கிளிகள் கேங்ஸ்டர் மாதிரி
6000 பச்சைக் கிளிகள்... 2000 புறாக்கள்...
1000 காகங்கள்... 200 சிட்டுக்குருவிகள்... 150 ஆடுகள்... 50 பூனைகள்...
ஜோடியா இரண்டு கிளிகளை நம் வீட்டு மாடியில் பார்த்தாலே மனசெல்லாம் பரவசமாகும். அதுவே 5000 கிளியாக மாறி கேங்காக நம் வீட்டு மொட்டை மாடிக்கு தினம் தினம் வந்தால்... இந்தக் காட்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லைதான்.கூட்டம் கூட்டமாக வரும் கிளிகளின் வருகையை நம்மையும் பார்க்க வைத்து பரவசத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்கின்றனர் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் வசிக்கும் பேரட் சுதர்ஷன்-வித்யா தம்பதிகள்.
‘மெய்யழகன்’ படத்தில் வருகிற நடிகர் அரவிந்த சாமியின் ஓப்பனிங் சீன் கெட்டப்பில் அப்படியே இருக்கிறார் பேரட் சுதர்ஷன். உயரம் மட்டுமே கம்மி. பேரட் சுதர்ஷனை வைத்துதான் இயக்குநர் பிரேம்குமார் அரவிந்த சாமியின் ‘அருள்மொழி’ கேரக்டரை உருவாக்கினாராம்.
‘‘பிரேம் சாரின் கோ டைரக்டர் கண்ணன் சார் என்னோட நீண்டநாள் நண்பர். அவர் சொல்லி பிரேம் சார் என்னை வந்து முதலில் பார்த்துவிட்டுப் போனார். அதன் பிறகு அவரோட டீம் கடந்த ஓராண்டாக இங்கு வந்து கிளிகளையும் என்னையும் அடிக்கடி பார்த்துவிட்டுப் போவார்கள். ஒருநாள் பிரேம் சார், “உங்க வீட்டுல இரண்டு நாள் ஷூட்டிங் இருக்கு” என்றார். ஷூட்டிங் அன்று கூட்டத்தைக் கட்டுப்படுத்த இரண்டு பவுன்சர்கள் முதலில் வந்தார்கள். நேரம் செல்லச் செல்ல பவுன்சர்கள் எண்ணிக்கை அதிகமாகி, கிட்டதட்ட அன்றைய தினம் ஐம்பது பவுன்சர்கள் இருந்தார்கள்.
ஆரம்பத்தில் என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு கொஞ்சம் குழப்பமாக இருந்தது. யாரோ விஐபி வர்றாங்கன்னு மட்டும் புரிந்தது. சூர்யா சார் என்னை ரொம்ப நாள் பார்க்கணும்னு ஆசைப்பட்டதாகச் சொன்னார்கள்.
அவர்தான் வர்றாரோன்னு முதலில் நினைத்தேன். ஆனால் அன்று நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்றது நடிகர் அரவிந்த சாமி. கூடவே தன் மகளையும், மகளின் தோழிகள் இருவரையும் கிளிகளைப் பார்க்க அழைத்து வந்திருந்தார்.
கார்த்தி சாரும் அவரின் குடும்பத்துடன் வந்துவிட்டார். கிட்டதட்ட என் வீட்டு மாடியை அவர்களுக்கு ஏற்ற ஸ்பாட்டாக மாற்றி ஷூட்டிங் முடிய 3 மணி நேரம் எடுத்தது. அதற்குள் சுற்றுவட்டாரத்தில் கார்த்தி, அரவிந்தசாமி வந்திருக்கும் தகவல் பரவி, பெரும் கூட்டமே கூடிவிட்டது.
என் ஏரியாவில் இருந்த சிலர் என்னைப்போல வொயிட் டிஷர்ட், என்னைப் போலவே தொப்பி அணிந்து, நான்தான் சுதர்ஷன். வீட்டின் உரிமையாளர் என பவுன்சர்களை ஏமாற்றி கொஞ்சம் கொஞ்சம் இடைவெளியில் 10 பேர் நுழைந்துவிட்டனர்’’ எனச்சிரிக்கிறார் சுதர்ஷன். ‘‘அரவிந்த சாமி சாரும் என்னைப் போலவே வொயிட் டிஷர்ட், இடது கையில் கருப்பு வாட்ச் அணிந்து, நான் பறவைகளுக்கு உணவு வைப்பது போலவே கனகச்சிதமாக நடித்தது ஆச்சரியமாக இருந்தது. பிறகுதான் புரிந்தது ஏற்கனவே என்னை சந்திக்க வந்து சென்ற உதவி இயக்குநர்கள் என்னை படம்பிடித்து, அவரிடம் காட்டி அதேபோல் அவரும் பயிற்சி எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்’’ என நெகிழ்கிறார் சுதர்ஷன்.
சுதர்ஷனைத் தொடர்ந்து பேசிய அவரின் மனைவி வித்யா, ‘‘அரவிந்த சாமி சாரும், கார்த்தி சாரும் ரொம்பவே ஃப்ரெண்ட்லி. ‘டீ போட்டுத்தரவா?’ எனக் கேட்டதுமே, கார்த்தி சார், ‘ஓ.எஸ் போடுங்க குடிக்கிறோம்’ என்றார். நான் போட்டுக் கொடுத்த டீயை ரசித்துக் குடித்தவாறே, ‘டீ ரொம்ப சூப்பராக இருக்கு’ன்னு சொன்னது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா இருந்தது...’’ முகமெல்லாம் புன்னகைக்கிறார் வித்யா.
‘‘கார்த்தி சாரும், அவர் வொய்ஃபும் எங்கள் வீட்டை ஆசை ஆசையா சுத்திப் பார்த்தாங்க. அரவிந்தசாமி சாரும் அவ்வளவு சூப்பர். மகளை சூப்பரா வளர்த்துருக்காரு. தான் ஒரு பெரிய ஸ்டார் மகள் என்கிற பந்தா இல்லாமல், இயல்பா அன்பா பழகுனாங்க’’ என்றவரைத் தொடர்ந்தார் சுதர்ஷன்.
‘‘எங்கள் வீட்டில் 2 நாள் ஷூட்டிங் என்றுதான் பிளான். ஆனால் அவர்களுக்குத் தேவையான ஷாட்ஸ் ஒரே நாளில் கிடைத்துவிட்டதால் பேக்கப் சொல்லி கிளம்பிவிட்டார்கள். ஒரு இரண்டு நாள் கழித்து நடிகர் சூர்யா சாரிடம் இருந்து எனக்கு ஒரு கிஃப்ட் பேக் வந்தது. அதில் ‘நன்றி சூர்யா’ எனப் போட்டிருந்தது.
என்னை பார்க்காமலே கிஃப்ட் கொடுத்து அனுப்பியிருக்காரே என முதலில் யோசித்தேன். பிறகுதான் புரிந்தது, வந்திருந்த 50 பவுன்சர்களில் ஒருவராக பவுன்சர் வேடத்தில் சூர்யா சாரும் அந்தக் கூட்டத்தில் தன்னை மறைத்துக் கொண்டு இருந்திருக்கலாம் இல்லையா?’’ என புன்னகைக்கிறார் சுதர்ஷன். ‘‘நாங்கள் மராட்டிய வம்சாவழியினர். 20 தலைமுறையாக இங்கு வசிக்கிறோம். குறிப்பாக இந்த வீடு மூன்று தலைமுறைகள் வாழ்ந்த வீடு. இந்த வீட்டில் மட்டுமே
150 திருமணங்கள் நடந்திருக்கு. ஜே ஜேன்னு உறவுகளால் நிறைந்திருந்த வீடு இது. வீட்டுக்குள்ளேயே சிட்டுக்குருவிகள் கூடும் இருக்கும்.
அதிகாலையில் ‘கீச்சு கீச்’சுன்னு சவுண்டு கொடுத்து, என் காலை சுரண்டி எழுப்புவது சிட்டுக்குருவியாத்தான் இருக்கும். இன்னைக்கு அதே வீட்டில் நானும் என் மனைவியுமா இரண்டே பேர்தான் இருக்கோம். எங்கள் ஒரே மகளையும் திருமணம் செய்து கொடுத்தாச்சு.
ஒருநாள் என் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து கண்ணை மூடி பலமாக யோசிக்க ஆரம்பித்த போது, பக்கத்து வீட்டுஅம்மா வைத்த உணவுக்கு காக்காய் கூட்டம் அடித்துக்கொண்ட காட்சியை பார்க்க முடிந்தது.
அமாவாசைக்கு மட்டுமே காகத்திற்கு சாதம் என்றில்லாமல், எல்லா நாட்களிலும் சாதம் வைப்போமே என முதலில் காகத்திற்கு வைக்கத் தொடங்கினேன். அப்போது இரண்டு கிளிகளும் வானத்தில் வட்டமடிப்பதைப் பார்த்தேன். கிளிகளின் அழகு என்னைக் கவரவே அவற்றையும் உணவு உண்ண வரவழைக்க பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்தேன்.
ஒருநாள் மழையில் நனைந்து ஊறிய அரிசிகளை கிளிகள் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்து, மறுநாளில் இருந்து அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து வைக்க ஆரம்பித்து, கூடவே வேர்க்கடலை, பழங்களையும் இணைத்தேன்.
முதலில் 2 கிளி... பிறகு 20... அதன் பிறகு 200.. கொஞ்ச நாளில் 500... பிறகு 1000... இப்ப 5000... இதுவே டிசம்பர், ஜனவரி மாதங்களில் மாடியில் இடமே இல்லாத அளவுக்கு 10,000 கிளிகள் கேங் கேங்காக வந்து உணவு சாப்பிட்டுச் செல்கிறது. நானும் என் மனைவியும் சேர்ந்து பந்தி பந்தியாக தானியங்களை காலையும் மாலையும் வைக்கிறோம்’’ என ஆச்சரியத்தில் நம்மை திக்குமுக்காட வைக்கிறார் சுதர்ஷன்.
‘‘இந்த சேவையை நாங்க ஆரம்பிச்சு 15 வருடமாச்சு. காலையில் 4 மணிக்கு எழுந்து 60 கிலோ அரிசிய ஊற வைக்கணும். கூடவே 8 கிலோ வேர்க்கடலை.
சீசனல் பழங்கள் ஏதாவது இருந்தா அதையும் தயாராக வைக்கணும். இதெல்லாம் ஒரு நாள் உணவு. காலையில் 5 ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் கிளிகள் வரும். கிளிகள் சாப்பிடும் போதே புறாவும் இணையும். இவுங்க இரண்டு பேரும் சாப்பிட்டுக் கிளம்பியதும். காக்காய் கூட்டம் வரும். அப்புறம் சிட்டுக்குருவிகள்.
கூடவே 50 பூனைகள் வளர்க்கிறேன்.. அவற்றுக்கு தினமும் மீன் வாங்கி உணவோடு சேர்த்து வைப்போம். இவையெல்லாம் சாப்பிட்டு மீதமாக்கிவிட்டுச் செல்லும் தானியங்களை தினமும் என்னைத் தேடி வரும் 150 ஆடுகளுக்கும், தெரு நாய்களுக்கும், பூனைகளுக்கும் உணவாக வைக்கிறேன்’’ என அடுக்கிக்கொண்டே செல்கிறார் சுதர்ஷன். ‘‘அதிகாலையில் 5 மணிக்கு கிளிகள் வந்தால், உணவை சாப்பிட்டுவிட்டு அமைதியாக ஒரே இடத்தில் இருக்காது. ‘கீ..கீ..கீன்’னு சத்தம் கொடுத்து, 7 மணிவரை நண்பர்
களோடு அரட்டை அடிப்பாங்க. பிறகு ஜோடி ஜோடியாக வானத்தில் ரவுண்டு அடிப்பாங்க. மாலை 4:30க்கு வந்தால் 5:30 மணி வரை இதே கதைதான். அப்புறம் கிளம்பி அவுங்கவுங்க இருப்பிடத்திற்கு பறந்துருவாங்க.
குறிப்பா கிளிகள் கேங்ஸ்டர் மாதிரி. தனியா வரவே மாட்டாங்க. கேங்காக வந்து சாப்பிட்டு கேங்கா பறந்து போவாங்க. நாம பார்க்க ரொம்ப அழகா இருக்கோம்... யாராவது நம்மள புடிச்சு வச்சுப்பாங்களோன்னு நினைக்கும்போல. ஒருவேளை நான் உணவு கொடுக்கலைன்னா 5 ஆயிரம் கிளிகளும் ஒன்னு கூடி ஊரையே கூட்டீரும்...’’ புன்னகைத்தபடியே கிளிகள் குறித்து சிலாகிக்கிறார் பேரட் சுதர்சன். ‘‘இணையத் தளங்களில் என்னைப் பற்றிய செய்திகளைப் பார்த்து, எந்த நாட்டில் இருந்து இன்னும் வரலைன்னு கேளுங்க. போன வாரம் ஜப்பானில் இருந்து ஒருத்தர் வந்தாரு. ஒருசில வெளிநாட்டவர் ஒரு வாரம் என் வீட்டில் தங்கி ரிசர்ச் பண்றாங்க. நாம பச்சைக்கிளி என்கிறோம். வெளிநாட்டவர் ரோஸ் ரிங் பேர்ட்ஸ் என்கிறார்கள். 15 வருடத்திற்கு முன்பு என் வீட்டைச் சுற்றி 100 மரங்களாவது இருந்தது. அந்த மரத்தையெல்லாம் வெட்டீட்டாங்க. இங்க ஒரு அரச மரம் இருந்தது.
அதை வெட்டீட்டாங்க. அதனால பறவைகள் சில டெலிபோன் டவர்களில் தங்குது. இது காகம் தங்கும் மரம். இப்போதைக்கு டெம்ரவரியா இந்த வேப்ப மரத்தில் கிளிகளும் தங்குறாங்க. பறவைகள், புழு பூச்சிகள் தங்க மரங்கள் பற்றாக்குறையா இருக்கு. மரங்களை நாம நிறைய நடணும். நானும் என் மனைவியுமாக போடுகிற தானியங்களை சாப்பிடும் கிளிகள் விதைகளைக் கொண்டு வந்து எங்களுக்கு ரிட்டர்ன் கிஃப்டா கொடுக்கும்.
இதன் அர்த்தம் என்னவென்றால், ‘விதைகளை செடியாக்கி காலியான இடங்களில் நட்டு வை’ என்பதே.நானும் என் மனைவியும் இதனை சேவையா செய்கிறோம். எங்களுக்குன்னு நாங்க எதையும் சேர்த்து வைப்பதில்லை’’ என்றவர், ‘‘ நண்பர்கள், உறவுகள் எல்லாம் நம்மிடம் இருந்து விலகிய பிறகு... நமக்கு யாரும் இல்லை என நாம் நினைக்கும்போது... இயற்கைதான் நமக்கு உறவாகத் தெரியும். அந்த நேரம் என் கவலைகளை எடுத்துக்கொண்டு இந்தப் பறவைகள் பறந்து போயிடுறாங்க’’ என்கிற சுதர்ஷன் நம்மிடம் சொல்ல வருவது...
அன்பே இறை... அன்பே நிறை... அன்பே மறை... அன்பே அருட்பெரும் மெய்...
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|