மண வாழ்க்கையில் இணைந்தவர்கள் சந்தோஷமாக வாழ வேண்டும்‌!



புதிதாக திருமணமான ஒவ்வொருவருக்கும் தீபாவளி மிகவும் முக்கியமான பண்டிகை. அந்தப் பண்டிகையினை திருமணம் ஆன நாள் முதல் இன்று வரை மிகவும் சந்தோஷமாக ெகாண்டாடி வருகிறார்கள் 700 ஜோடிகள். இவர்கள் அனைவருக்கும் சென்னையை சேர்ந்த கீதா என்பவர், தன்னுடைய கீதம் மேட்ரிமோனி மூலமாக அழகான பந்தத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

‘‘கடந்த 28 வருடமாக நானும் என் கணவர் தெய்வசிகாமணியும் இணைந்து செயல்படுத்தி வருகிறோம். திருமண பந்தத்தைப் பொறுத்தவரை இரு குடும்பங்களை இணைக்கும் மீடியேட்டர்தான் நாங்க. நான்‌ அடிப்படையில்‌ ஒரு எழுத்‌தாளர்‌. அதற்கு காரணம் என் அம்மா. அவங்க நாவலாசிரியர். அவர்களுடன் பயணம் செய்து வந்ததால், எனக்கும் எழுத்து மேல்‌ ஈடுபாடு ஏற்பட்டது. பெண்களுக்கான இதழ்களில் பல கட்டுரைகளை எழுதி இருக்கேன்.

மேலும் பக்தி பாடல்களும் எழுதி வருகிறேன். என் கணவர் நன்றாக பாடுவார். அவர்தான் என் பக்தி வரிகளுக்கு அழகாக குரல் கொடுத்து வருகிறார். மேலும்  அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வக்கீலாகவும் உள்ளார். அவரின் பணி எங்களின் இந்த மேட்ரிமோனி நிறுவனம் நடத்த மிகவும் உதவியாக இருக்கிறது. 

காரணம், சிலர் இரண்டாவது திருமணத்திற்கு பதிவு செய்வார்கள். அவர்களுக்கு வரன் பார்க்கும் போது அவர்களின் பின்னணி, விவாகரத்தில் ஏதும் வில்லங்கம் உள்ளதா என்று அனைத்தும் பார்த்த பிறகுதான் அந்த வரனை நாங்க தேர்வு செய்வோம்’’ என்றவர் இந்த நிறுவனம் பற்றி விவரித்தார்.

‘‘என் சகோதரர் அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு வரன் பார்த்து வந்தோம். அதில் பல சிரமங்களை சந்தித்தோம். பொதுவாக வீட்டில் வரன் பார்க்க துவங்கினால் தெரிந்தவர்களிடம் சொல்லி வைப்போம். அதன் பிறகு மேட்ரிமோனியல் நிறுவனங்களில்  பதிவு செய்வார்கள். ஆனால் அதில் சிலர் போட்டோ மட்டுமே கொடுத்திருப்பார்கள். விவரங்கள் இருக்காது. அதனைப் பெற கஷ்டமாக இருந்தது.

மேலும் அந்த நிறுவனம் நம்பகத்தன்மையா இருக்கணும். என் சகோதரருக்கு நாங்க மிகவும் சிரமப்பட்டதால், என் கணவர்தான் முதலில் ‘நாமே ஏன்‌ ஒரு மேட்ரிமோனி நிறுவனம் ஆரம்பிக்கக்‌கூடாது’ன்னு கேட்டார்‌. அப்படித்தான் ‘கீதம் மேட்ரிமோனி’ 97ல் துவங்கினோம். ஆரம்பத்தில் எங்களைப் பற்றி தெரியாது என்பதால் விளம்பரம்  செய்தோம். அதைப் பார்த்து சிலர் பதிவு செய்தார்கள்.

முதலில் ஒரு திருமணத்தை நடத்தினோம். அதன் பிறகு பலர் பதிவு செய்ய முன் வந்தார்கள். தற்போது எங்களிடம்‌ 1000த்துக்கும்‌ மேற்பட்ட மணமக்களின்‌ பயோடேட்டாக்‌கள்‌ உள்ளன. நாங்க குறிப்பா முதலியார்‌, பிள்ளை மற்றும்‌ காஸ்ட்‌ நோ பார்‌ என்று குறிப்பிடுபவர்களுக்கு மட்டும்தான்‌ வரன்‌ பார்க்கிறோம்‌. அதிலும் சில வரைமுறைகள் உண்டு. பதிவை பெற்றோர்கள் நேரடியாக வந்து செய்ய வேண்டும். மணமக்களின் தனிப்பட்ட பதிவுகளை ஏற்பதில்லை.

பதிவிடும் போது ஒருவரின் குடும்ப விவரங்கள்‌ அனைத்‌தும்‌ தெரிந்து கொள்வோம். அதன் பிறகு ஜாதகப் பொருத்தம் பார்ப்போம். சிலர் குறிப்பிட்ட நட்சத்திரங்களை கேட்பார்கள். இரு குடும்பங்களுக்கும் பிடித்திருந்தால் நேரடியாக சந்திக்க வைப்போம்‌. எங்களின்‌ அடுத்த முக்கியமான விதிமுறை ஆண்‌, பெண்‌ இருவரும்‌ இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்’’ என்றவர், பொருத்தம் எவ்வாறு அமைக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டார்.

‘‘ஜாதகத்தில் முக்கியமானது நட்சத்திரப் பொருத்தம். அடுத்து ஏதேனும் தோஷம் உள்ளதான்னு பார்ப்போம். காஸ்ட் நோ ஃபார் என்றால், அதற்கு ஏற்ப தேர்வு செய்வோம். இப்படி ஒவ்வொரு குடும்பத்தின் நிலைக்கு ஏற்ப வரன்களை அமைத்து தருவோம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு கல்யாணம்‌ செய்வது அவ்வளவு சுலபமில்லை. பெற்‌றோர்கள்‌ வரன் பார்த்தாலும் மணப்பெண்‌, மணமகன்‌ இருவரும்‌ பேசிக்கொண்ட பிறகுதான் சம்மதிக்கிறார்கள்.

பெண்கள் பதிவு செய்கிறார்கள், ஆனால் அதன் பிறகு வரன் குறித்து கேட்பதில்லை. 30 வயதிற்குப் பிறகுதான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார்கள். பெண்கள் நல்ல வேலையில் இருப்பதால் அதற்கேற்ப வரன் வேண்டும் என்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கமிட்மென்டுக்குள் சிக்க விரும்புவதில்லை. 

டாமினேட்டிங் செய்யக்கூடாது. அப்படிப்பட்ட நல்ல வரன் வந்தா பேசலாம், இல்லை என்றாலும் பரவாயில்லை என்கிறார்கள். இப்படி இருந்தால் வரும் காலத்தில் மேட்ரிமோனியே இல்லாமல் போக வாய்ப்புள்ளது. நாங்க இதை பிசினஸ்‌ நோக்கத்தில்‌ செய்யவில்லை. எங்களால் இணைந்தவர்கள் காலத்திற்கும் சந்தோஷமாக வாழ வேண்டும்‌ என்பதுதான் எங்களின் விருப்பம்’’ என்றார் கீதா.

நிஷா