கிச்சன் டிப்ஸ்
*தேன்குழலுக்கு மாவு பிசையும் போது தண்ணீர் விட்டுப் பிசையாமல், தேங்காய்ப்பால் சேர்த்து பிசைந்து சுட, தேன்குழல் வெண்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.
*முறுக்கு அச்சின் உட்புறமும் மேல் உள்ள அச்சின் வெளிப்புறமும் எண்ணெய் தடவி விட்டு, மாவைப் போட்டு பிழிந்தால் குழாயில் மாவு ஒட்டாமல் வரும்.
*கார பட்சணங்கள் செய்யும் போது, ஒரு குழிக்கரண்டி அளவு நன்கு சூடாக்கப்பட்ட எண்ணெயையும் சேர்த்து மாவைக் கலந்து, பிசைந்து செய்தால் பட்சணங்கள் உள்ளே மிருதுவாகவும், கரகரப்பாகவும் வரும். டால்டா மற்றும் எண்ணெய் செலவும் மிச்சமாகும்.
*காரம் அல்லது உப்பு பட்சணங்கள் அனைத்தும் அரை வேக்காடாக இருக்கும் போது வெளியே எடுத்து ஆறவிட்டு, திரும்பவும் எண்ணெயில் போட்டு பொரித்தால் மொறுமொறுஎன இருக்கும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
*அடை மாவு அதிகம் புளித்துவிட்டால் அதை இட்லி தட்டில் ஊற்றி 7 நிமிடம் வேகவைத்து உதிர்த்து கடுகு, மஞ்சள் பொடி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து உப்பு தேவைக்கேற்ப போட்டால் அடை காரப் புட்டு தயார்.
*எலுமிச்சை இலையை எண்ணெயில் வதக்கி மிளகாய், புளி, உப்பு, உளுந்து, பெருங்காயம் ேசர்த்து துவையல் செய்யலாம்.
- ச.லெட்சுமி, தென்காசி.
*பச்சரிசி மாவு ஒரு பங்கு, கடலை மாவு இரண்டு பங்கு கலந்தும் காராசேவு செய்யலாம். புழுங்கல் அரிசியை ஊறவைத்து கெட்டியாக அரைத்து சம அளவு கடலைமாவு சேர்த்தும் காராசேவு செய்யலாம்.
*ஓமப்பொடிக்கு ஓம இலைகளை அரைத்து வடிகட்டி மாவில் கலந்து செய்தால் வாசனையாக இருக்கும். வயிறு மந்தம் ஏற்படாது.
*கடலைமாவை சிறிதளவு நெய்யில் வறுத்து, பசும்பாலில் கரைத்து தேவைக்கேற்ப சர்க்கரை கலந்து கொதிக்க விட்டு, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் பொடி கலந்தால் திடீர் பாயசம் தயார்.
- ஆர்.பத்மப்ரியா, திருச்சி.
* தேங்காய் பொடி செய்யும்போது சிறிது புளியையும் தேங்காய் எண்ணெயில் வறுத்து சேர்த்துக் கொண்டால் பல வாரங்கள் ஆனாலும் தேங்காய் பொடி மக்கு வாடை அடிக்காது.
* தட்டை செய்யும்போது பிளாஸ்டிக் பேப்பர் வேண்டாம். வெண்ணெய் கட்டி வரும் மெலிதான ஆயில் பேப்பரில் தட்டையை தட்டிப் போடலாம்.
- எஸ். விமலா சடையப்பன், திண்டுக்கல்.
* நெடி அடிக்காமல் மிளகாய் வத்தலை வறுக்க காம்பை ஒடித்து நீக்கிய பின் வறுத்தால் கமறாமல் இருக்கும்.
* எலுமிச்சை ஊறுகாயுடன் சிறிது வதக்கிய இஞ்சி துண்டுகள் ேசர்த்துக் கொண்டால் ருசி கூடும்.
* பருப்புப் பொடி அரைக்கும் போது இரண்டு ஸ்பூன் ஓமம் சேர்த்துக் கொண்டால் ருசி அதிகமாகும்.
- வெ.கார்த்திகா, திண்டுக்கல்.
* மீந்துபோன வாழை, உருளை சிப்ஸை வீணாக்காமல் மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து பொரியலுக்கு தூவலாம். மாறுபட்ட சுவையும் மணமும் கிடைக்கும்.
* மோர்க்குழம்பு செய்யும்போது ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து சேர்த்துக் கொண்டால் சூப்பர் சுவை கிடைக்கும்.
* புளித்த தயிரில் ரவையை கொஞ்ச நேரம் ஊறவைத்து அதனுடன் இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி தழை இவற்றை சேர்த்துப் பிசைந்து வடை போலத் தட்டி எண்ணெயில் போட்டு எடுத்தால் சூடான சுவையான டிபன் ரெடி.
- எஸ்.வேல்அரவிந்த், திண்டுக்கல்.
* ரவா தோசைக்கு ரவா, பச்சரிசி, உளுந்து சம அளவு எடுத்து மிஷினில் கொடுத்து மாவு அரைத்து வைத்துக் கொண்டால் கரைத்து மோர் சேர்த்து தோசை செய்யலாம். இதையே ஊறவைத்து (அரிசி, ரவா, உளுந்து) மிக்ஸி (அ) கிரைண்டரில் அரைத்தும் செய்யலாம்.
*தக்காளியை வெந்நீரில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் கையால் தோல் உரித்து நன்றாக பிசைந்தோ, அரைத்தோ ரசம் வைத்தால் தக்காளி வீண் ஆகாது. ருசியாகவும், ரசம் நிறமாகவும் இருக்கும்.
*பழைய சாதம் மீந்துவிட்டால் அதை நன்கு பிசைந்து காய்ந்த திராட்சை, தாளித்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி சிறிதளவு வெண்ணெய் அல்லது நெய், கடுகு, உப்பு, பெருங்காயம், சூடான பால், தயிர் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி கொடுத்தால் சுவையாக இருக்கும்.
- ராஜிகுருசுவாமி, சென்னை.
வெள்ளைப்பூசணி அல்வா
தேவையானவை: பூசணிக்காய்-அரைகிலோ, நெய் - 300 கிராம், ஏலக்காய் - 7, சர்க்கரை - 400 கிராம், பால் - கால் லிட்டர், முந்திரி - 50 கிராம்.
செய்முறை: இதனை தயாரிக்கும் பாத்திரம் அடி கெட்டியான உருக்குச் சட்டி அல்லது உருளியாக இருக்கலாம். பாத்திரத்தில் முக்கால் பங்கு நெய் விட்டு, அது சூடானதும் ஏலக்காய் பொடியை கலந்து சற்று கிளறவும். பூசணிக் காயை துருவிவிட்டு, அதனுடைய பச்சை இயல்பு மாறியவுடன், அடுப்பு தீ அளவைக் குறைத்து விட்டு, சுமார் 15 நிமிடங்கள் கிளறி விட வேண்டும்.
பாத்திரத்தின் பக்கங்களிலிருந்து கலவை விட்டு வருகையில், மீதி நெய்யை விட வேண்டும். அதன் பின்பு அடுப்பிலிருந்து இறக்கி, கொஞ்ச நெய் விட்டு முந்திரியை வறுத்து அல்வா மீது தூவி விட வேண்டும். அல்வா ஆறியவுடன் சுத்தமான கரண்டி மூலம் அழகாக தேவைக்கேற்ப வெட்டி துண்டு போட்டு பரிமாறவும்.
- கீதா சுப்பிரமணியன், கும்பகோணம்.
|