‘டேம் 999’ படத்தில் நடித்தது ஏன்? பதில் சொல்கிறார் விநய்





மூன்று வருடங் களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கிறார், விநய். ‘ஏன் இந்த இடைவெளி?’ என்றபோது, வருத்தம் தொனிக்கும் குரலில் பேசினார்.

‘‘நல்ல படத்தில் நடிக்க வேண்டும். நான் ஏற்றுக்கொண்ட கேரக்டர், தொடர்ந்து என்னை தமிழில் நிலைக்கச் செய்ய வேண்டும். அதற்காகவே இத்தனை நாட்கள் காத்திருந்தேன். ஆனால், என்னைப் பார்க்கும் எல்லோரும் இப்படி துக்கம் விசாரிப்பது போல் கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது. தமிழில் ‘உன்னாலே உன்னாலே’யில் அறிமுகமான எனக்கு அடுத்த படமாக ‘ஜெயம் கொண்டான்’ அமைந்தது. பிறகு ‘மோதி விளையாடு’. மூன்று படங்களும் ரசிகர்களிடம் என்னை அடையாளம் காட்டியது. திடீரென்று ஒரு வெற்றிடம் ஏற்பட்ட நேரத்தில், டைரக்டர் மாதேஷ் வந்தார். ‘மிரட்டல்’ கதையைச் சொன்னார். பிடித்திருந்தது. ஒப்புக்கொண்டேன். தமிழில் ரீ- என்ட்ரிக்கு இந்தப் படம் மிகப் பெரிய உதவி செய்யும் என்று நம்புகிறேன்...’’ என்றார்.

ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறீர்களாமே?
யெஸ். சாக்லெட் பாய் இமேஜை மாற்ற ஏதாவது ஒரு படம் கிடைக்காதா என்று எதிர்பார்த்த நேரத்தில், ‘மிரட்டல்’, நூறு சதவீதம் தில்லுமுல்லு வாய்ப்பு கிடைத் தது. இதில் நான் ஆக்ஷனுடன் கூடிய காமெடி ஹீரோவாக நடித்துள்ளேன்.



வெளிநாடு ஷூட்டிங்கில் சுவாரஸ்யம்?
லண்டனில் ஷூட்டிங் நடந்தது. பிறகு வெந்நீர் ஊற்றுகள் பொங்கி வழிந்த பகுதிகளில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது வேடிக்கை பார்க்க வந்த உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெந்நீர் ஊற்றுகளைப் பார்ப்பதை விட்டுவிட்டு, ‘மிரட்டல்’ ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தனர். எனது ஹேர் ஸ்டைல் மற்றும் காஸ்டியூம்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். நான் ஒப்பந்தமானபோது மும்பை சென்ற டைரக்டர், புது ஹேர் ஸ்டைல் என்ன என்று கேட்டு, அந்த ஸ்டைலுக்கு ஏற்ப என்னை மாற்றினார். பல லட்சம் ரூபாய் செலவழித்து உடைகள் வாங்கினார். இந்தப் படத்தில் நான் அழகாக, கம்பீரமாக இருக்கிறேன் என்றால், அதற்கு முழு காரணம் மாதேஷ் மட்டுமே.

சிவாஜி வீட்டில் கண்கலங்கினீர்களாமே?
நடிப்பில் மிகப்பெரிய சாதனை படைத்தவர், நடிகர் திலகம். சென்னையிலுள்ள அவருடைய அன்னை இல்லத்தில், இதற்குமுன் அஜீத் நடித்த ‘அசல்’ ஷூட்டிங் நடந்தது. அது சிவாஜி புரொடக்ஷன்சின் தயாரிப்பு. ஆனால், மாதேஷ் தயாரித்துள்ள இப்படத்துக்கு நடிகர் திலகத்தின் வீட்டின் உட்புறத்தைக் கேட்டபோது, பிரபு மனமுவந்து அனுமதி கொடுத்தார். இந்தப் படத்தில் அவர் முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்கிறார். அன்னை இல்லத்தில் ஷூட்டிங் நடந்தபோது, பிரபுவின் குடும்பத்தார் எங்களுக்கு கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது. அதுமட்டுமின்றி, நடிகர் திலகத்தின் பெர்சனல் அறைக்கும் எங்களை அழைத்துச் சென்றனர். உலகின் மாபெரும் நடிகர் பயன்படுத்திய சில பொருட்களைப் பார்த்தபோது, பரவசம் ஏற்பட்டு கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

‘டேம் 999’ படத்தில் நடித்தது ஏன்?
முதலில் அந்தப் படம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒரு நடிகன் என்ற முறையில், என்னிடம் கால்ஷீட் கேட்டார்கள். கொடுத்தேன். நடித்தேன். பிறகுதான் அந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து அறிந்தேன்.
- தேவராஜ்
படங்கள் :  ‘மிரட்டல்’