மத்திய அமைச்சராகும் நடிகைகள்





கர்நாடக மாநிலத்தில் திடீரென்று அரசியலுக்குள் புகுந்து அடுத்த சில மாதங்களிலேயே எம்.பி.யாகி பாராளுமன்றத்துக்குள் நுழைந்து விட்டார் குத்து ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. கண்மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்த இந்த மாயாஜாலம் மேலும் சில இளம் நடிகைகளை அரசியலை நோக்கி திரும்ப வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் நமீதா அந்த ஆசையில் இருப்பது பழைய செய்தி. அவர் தனது அரசியலை தொடங்குவது பிறந்த மாநிலமான குஜராத்திலா, அல்லது தமிழ்நாட்டிலா என்பது இன்னும் முடிவாகவில்லை. அடுத்து ஆந்திராவில் லட்சுமி மஞ்சு.

ஏற்கெனவே ஆந்திராவில் அதிரடி அரசியல்வாதியாக வலம் வந்த மோகன்பாபுவின் மகள்தான் இவர். திருப்பதியைச் சுற்றி ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களைத் தொடங்கிய பிறகு அரசியலை ஒதுக்கிவிட்டு கல்வித் தந்தையாகி விட்டார் மோகன்பாபு. அதனால் இப்போது தனது அரசியல் வாரிசாக மகள் லட்சுமி மஞ்சுவை களம் இறக்க இருக்கிறார்.

சமீபத்தில் ஐதராபாத் வந்திருந்த நரேந்திர மோடியை குடும்பத்துடன் சந்தித்த மோகன்பாபு, மகளை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். லட்சுமி மஞ்சு அமெரிக்காவில் படித்தவர். தைரியமாக பேசக்கூடியவர். தமிழில் ‘கடல்’ படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். ‘மறந்தேன் மன்னித்தேன்’ என்ற படத்தை தெலுங்கு மற்றும் தமிழில் தயாரித்து நடித்தார்.

ஆந்திரா முழுக்க விரைவில் இவர் பாரதீய ஜனதா கட்சியில் இணைவார் என்றே பேச்சு அடிபடுகிறது. மோகன்பாபுவுக்கு செல்வாக்குள்ள தொகுதியில் போட்டியிடுவார் என்றும், வெற்றி பெற்றால் அமைச்சராவது உறுதி என்றும் சொல்கிறார்கள். ஆனால், லட்சுமி மஞ்சுவோ, ‘இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் எங்கள் குடும்பத்துக்கு பிடிக்கும். அதனால் சந்தித்துப் பேசினோம்...’ என்கிறார்.

எப்படியோ அடுத்த அமைச்சரவையில் ஒரு கலர்ஃபுல் அமைச்சர் கிடைப்பார். காங்கிரஸ் ஜெயித்தால் திவ்யா ஸ்பந்தனா, பா.ஜ.க ஜெயித்தால் லட்சுமி மஞ்சு.
- சினிமா பாண்ட் 007