டியூஷனைத் தவிர வேறொன்றுமில்லை






விஜய் நடித்த ‘நினைத்தேன் வந்தாய்’, ‘ப்ரியமானவளே’, ‘வசீகரா’ உட்பட ஏராளமான படங்களை இயக்கிய செல்வபாரதி இந்த முறை செல்வபாரதி குமாரசாமி என்கிற பெயர் மாற்றத்துடன் இயக்கும் படம் ‘காதலைத் தவிர வேறொன்றுமில்லை’. நாயகனாக ‘கீரிபுள்ள’ யுவன் நடிக்கிறார். நாயகி சரண்யா மோகன். இமான் அண்ணாச்சி, தீப்பெட்டி கணேசன் ஆகியோருடன் ராகுல், ரோகித் உட்பட 15 புதுமுகங்களும் இருக்கிறார்களாம்.

‘‘இந்த மாடர்ன் உலகத்தில் வீட்டை வீட்டு வெளியே வரும் பெரும்பாலான மக்கள் பலவித டென்ஷனுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், காலைப் பொழுது விடியும் போது எந்தவித கவலையும் இல்லாமல் டியூஷன் செல்லும் மாணவர்கள் நம் கவனத்தை ஈர்ப்பதுண்டு. அந்தவகையில் குறும்பு வழியும் அந்த மாணவர்களின் வாழ்க்கையை இதில் சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளேன்.

இயற்கை நமக்குக் கொடுத்த மிகப் பெரிய அதிசயம் காதல். அந்த காதலை என்னுடைய நாயகனும் நாயகியும் எப்படி பார்க்கிறார்கள் என்பதை புதிய கோணத்தில் சொல்லியுள்ளேன். இதுவரை காமெடி டிராக்கில் நடித்து வந்த இமான் அண்ணாச்சி முதன் முறையாக முழு நீள காமெடியில் பின்னியிருப்பார். நான் இயக்கிய 10 படங்களில் ஸ்டில் போட்டோகிராபராக வேலை பார்த்த பூபதி, இதில் ஒளிப்பதிவாளராக அறி முகமாகிறார்.

என்னுடைய படங்களுக்கு எப்போதும் தனி கவனம் அளித்து இசையமைக்கும் ஸ்ரீகாந்த் தேவாவின் மெனக்கெடலுக்கு ‘நோக்கியா பொண்ணு சாம்சங் பையன் டொக்கோமா சிம்மு நீ ரொமான்ஸ் பண்ணு’ பாடலைச் சொல்லலாம். பள்ளி மாணவர்கள் டீச்சரை விரோதியாக ஏன் பார்க்கிறார்கள்? அவர்களுடைய மன அழுத்தத் துக்கான காரணம் என்ன? என்பதற்கான பதிலையும் இதில் அழுத்தமாகச் சொல்லியுள்ளேன்...’’ என்கிறார் இயக்குநர் செல்வபாரதி குமாரசாமி.
- எஸ்