சிகரெட், மதுவால் தள்ளாடும் திரையுலகம்





தமிழனையும், மதுவையும் எந்தக் காலத்திலும் தனித்தனியாக பிரிக்க முடியாது. சங்க காலத்திலிருந்தே சோம பானம் அருந்தி களித்தவர்கள் நாம். கள் போதை பற்றி பண்டை இலக்கியங்கள் சிலாகித்துப் பேசுகின்றன. இப்படி காலம் காலமாக கவிஞனுக்கு பாடு பொருளாகவும், படைப்பாளிக்கு காட்சிப் பொருளாகவும் இருக்கும் மதுவுக்கு இப்போது ஆப்பு வைத்திருக்கிறது, தணிக்கை குழு.

திரைப்படங்களில் புகை பிடிக்கும், மது குடிக்கும் காட்சிகளை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதனால் சமீபகாலமாக இந்த காட்சிகளில் தணிக்கை குழு கண்டிப்புடன் நடந்து வருகிறது. முன்பெல்லாம் கதைக்கு கண்டிப்பாக தேவை என்கிற பட்சத்தில் வைக்கப்பட்ட புகை பிடிக்கும், மது குடிக்கும் காட்சிகளை தணிக்கை குழு, நீக்கச் சொன்னதில்லை. ஆனால், இப்போது எந்த இடத்திலும் புகை பிடிக்கும் காட்சியோ, மது அருந்தும் காட்சியோ இருக்க கூடாது என்று தணிக்கை குழு சொல்கிறது.

அப்படி இருந்தால் அதை மறைக்க வேண்டும் இல்லா விட்டால் அந்த காட்சியை நீக்க வேண்டும் என்கிறது தணிக்கை குழு. அப்படி நீக்கினால்தான் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் தரப்படுகிறது. நீக்காவிட்டால் எத்தனை நல்ல படமாக இருந்தாலும் ‘யு/ஏ’தான் வழங்கப்படுகிறது. அத்துடன் ‘யு/ஏ’ கொடுக்கப் பட்டாலும் சம்பந்தபட்ட காட்சிகள் வரும்போது கீழே ‘உடல் நலத்துக்கு தீங்கானது’ என்ற வாசகம் வரவேண்டும். அதுமட்டுமல்ல, தமிழக அரசின் விதிமுறைப்படி யு’ சான்றிதழ் பெற்ற படங் களே வரிவிலக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த விதிமுறையை அறியாத பல படங்கள் சிகரெட், மது காட்சிகளோடு தயாராகிவிட்டன. இப்போது அவர்கள் ‘யு’ சான்றிதழுக்காக அந்தக் காட்சிகளை நீக்கி வருகிறார்கள். அவற்றை நீக்கவே முடியாத படங்கள் விரிவிலக்கு பெற முடியாமல் தவிக்கின்றன.

சமீபத்தில் வெளியான ‘கழுகு’ படம், கொடைக்கானல் மலையில் தற்கொலை செய்யும் காதலர்களை பற்றியது. மலையில் விழுந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் உடலை எடுத்து வருவதுதான் ஹீரோவின் வேலை. சிதைந்த உடல்களை எடுத்து வருதற்கான மன வலிமைக்கும், உழைப்புக்கும் அந்த கேரக்டர் மது அருந்துவதும் பீடி குடிப்பதும் தவிர்க்க முடியாதது. எனவே படத்தில் ஹீரோ வருகிற காட்சியில் எல்லாம் அவர் வாயில் பீடி புகைந்து கொண்டிருக்கும். இந்தப் படத்தின் காட்சிகளை நீக்கவே முடியாது. நீக்கினால் படமே இல்லை. படத்தின் கதையை சென்சார் பாராட்டி தீர்த்தார்கள். ஆனால், சிகரெட், மது காட்சியிருப்பதால் ‘யு/ஏ’தான் கொடுத்தார்கள். வரிவிலக்கு கிடைக்காததால் தயாரிப்பாளருக்கு சுமார் ஒரு கோடி நஷ்டம்.


இதேபோல பல படங்கள் சிகரெட் பிடிக்கும் காட்சிக்காக வரிவிலக்கை இழந்திருக்கிறது. 1950களில் நடந்த பஞ்சாலை தொழிலாளர்களின் பிரச்சினையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’. ‘‘இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் புகைபிடிக்கும் பழக்கம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதைத்தான் நாங்கள் படம் எடுத்தோம். அதிலும் படத்தின் நாயகனோ, முக்கியமான கதாபாத்திரங்களோ புகை பிடிப்பதில்லை. ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள்தான் புகைப்பிடிக்கிறார்கள். இவற்றை நீக்கினால் மட்டுமே ‘யு’ சர்டிபிகேட் கிடைக்கும் என்பதால், அந்தக் காட்சிகளை நீக்கி விட்டு, புதிதாக வேறு காட்சிகளை சேர்த்திருக்கிறோம். படத்துக்கு வரிவிலக்கு தேவை என்பதால்தான் இப்படி செய்யும்படி ஆகிவிட்டது...’’ என்கிறார் இயக்குநர் தனபால் பத்மநாபன்.
‘‘அரசின் விதிமுறைகளின் படியே தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுகிறது. தனிப்பட்டவரின் விருப்பு வெறுப்புக்கு இடம் இல்லை. படங்களுக்கு வரிவிலக்கு கொடுப்பதற்கும் தணிக்கை குழுவிற்கும் தொடர்பில்லை...’’ என்று தணிக்கை குழு தரப்பு கூறுகிறது. ‘‘புதிய விதிமுறைகள் இனி தயாராகும் புதிய படங்களுக்கே செல்லுபடியாக வேண்டும். ஏற்கெனவே தயாரான படங்களுக்கு விதிவிலக்கு கொடுக்க வேண்டும்’’ என்பது தயாரிப்பாளர்களின் கோரிக்கை. இல்லாவிட்டால் ஏற்கெனவே படப்பிடிப்பு முடிந்து வெளியிட தயார் நிலையில் இருக்கும் நூற்றுக்கணக்கான படங்கள் சிகரெட் - மது காட்சிகளால் வரிவிலக்கு சலுகையை இழக்க வேண்டியது வரும்.

பல பிரச்சினைகளில் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா, இப்போது சிகரெட், மது காட்சிகளாலும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. (படத்தில் இருப்பவர் நடிகை ரக்சனா மவுரியா. அவருக்கும் இந்தச் செய்திக் கும் தொடர்பில்லை)
- மீரான்