ஜில்லு



திருநங்கைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களின் அக உலகம் குறித்து திரைப்படங்கள் வெளியாகியுள்ளதா என்பது கேள்விக்குறியே? அவர்களை சித்தரித்த பெரும்பாலான சினிமாக்களில் அவர்களை கேலியாகவும், இரட்டை அர்த்த வசனங்கள் வைத்தும், அவதூறு பரப்பும் விதமாக ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளது.அனைத்து சமூகங்களும் துயரங்கள், கொடுமைகளை கடந்துதான் தங்களுக்கான நீதி, சுய மரியாதையை பெற்றிருக்கிறது.

தங்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்து, நியாயத்தை சொல்வதன் வழியேதான் தங்களுக்கான நீதியை பெற முடியும் என்பதை வரலாறுகள் நமக்கு சொல்லியிருக்கின்றன. அப்படியான குரல்தான் ‘ஜில்லு’ படம். இதனை ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி இயக்கியுள்ளார். திருநங்கைகளின் வாழ்க்கையை பற்றி பேசும் படம் ‘ஜில்லு.’

திருநங்கைகள், வாழ்தலின் மீதான ஏக்கங்களையும் தவிப்புகளையும் எடுத்து நம்முன் வைக்கிறது இந்த திரைப்படம். ஒரு நிகழ்வுக்கு இரு தரப்பு கதைகள் இருக்கும். அதில் சொல்லப்படாமல் மறைத்து வைக்கப்பட்ட கதைகளையும் அவர்கள் தரப்பு நியாயங்களையும் இப்படம் சொல்கிறது. ‘ஜில்லு’ என்ற முதன்மை கதாபாத்திரத்தின் வழியே திருநங்கைகளின் வாழ்வியலை, உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இயல்பாக இயக்கியுள்ளார்.

‘என்னோட பெரிய கனவே இரவு முழுக்க நிம்மதியா நல்லா தூங்கணும்’ என்று சொல்லும் ‘ஜில்லு’ கதாபாத்திரம் சாதாரண வாழ்க்கைக்கான ஏக்கத்தின் வெளிப்பாடு. வீட்டை விட்டு வெளியேறும் இவர்கள் கடைசி வரை அந்த நினைவுகளை சுமந்து கொண்டே வாழ்கிறார்கள். தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளையும், வாழ்தலின் மீதான ஏக்கத்தின் வழியாக கடந்து போகிறார்கள்.

 ‘ஆண், பெண் வேலைக்குத் தேவை என்ற இடத்தில் ஏன் திருநங்கைகளை குறிப்பிடவில்லை’ என்ற கேள்விக்கு... ‘அவர்கள் செய்யும் பாலியல் தொழில், பிச்சை எடுப்பது’தான் பதிலாக இருக்கிறது. ‘நம்மை கேவலமான வாழ்க்கையை வாழ வைக்கும் இந்த சமூதாயம், நீங்க கடவுளின் அவதாரம்னு சொன்னா போதுமா? ஒரு பெண் காணாமல் போனால் போலீசில் கேஸ் பதிவு செய்வார்கள்.

அதுவே நாங்க என்றால் கேஸ் எடுக்க மாட்டாங்க’ போன்ற வசனங்கள், அவர்கள் மேல் நிகழ்த்தப்படும் கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் குறித்து கேள்வி எழுப்புகிறது. எங்களை புரிந்துகொள்ள முதலில் எங்க வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள் என்று படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களின் கஷ்டங்களையும், அனுபவங்களையும் கூறி நியாயத்தை கோருகிறது. 

எங்களுடைய கதைகளை நாங்களே சொல்கிறோம் என திருநங்கைகளே படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்கள். படம் தொடங்கி 6 வருட காத்திருப்பிற்கு பிறகு பிளாக்‌ஷீப் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இது குறித்து படத்தின் இயக்குனர் திவ்ய பாரதியிடம் பேசிய போது...

‘‘2007ல் லிவிங் ஸ்மைல் வித்யாவின் சுயசரிதை புத்தக விமர்சனக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கிருந்துதான் திருநங்கை சமூகத்தினருடனான உரையாடல் தொடங்கியது. அதன் பிறகு தேனி மற்றும் மதுரையை சேர்ந்த திருநங்கைகளுடன் எனக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. நண்பர்கள், அக்காக்கள், தோழிகள், அம்மாக்கள் என பலரும் எனக்கு கிடைத்தார்கள். இந்தச் சமூகம் அவர்களை பார்க்கும் விதம் வேறாக இருக்கிறது. 

ஆனால் அவர்களின் உலகத்திற்குள் சென்ற போதுதான் அவர்களின் கலங்கமில்லாத அன்பை தெரிந்து கொண்டேன். இந்த வேறுபாட்டை நான் சமூகத்திற்கு வெளிப்படுத்த நினைத்தேன். இதற்கிடையில் ‘கக்கூஸ்’, ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குறித்து ‘ஒருத்தரும் வரல’ போன்ற ஆவணப்படங்களை எடுத்தேன்.

அதன் பிறகு திருநங்கைகள் குறித்து ஆவணப்படம் எடுக்க முடிவு செய்தேன். அந்த சமயத்தில் ‘ஒருத்தரும் வரல’ ஆவணப்படத்தில் ஒரு குடும்பத்தினர் தங்களின் பிரச்னைகளை பேசி இருப்பார்கள். அதை நான் வெளிக்கொண்டு வந்ததற்காக ‘ஜில்லு’ படத்தின் தயாரிப்பு செலவுகளை ஏற்றுக் கொண்டார்கள். 

என்னுடைய ஆவணப்படத்தில் பாதிக்கப்பட்டவர்களே விவரித்து பேசுவார்கள். ஒரு விஷயத்தை சொல்வதற்கும் அதை பார்த்து உணர்ந்து கொள்வதற்கான இடைவெளிதான் ஆவணப்படத்திற்கும் சினிமாவிற்கும் உள்ள வித்தியாசம். ஜில்லுவிற்கு முன் திருநங்கைகள் சமூகம் குறித்து நான் இயக்கிய ‘சாட்லா’ ஆவணப்படத்தில் அவர்கள் சொன்ன விஷயங்களை காட்சி மொழியாக்க நினைத்தேன்.

ஆனால் அந்த கணத்தை பார்ப்பவர்களால் தாங்க முடியாது என்பதால் அவர்களுக்கு நடந்த அநீதிகளின் ஒரு துளியினை எடுத்து ஜில்லுவை உருவாக்கினேன். திருநங்கை சமூகம் குறித்து இதுவரை வெளிவந்த சினிமாக்கள் லாபம் பார்த்தாலும், அவர்களுக்கு கிடைத்தது கேலி, கிண்டல் மற்றும் வசவு சொற்கள்தான். 

இந்தப் படத்தில் அதற்கான நியாயத்தை செய்ய வேண்டும் என நினைத்தேன். இந்தப் படம் முழுக்க அவர்களையே நடிக்க வைத்தேன். டப்பிங்கும் அவர்கள்தான் பேசினார்கள்’’ என்றவர் படத்தில் என்ன காட்சியகம் செய்துள்ளார் என்பதை குறிப்பிட்டார்.  ‘‘இவர்கள் தங்களை பெண்களாக மாற்ற பல சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

அந்த வலிகள் சாதாரணமானது அல்ல. மார்பக சிகிச்சை செய்ய புனே சென்ற ஒருவர் பட்ட கஷ்டங்களை அப்படியே படமாக்கி இருக்கிறோம். தங்களை வருத்திக் கொண்டு மேற்கொள்ளும் சிகிச்சைகள், அதனால் ஏற்படும் பிரச்னைகள் என அனைத்தும் இதில் காட்சிகளாகவும் வசனங்களாகவும் வெளிப்படுத்தி இருக்கோம். 

ஒரு ஆண் திருநங்கையை ஆபாசமாகத்தான் பார்க்கிறான். அவர்களிடம் ஆபாசமாக எப்படி வேண்டும் என்றாலும் பேசலாம், நடந்து கொள்ளலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். சிலர் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள பணத்தை மிரட்டி பறித்திருக்கிறார்கள். இவர்கள் பாலியல் தொழிலே செய்தாலும், அவர்களாக விருப்பப்படாமல் தொட்டாலும் அது வன்கொடுமைதான். மனிதநேயம் இல்லாமல் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைதான் இந்தப் படம் பேசுகிறது. 

நானும் கார்த்தீபன் என்பவரும்தான் ஒளிப்பதிவு செய்தோம். முதன் முதலில் கேமரா முன் நின்றாலும், நான் சொல்லிக் கொடுத்ததை அழகாகவும் இயல்பாகவும் நடித்தார்கள். முழுக்க முழுக்க அவர்களின் உண்மை சம்பவங்களால் உருவானதுதான் இந்த ‘ஜில்லு.’ உழைக்கவும், நடிக்கவும் பல திறமையாளர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பதற்கான ஒரு துளிதான் இந்தப் படம்’’ என்றார் திவ்ய பாரதி.

மா.வினோத்குமார்