வெற்றி ராஜா





உற்சாகத்தின் மறு பெயர் என்று சொல் லுமளவுக்கு எப்போது சந்தித்தாலும் உற்சாகமாக பேசக் கூடியவர் விஷால். ‘மதகஜ ராஜா’ ரீலிஸான மகிழ்ச்சியில் இருந்தவரிடம் பேசினோம்.
‘‘இதுவரை நான் எத்தனையோ கமர்ஷியல் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் எனக்கு ஸ்பெஷல். அதற்கு காரணம் இயக்குநர் சுந்தர்.சி. கமர்ஷியல் கதையை எப்படி சொல்ல வேண்டும், அதற்கு எப்படி கதை, திரைக்கதை அமைக்க வேண்டும் என்பதை தெளிவாக அறிந்திருப்பவர். இதற்கு அவர் இயக்கிய படங்களையே உதாரணமாக சொல்லலாம்.

அந்தவகையில் சமீபத்தில் பெரிய ஹிட் அடித்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தை சொல்லலாம். அந்தளவுக்கு சுந்தர்.சி கதை விவரிக்கும் விதம் அழகாக இருக்கும். அதுமட்டுமல்ல, ஆர்டிஸ்ட்டுகளிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்கிற வித்தையையும் கற்றவர். பிழிய வேண்டிய இடத்தில் பிழிந்து, சுதந்திரம் கொடுக்க வேண்டிய இடத்தில் சுதந்திரம் கொடுத்து, மிகப் பிரமாதமான நடிப்பை வெளிக் கொண்டு வந்துவிடுவார்.

வெற்று உடம்புடன் சண்டை போட்ட காட்சியைத் தவிர நான் இந்தப் படத்துக்காக அதிகம் மெனக்கெடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த அளவுக்கு எவ்வளவு பெரிய சிக்கலான காட்சியையும் எந்தவித டென்ஷனும் இல்லாமல் ரிலாக்ஸாக நடிக்ககூடிய அளவுக்கு நடிகர்களை தயார்படுத்தி இருந்தார்.

இந்தப் படத்தை ஆரம்பித்த போது எந்தளவுக்கு உற்சாகம் இருந்ததோ அதே அளவு உற்சாகம் கடைசிவரை இருந்தது. இதற்குக் காரணம் எங்கள் டீமிடம் இருந்த ஒற்றுமையும் அர்ப்பணிப்பும்தான். சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா, சோனு சூட், வரலட்சுமி, சதா, அஞ்சலி என நடிகர்கள் தரப்பில் இருந்தும், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் என்று டெக்னீஷியன்கள் தரப்பிலும் இருந்தும் மிகச் சிறந்த ஒத்துழைப்பு கிடைத்தது’’ என்று பூரிக்கிறார் விஷால்.
- ரா