சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் வழங்கும் படம். ஒரு சினிமா டிக்கெட் கட்டணத்தில் பிரான்சை சுற்றிப்பார்க்க வைத்து அசத்தியுள்ளார்கள்.
இந்தியாவில் பிறந்து, வெளிநாட்டுக் கலாச்சாரத்தை விரும்பும் ஜெயம் ரவி & வெளிநாட்டில் பிறந்து, இந்தியப் பண்பாட்டை நேசிக்கும் ஹன்சிகா மோத்வானி இருவருக்கும் இடையே குட்டிக் குட்டி கவிதைகளாய் விரியும் காதல் கெமிஸ்ட்ரிதான் கதை.
கமல் என்ற கேரக்டரில் ஹைடெக் பாயாக அமர்க்களப் படுத்தியுள்ளார் ஜெயம் ரவி. கயல்விழி கதாபாத் திரத்தில் அழகும் நடிப்பும் கலந்து ரகளை பண்ணியிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி.
தனது பாய்பிரண்டுகள் லிஸ்ட்டை ஹன்சிகா சொல்லும் போதும், அதன் பிறகும் ஜெயம் ரவியின் முகத்தில் பரவும் சோகம், அவரது நடிப்புத் திறனுக்கு சான்றாக ஜொலிக்கிறது.
ஜெயம் ரவி இந்தியாவுக்குத் திரும்பும் போது, ஹன்சிகா முகத்தில் தெரியும் சோகம், அவரது நடிப்புத்திறனை வெளிக் காட்டுகிறது.
எட்டுப் பாடல்களைக் கொண்ட இந்தப் படத்தில் இசையின் முக்கியத்துவமும் ஹாரிஸ் ஜெயராஜின் உழைப்பும் பாராட்டப்பட வேண்டியவை.
பிரான்சின் அழகை கேமராவுக்குள் வைத்து கடத்தி வந்து, நமக்கெல்லாம் விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.
கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகள் அதிரடி கலந்த அழகாக இருக்கிறது.
‘நோ கமிட்மெண்ட்ஸ், நோ டிஸ் அப்பாயின்மெண்ட்ஸ்’ என்ற தத்துவ வரிகளில் வசனகர்த்தாக்கள் ரவிசக்ரவர்த்தி, பிரேம்சாய், ஜெயக் கண்ணன் ஆகியோர் முகம் காட்டுகிறார்கள்.
ஆண்டனியின் படத்தொகுப்பு படத்தின் வேகத்துக்கு துணை நிற்கிறது. பிரகாஷ் ராஜின் கேரக்டரை புதுமைப்படுத்தி இருக்கிறார் பிரபு தேவா.
பாசக்கார அப்பாவாக பரிமளித்துள்ளார் சுமன். அதிகமாக வசனம் பேசாமலேயே சிரிக்க வைக்கிறார் ராஜூ சுந்தரம்.
கதை சொல்லும் விதமாக அமைந்த ‘எங்கேயும் காதல்...’ பாடலுக்கு நடனத் துடன் நடித்து மனதைக் கொள்ளையடிக்கிறார் பிரபுதேவா.
‘எங்கேயும் காதல்’ படம் ஓடுகின்ற அத்தனை நாட்களும் காதலர் தினம்தான் என்று சொல்லத்தக்க வகையில் இயக்கி, காதலர்கள் மனதில் மட்டுமல்ல, பெற்றோர்கள் மனதிலும் பசை யாய் ஒட்டிக் கொள்கிறார் பிரபுதேவா.