எப்படிப்பட்ட கணவர் வேண்டும்?




செந்தமிழ்நாட்டு தமிழச்சியே! எதிர்காலத்தில் சமூக சேவையில் ஈடுபடும் எண்ணம் உண்டா?
- கா.கருப்பசாமி, சங்கரன்கோவில்.


இப்போது கூட என்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்துகொண்டுதான் இருக்கிறேன். என்றாலும், அதை வெளியே சொல்லி விளம்பரப்படுத்த நான் விரும்பவில்லை. சினிமாவில் நடித்து நிறைய பணம் சேர்ந்த பிறகு வேண்டுமானால், பெரிய அளவில் மற்றவர்களுக்கு நான் உதவி செய்ய முடியும்.

படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால், இயக்குவீர்களா? அல்லது ஓடிவிடுவீர்களா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.


கண்டிப்பாக ஓடிவிடுவேன். காரணம், படம் இயக்குவது என்பது மிகப் பெரிய வேலை. அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். மிகப் பெரிய அளவில் பொறுமை தேவை. அது என்னிடம் இருப்பதாக இன்றளவும் எனக்குத் தெரியவில்லை.

உங்கள் வருங்காலக் கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?
- ஜி.நிரஞ்சனா, சென்னை - 44.


நல்லவராக இருக்க வேண்டும். பணக்காரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிகம் படித்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. என்னை கடைசிவரை நம்புபவராக, கண் கலங்காமல் காப்பாற்றுபவராக இருந்தால், அதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

உங்களின் நிறைவேறாத ஆசை என்ன?
- ஆர்.தாமஸ், நாகர்கோவில்.


இதுவரை அப்படி எந்த ஆசையும் இல்லை. கடவுள் எனக்கு என்ன கொடுத்திருக்கிறாரோ, அதை வைத்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கிடைத்ததை வைத்துக்கொண்டு சிறப்பாக வாழ்ந்தால்தான் முழுமையான திருப்தி கிடைக்கும்.

நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?
- எம்.இஸ்மாயில், அரக்கோணம்.


பிளஸ் ஒன் படித்தேன். அதை முடிக்கவில்லை. நடிக்க வந்து விட்டேன். இப்போது உலகத்தையும், பல்வேறு குணங்கள் கொண்ட மனிதர்களையும் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்த அனுபவம் வித்தியாசமானது. நிறையவே கற்றுத் தருகிறது.

உங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு எது? வீரர் யார்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.


எனக்குப் பிடித்த விளையாட்டு, வாலிபால். என்னைப் பெரிதும் கவர்ந்த விளையாட்டு வீரர், விராத் கோஹ்லி.

நாய்கள் மீது த்ரிஷா அதிக பாசம் காட்டுகிறார். நீங்கள் எந்தப் பிராணியை அதிகம் நேசிக்கிறீர்கள்?
- வேலன், கோவை.



எனக்கும் நாய்கள் என்றால் உயிர். ரோடுகளில் திரியும் நாய்களைப் பார்த்தால் மனசு கஷ்டப்படும். வீட்டில் வளர்க்க ஆர்வம் இருந்தாலும், அவற்றை கவனித்துக்கொள்ள சரியான ஆட்கள் இல்லை என்பதால், தெரிந்தவர்கள் வீட்டில் வளரும் நாய்களை பாசத்துடன் கொஞ்சுவேன்.

 ஏஞ்சலினா ஜோலியின் சாயலில் இருக்கும் நீங்கள், ஹாலிவுட் படத்தில் நடிப்பீர்களா?
- ப.முரளி, சேலம்.


முதலில் உள்ளூர் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி சாதித்துக் காட்டுகிறேன். பிறகு உங்கள் விருப்பப்படி ஹாலிவுட்டுக்கு செல்கிறேன். அதற்கு முன் பாலிவுட் இருக்கிறதே...

உலகம் முழுவதும் பெண் கொடுமைகள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?
- சங்கீதசரவணன், மயிலாடுதுறை.


இந்த உலகம் சீக்கிரமே அழியப் போகிறது என்று தோன்றுகிறது. இப்போதே சுனாமி, பூகம்பம், புயல் என்று மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறதே... கவனித்தீர்களா? இனிமேல் ஒவ்வொரு பெண்ணும் குங்பூ உள்பட தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்ள பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும். எல்லா பெண்களும் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் போராட முன்வர வேண்டும்.

உங்கள் குரலில் ‘ஆண்மைத்தனம்’ கலந்திருக்கிறதே! அதுபற்றி கவலைப்படவில்லையா?
- மனோகரன், தர்மபுரி.


ஒவ்வொருவருக்கும் பிளஸ் பாயின்ட், மைனஸ் பாயின்ட் உண்டு. அதுபோல் எனக்கும் கொஞ்சம் அப்படி இருக்கலாம். அதற்காக சர்ஜரியா பண்ண முடியும்? குரல் வளம் என்பது, ஆண்டவன் கொடுத்த பரிசு. அதற்காக நான் வருத்தப்படவில்லை.
(இன்னும் சொல்வேன்)
தொகுப்பு: தேவராஜ்