சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் அடுத்த கலகல படம் ‘மாப்பிள்ளை’. போஸ்ட் புரொடக்ஷன் பணியில் பிஸியாக இருந்த இயக்குனர் சுராஜிடம் படத்தைப் பற்றி கேட்டோம். ‘‘ரஜினி நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தின் மாமியார் &மருமகன் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப காதல், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என்று பக்கா கமர்ஷியல் படமாக இயக்கியுள்ளேன்.
மாமியார், மருமகன் இடையே நடக்கும் ஈகோ யுத்தம்தான் கதை. சரவணன் என்ற கதாபாத் திரத்தில் தனுஷ் நடிக்கிறார். குறும்பு, காதல் என்று இவருடைய நடிப்பு ரகளையாக இருக்கும்.
காயத்ரி என்ற கேரக்டரில் ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். திமிர் பிடித்த பணக்கார வீட்டுப் பெண்ணாக நடிக்கும் ஹன்சிகா, இந்தப் படத்துக்குப் பிறகு நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறிச் செல்வது நிச்சயம். அந்தளவுக்கு வஞ்சனை இல்லாமல் தன் அழகை ரசிகர்களுக்கு விருந்தாகப் படைத்துள்ளார்.
மாமியார் ரோலில் நடிக்க ஸ்ரீதேவி, மீனா என்று பல நடிகைகள் பரிசீலனையில் இருந்தார்கள். கடைசியில் வந்தவர்தான் மனீஷா கொய்ராலா. பிடிவாதம், வாக்குவாதம் என்று தனுஷிடம் அவர் மோதும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும். வில்லனாக ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார். அவருடைய மகனாக ஆர்யன் நடிக்கிறார். சைல்ட் சின்னா என்ற கேரக்டரில் விவேக் நடிக்கிறார்.
பத்தாம் வகுப்பு பாஸாக வேண்டும் என்பதுதான் இவருடைய லட்சியம். அது நிறைவேற அவர் தவிக்கும் தவிப்பு திகட்டாத காமெடியாக வந்துள்ளது. தவிர பாண்டு, மனோபாலா, சிட்டிபாபு, சத்யன் என்று ஒவ்வொருத்தரும் அடிக்கும் லூட்டி படத்தில் பியூட்டியாக இருக்கும்.
மணிஷர்மாவின் இசையைப் பற்றி சொல்ல வேண்டும். ஐந்து பாடல்களையும் வெவ்வேறு ரகமாகக் கொடுத்துள்ளார். பா.விஜய், சினேகன், விவேகா மூவரும் வரிகளுக்கு உயிர் கொடுத்து எழுதியிருக்கிறார்கள்.
‘என்னோட ராசி நல்ல ராசி...’ பாடலை திருநெல்வேலியில் ஒரு கோடி ரூபாய் செலவில் திருவிழா செட் அமைத்து படமாக்கினோம். ஒளிப்பதிவாளர் ‘பேராண்மை’ சதீஷ் கடுமையாக உழைத் துள்ளார். ஆர்ட் டைரக்டர் பாபு அமைத்துள்ள அரண்மனை போன்ற வீடு படத்தில் தனித்துவமாக இருக்கும். இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கே மாப்பிள்ளையாக தனுஷ் இருப்பார்’’ என்று உற்சாக மாகப் பேசுகிறார் இயக்குனர் சுராஜ்.
சுரேஷ்ராஜா