நிலவு' படத்துக்கு இசையமைத்ததுடன் குரலாலும் வசியப்படுத்தினார் ராஜா.

 'பாட்டுப் பாடவா...', 'ஓஹோ எந்தன் பேபி...', 'காலையும் நீயே மாலையும் நீயே...' 'ஊரெங்கும் தேடி.....' என சுவையான பாடல்கள் அமைந்தும் படம் வெற்றி பெறவில்லை.  அந்தப்படத்தின் பின்னணி இசையமைப்பின்போது ஸ்ரீதருக்கும் ராஜாவுக்கும் இடையே கருத்து மோதல் வந்துவிட்டது. பின்னணி இசையமைக்க மறுத்துவிட்ட ராஜாவை எம்.ஜி.ஆர்தான் சமாதானம் செய்து, சம்மதிக்க வைத்தாராம்.

காலம் ஓடிக்கொண்டிருந்தது. தமிழ் சினிமாவிலிருந்து தன்னை ஒதுக்க நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்த ராஜா,  நூற்றுக்கணக்கான மலையாளப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.
ஒரு ரயில் பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் ராஜாவின் உயிர் பிரிந்தது. திருப்பதி கஜபதி நாயுடு - ராஜகாந்தம்மா தம்பதியின் மூத்த மகள் பிள்ளவாள்ளு கஜபதி கிருஷ்ணவேணி என்கிற ஜிக்கி. 

ரேடியோவில் கேட்கும் பாடலை அப்படியே பாடும் திறமை அவருக்கு இருந்தது. ஜெமினி ஸ்டுடியோவில் உதவி இயக்குனராக இருந்த தாய்மாமா சிட்டிபாபு நாயுடு மூலமாக 'சிட்டாடல்' கம்பெனி தயாரித்த 'ஞானசௌந்தரி'யில் பாடகியாக அடியெடுத்துவைத்தார் ஜிக்கி. 'அருள்தரும் தேவமாதாவே...' என்ற கம்பதாசனின் பாடல் எஸ்.வி.வெங்கட் ராமன் இசையில் வெளியானது. தொடர்ந்து 'பந்துலம்மா', 'மனதேசம்', 'தியாகய்யா' என படவாய்ப்பு கிடைத்தது.

ஜி.ராமநாதன் இசையில் 'மந்திரிகுமாரி' படத்தில் 'உலவும் தென்றல் காற்றினிலே...', 'வாராய் நீ வாராய்...' பாடல்கள் சிறந்த வரவேற்பைப்பெற்றன. அப்போது ஜிக்கியின் வயது 13. ஜிக்கியின் குரலால் கவரப்பட்ட ஜி.ராமநாதன் அவரைத் தனது ஆஸ்தான பாடகியாக்கினார். 'ஜமீன்தார்' படத்தில் 'லக்கி டிக்கி ஜிக்கி லக்கி...' என்று ஒரு பல்லவியை வைக்கும் அளவுக்கு ஜி. ராமநாதனின் அன்பு இருந்தது. 'உத்தம புத்திரன்' படத்தில் இடம்பெற்ற 'யாரடி நீ மோகினி...' அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

'எனக்கு நிகராகப் பாடக்கூடியவள் இந்தப் பெண்' என்று லதாமங்கேஷ்கரும், 'இவள் தென்னிந்தியாவின் லதா' என்று ராஜ்கபூரும் ஜிக்கியைப் பாராட்டியிருக்கிறார்கள். 'குணசுந்தரி'யில் இடம் பெற்ற 'கலையே உன் விழிகூட கவிபாடுதே...' பாடல் ராஜா - ஜிக்கி இணை குரலில் வெற்றி பெற்றது.

'பதிபக்தி'யில் 'கொக்கரக் கொக்கரக்கோ சேவலே...', 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் 'கண்ணும் கண்ணும் கலந்து...' ஆகிய பாடல்கள் ஜிக்கியின் தேன்குரலுக்குச் சான்றானவை. 'தேனும் பாலும்' படத்தில் ஜானகியுடன் சேர்ந்து அவர் பாடிய 'மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்...', 'புகுந்த வீடு' படத்தில் ராஜாவுடன் பாடிய 'செந்தாமரையே...' பாடல்களும் ஜிக்கியின் பெருமை பேசும். சினிமா வாய்ப்பு குறைந்துபோன காலகட்டத்தில், கச்சேரிகளில் பாடி குடும்பத்தைக் காப்பாற்றினார் ஜிக்கி.

நெல்லைபாரதி

அடுத்த இதழில்...
பாடலாசிரியர் இளையகம்பன்!