நாக தோஷத்தை நீக்கும் திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர்!



கொங்குப் பகுதியில் முருகனின் பாடல் பெற்ற தலமாக விளங்குவது திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர் கோயில். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டுவந்தார் என்பது நம்பிக்கை. 
இறைவன் தன் பூத கணங்களை ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்த தலமென்றும் புராணங்கள் கூறுகிறது. முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலத்தில் அவர் சிவ வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீமங்களாம்பிகையுடன் ஸ்ரீமாதவனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலத்துக்கு, மேலும் பல புராண பெருமைகள் உள்ளது.

இங்கு முருகநாத சுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. சுவாமி, அம்மன் சந்நதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் நடுவில் சண்முக தீர்த்தம். இடப்புறத்தில் ஞான தீர்த்தம். வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. 

முருகன் வழிபட்டதற்கு அடையாளமாக முருகன் சந்நதியின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு லிங்கம் உள்ளது. இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை. அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாக நம்பிக்கை.
முருகனால் வழிபடப்பட்டதால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முதன்மைக் கடவுளான சிவன் முருகநாதேஸ்வரர் எனப் பெயர்பெற்றார்.

அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் ஆகியோர் வழிபட்ட தலம். கோயில் நுழைவுவாயிலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சந்நதி உள்ளது. இதைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்புறம் சுந்தரர் உருவம் உள்ளது. 

கோயில் பிராகாரத்தில் பைரவர் சந்நதியும் நவக்கிரகங்களும் உள்ளன. இங்குள்ள சண்முகநாதர் சந்நதி சிறப்பானது. இத்தலம் பிரம்மகத்தி தோஷம் நீங்கிய தலம். சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்குவந்து நீராடி வழிபடுவார்கள்.

சிலர் பல நாட்கள் தங்கியிருந்து தோஷம் நீங்கி செல்வர். இங்குள்ள பிரம்மதாண்டவ நடராஜர் சந்நதி விசேஷமானது. இக்கோயிலுக்குப் பக்கத்தில் சற்றுத் தொலைவில் மாலாதரன் எனும் வேடமன்னன் வழிபட்ட பைரவர் சந்நதி உள்ளது.

எங்கும் இல்லாத புதுமையாக இம்மண்டபத்தின் மேலே பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு அமைக்கப்பட்டு உள்ளது. ஆலயச் சுவற்றில் விநாயகர், கேது ஆகியோரின் சந்நதிகள் உள்ளன. தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மாசி மாதத்தில் 11 நாட்களுக்குப் பெருவிழா நடைபெறுகிறது.

ஒரு முறை தன் நண்பரான சேரமான்பெருமாள் தந்த பெருஞ்செல்வத்துடன் இவ்வழியே பயணித்துக் கொண்டிருந்தாராம் சுந்தரமூர்த்தி நாயனார். அவருடைய பாடல்களைக் கேட்க விரும்பிய இறைவன், தமது திருவிளையாடலைத் துவக்கினார். வேடன் வடிவில் வந்து சுந்தரரிடம் இருந்த செல்வங்களை அபகரித்துச் சென்றார். 

இதனால் ஆத்திரமும் ஆதங்கமும் கொண்ட சுந்தரர், இந்தத் தலத்திற்கு வந்து பாடல்கள் பாடி இறைவனிடம் முறையிட, அவர் பறிகொடுத்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தன என்கிறது தல புராணம்.

சிவனாரின் பிரம்மதாண்டவம் அரங்கேறிய தலமாகவும் இது கருதப்படுகிறது. வெகுநாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது வருந்திய பாண்டிய மன்னன் ஒருவன், இங்கு வந்து வழிபட்டு குழந்தை வரம் பெற்றான். இதுகுறித்த சிற்பக் காட்சிகளை இங்கு தரிசிக்கலாம். இத்தலத்தைப் புதுப்பித்து வணங்கிய வேடன் ஒருவருக்கும் இங்கு சிலை உள்ளது. லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்கை, தட்சிணாமூர்த்தி, சூரிய சந்திரர், பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீமாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. நாகதோஷங்கள் நீங்கி வாழ்வில் நல்லன அனைத்தும் நிறைவேற, நீங்களும் ஒருமுறை திருமுருகன்பூண்டி இறைவனைத் தரிசித்து திருவருள் பெறலாம்.

திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வடக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம். திருப்பூரில் இருந்து அவினாசி வழியாக கோவை செல்லும் எல்லா பேருந்துகளும் திருமுருகன் பூண்டியில் நிற்கும்.

மகி