மல்யுத்தம் டூ சட்டமன்ற உறுப்பினர்!



‘என்னை துன்புறுத்திய நபர்களின் கையில் இருக்கும் அதிகாரம் எனக்கு வேண்டும். அதைக் கொண்டு எனக்கு நிகழ்ந்த கொடுமைகள் என்னை போன்றோருக்கு நிகழாமல் தடுக்க வேண்டும்’ என அரசியலுக்கு வந்து அதிகாரத்தை நோக்கி நடைபோட்டு இன்று அந்த அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறார் இந்தியாவின் தங்க மகள் வினேஷ் போகத்.பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு சென்று வெறுமனே 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அந்தப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் வினேஷ் போகத். 
ஒலிம்பிக் போட்டிகளில் தேவையான பயிற்சியாளர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரை வைத்துக்கொள்ள விடவில்லை, 53 கிலோ எடைப் பிரிவில் இருந்து 50 கிலோ எடைப் பிரிவில்தான் விளையாட வேண்டும் என்கிற நிர்பந்தத்தை ஏற்படுத்தி அவரை தோற்கடித்தனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பியாக இருந்த பிரிஜ்பூஷன் சிங்கின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தது. அவரை மாற்றுமாறு நடைபெற்ற போராட்டங்களில் வினேஷ் போகத் கலந்து கொண்டதால் தான் இந்த நிர்பந்தங்கள் ஏற்படுத்தி அவரை தோற்கடித்தனர் என மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்
பட்டது. இதையடுத்து மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ், ‘நான் பாரிஸில் இருந்த போது எனக்கு எந்த ஒரு உதவியும் யாரும் செய்யவில்லை. தகுதி நீக்கத்திற்கு எதிராக  மேல்முறையீடு செய்தது கூட என்னுடைய சொந்த முயற்சி’ என்றார்.

அதிகாரத்தால் தானே தோற்கடிக்கப்பட்டோம் என்பதை உணர்ந்த அவர் அதே அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என நினைத்தார். தன் வாழ்க்கையில் புதிய அத்தியாயமாக ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணந்தார்.  அவர் இணைந்ததை அடுத்து அரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத் இருக்கும் தொகுதியான ஜூலானா தொகுதியிலேயே அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியது காங்கிரஸ். இந்த தொகுதியில் கடைசியாக 2005ல்தான் காங்கிரஸ் வென்றிருந்தது.

அதனால் வெற்றி பெறுவது என்பது பெரும் சவாலாக இருக்கும் என சொல்லப்பட்டது. ‘தனக்கு ஒலிம்பிக்கில் அநீதி இழைக்கப்பட்டது. திரை மறைவில் நடந்தவற்றைப் பற்றியெல்லாம் வெளியில் சொல்ல முடியாது. ஆனால், அந்த சம்பவங்களால்தான் நான் அரசியலுக்கே வந்தேன்’ என பிரச்சாரத்தை முன்னெடுத்து தனது தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்தார் வினேஷ் போகத். மக்களும் அவருக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

அதோடு அவரின் உழைப்பும் வீண் போகவில்லை. தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் யோகேஷ் பைராகி குமாரை விட 6015 வாக்குகள் அதிகம் பெற்று வினேஷ் போகத் வெற்றி பெற்றார். வினேஷ் போகத் இந்த தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் 19 வருடங்கள் கழித்து இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடியிருக்கிறது. வெற்றிபெற்றவர்கள் சில நாட்கள் புகழப்படுவார்கள். தோல்வியடைந்தவர் சில நாட்கள் நினைக்கப்படுவார்கள். ஆனால் போராளிகளை வரலாறு நினைவில் வைத்துக்கொள்ளும் என்பதற்கு வினேஷ் போகத்தான் சிறந்த உதாரணம்.

மா.வினோத்குமார்