‘‘மணி யான இயக்குநர் மீது ராவண நடிகர் கடும் வருத்தத்தில் இருக்கிறாராம் தெரியுமா?’’ என்று சொல்லிக் கொண்டே வந்தமர்ந்தார் சரோஜா. ‘‘மணியானவர் அடுத்து எடுக்கவிருக்கும் வரலாற்றுப் படத்தில் இளைய முன்னணியோடு சேர்ந்து இவரும் நடிப்பதாக இருந்த தல்லவா? அது நடக்காமல் போனதால் வருத்தத்தில் இருக்கிறாரா?’’ என்று நாம் கேட்டதும், ‘‘அது நடக்காமல் போனதற்கு நடிகர்தான் காரணம்’’ என்றார் சரோஜா.
‘‘என்ன குழப்புகிறீர்? அப்புறம் ஏன் நடிகர் வருத்தமாக இருக்கவேண்டும்?’’ என்று நாம் கேட்க, விளக்கமாகச் சொல்லத் தொடங்கினார் சரோஜா. ‘‘முதலில் இளைய முன்னணியோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்று சொன்னபோது சந்தோஷமாக ஒப்புக்கொண்டாராம் இவர். அதன்பின் படத்தின் கதை மற்றும் கால்ஷீட் விவரங்களைக் கேட்டதும்தான் நடிகருக்குக் கோபம் வந்து படத்திலிருந்து விலகிக்கொண்டார் என்று சொல்கிறார்கள்.
ஏனெனில் கதைப்படி படத்தில் இவர் அரைமணி நேரம் தான் வருவாராம். அதற்காக ஐம்பது நாட்கள் தேதிகொடுத்தால் போதும் என்று கேட்டார்களாம். அதே சமயம், இளைய முன்னணியிடம் நூற்றுப்பத்து நாட்கள் தேதி கேட்டிருந்தார்களாம். இதைக் கேள்விப்பட்டதும்தான் நடிகருக்குக் கோபமாம். இருவருக்கும் சமமான அளவில் வேடம் இருக்கும் என்று நம்பித்தான் சேர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டாராம்.இப்போது படத்திலிருந்து விலகிக் கொள்வதாகச் சொல்லிவிட்டாராம்.அதன்பிறகு ஆரியரை ஒப்பந்தம் செய்ததாகச் சொல்கிறார்கள்’’ என்று முடித்த சரோஜா அடுத்த செய்திக்குப் போனார்.
‘‘தேவ நடிகையின் தம்பி நடிகரை வைத்து ஈரமான படமெடுத்த இயக்குநர் இப்போது ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் நடிகருக்கு ஜோடியாக நடிக்க தற்போது தமிழில் வெப்பமான படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் தெலுங்கு நித்திய நடிகையைக் கேட்டார்களாம். அவருக்கு இன்னும் தமிழில் ஒரு படம் கூட வெளியாக வில்லை என்பதால், புதிதாகவும் இருப்பார் சம்பளம் குறைவாகவும் இருக்கும் என்பதுதான் இயக்குநரின் எண்ணமாக இருந்திருக்கிறது. ஆனால் அவர் நினைப்பிற்கு நேரெதிராக இருந்திருக்கிறார் நடிகை.
‘இந்த ஹீரோவுடன் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. அப்படியே நான் நடிப்பதாக இருந்தாலும் ஒருபெரிய தொகையைச் சம்பளமாகத் தந்தால்தான் ஆச்சு’ என்று சொல்லிவிட்டாராம். இவர்களோ ‘அவ்வளவு சம்பளம் தரமுடியாது இவ்வளவு வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று கொஞ்சம் குறைத்துப் பேசியதும் டென்ஷனான நடிகை, ‘தெலுங்கில் இப்போது இருக்கும் கமிட்மெண்ட்ஸை முடிக்கவே எனக்கு நேரமில்லை. எனவே என்னை விட்டுவிடுங்கள் என்று விலகிவிட்டாராம்’’ என்ற சரோஜா, ‘‘எனக்கும் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்கு. அடுத்த வாரம் சந்திப்போம்’’ என விடைபெற்றார்.