நியூ குஷி





இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றிப் பெற்ற எஸ்.ஜே.சூர்யா, இப்போது இசையமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். தான் எழுதி, இயக்கி, நடிக்கும் ‘இசை’ படத்துக்காகத்தான் இப்படியொரு பரிமாணத்தை வழங்கப் போகிறார்.

“ஏ.ஆர்.ரகுமான்தான், நான் இசையமைப்பாளராக கால் பதிக்கக் காரணம். தெலுங்கில் நான் இயக்கிய ‘கொமரம் புலி’ படத்துக்கு அவர்தான் இசை. அப்போது பாடல் கம்போஸிங்கில் எனது ஈடுபாட்டை பார்த்த அவர், ‘முறைப்படி இசையை கற்றுக் கொண்டால், உங்களால் இசையமைப்பாளராக முடியும்’ என நம்பிக்கை அளித்தார். அதன்படி சிலகாலம் இசையை கற்றுக் கொண்டு, இதோ களம் இறங்கி விட்டேன்...’’ என்று சிரித்தவரிடம், ‘இசை’ என்ன மாதிரியான படம் என்றோம்.

‘‘புதிய இசைய மைப்பாளரின் வருகையால் பழைய இசையமைப்பாளர் தன்னுடைய மார்க்கெட்டை இழக்கிறார். இழந்த புகழை தன் காதலியின் உதவியுடன் எப்படி அவர் மீண்டும் அடைகிறார் என்பதுதான் படம். பொதுவாக என்னுடைய படங்களில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். அப்படித்தான் இந்தப் படமும். இதற்காக சலித்து அலசி, மும்பையிலிருந்து சாவித்திரியை அழைத்து வந்துள்ளேன்.

பிரகாஷ்ராஜும், எம்.எஸ்.பாஸ்கரும் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். கே.வி.ஆனந்தின் சீடர் சௌந்தர்ராஜன், தன் ஒளிப்பதிவால், படத்துக்கு அழகு சேர்த்திருக்கிறார். ஏ.எஸ்.ஏ. மல்டிமீடியா சார்பில் விக்டர் ராஜபாண்டியன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்...’’ என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
- சுரேஷ்ராஜா